இரண்டு நாள் பயணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 6 புதிய திட்டங்களை அறிவித்தார். mkstalin announce 6 new projects
நாகை அருகே புத்தூரில் திமுக மாவட்டச் செயலாளர் கவுதமன் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 3) பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அதன்பின், நாகை அவுரி திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அங்கு 105 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐடிஐ மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் ஸ்டாலின்.
அப்போது 6 புதிய திட்டங்களை அறிவித்தார். அவை,
1.அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில், ரூ.250 கோடி மதிப்பீட்டில், புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன்மூலம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதி இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
2. விழுந்தமாவடி, வானவன்மகாதேவி மற்றும் காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமங்களில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
3. தெற்குப் பொய்கைநல்லூரிலும் கோடியக்கரையிலேயும் தலா ரூ.8.50 கோடி மதிப்பீட்டில், பல்நோக்குப் பேரிடர் மையங்கள் கட்டப்படும்.
4. நாகப்பட்டினம் நகராட்சியின் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகராட்சி கட்டடம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
5. நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் வட்டங்களில் பல்வேறு வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களின் மதகுகளும், இயக்கு அணைகளும் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும்.
6. ஹஜ் புனித யாத்திரை செல்லும் மக்களுக்கு வசதியாக சென்னை நங்கநல்லூரில் ரூ.62 கோடி மதிப்பீட்டில் ஹஜ் பயண இல்லம் கட்டப்படும்” என்று தெரிவித்தார்.
ரூ.1782.48 கோடி கூட்டுக் குடிநீர் திட்டம்!
தொடர்ந்து தற்போது நாகையில் நடந்து வரும் பல கோடி மதிப்பிலான திட்டங்களையும் அறிவித்தார்.
அதன்படி, “நாகப்பட்டிணத்தில் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் 182 கி.மீ சாலை பணிகள் 252 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
நான்கு பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.1782.48 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் நடந்து வருகிறது.
வேதாரண்யம் ஒளவையார் விஸ்வநாத சாமி திருக்கோயில் திருப்பணிகள் ரூ.13.95 கோடி மதிப்பீட்டில் தொடங்க உள்ளது.
வேதாரண்யம் அரசு மருத்துவமனை ரூ.20 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆற்காட்டுதுறையில் ரூ.180 கோடி மற்றும் வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாமந்தான் பேட்டையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது” என ஸ்டாலின் தெரிவித்தார்.