டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாத நிலையில், பட்ஜெட்டை கண்டித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக இன்று (ஜூலை 27) காலை வீடியோ வெளியிட்டுள்ள அவர்,
“இந்நேரம் டெல்லியில் நடைபெற உள்ள பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்து இருக்க வேண்டிய நான் ஒன்றிய பாஜக அரசின்மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் முன் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு முற்போக்கு மற்றும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாக கிடைக்கிறது. அதனால்தான் திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.
ஆனால் நமக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஒரு அரசு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து பாடுபட வேண்டும். இப்படிதான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தலைநகரில் @NITIAayog கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்…#UnfairBudget4TN pic.twitter.com/L2rqtORNvD
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024
ஏன்… மோடி தலைமையிலான பாஜக அரசு வருவதற்கு முன்பாக எல்லா ஒன்றிய அரசுகளும் அப்படிதான் இருந்தன. ஆனால் இந்த அரசு அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது.
அதற்கு அடையாளம் தான் கடந்த 23ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பாஜகவை பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள்.
அப்படி புறக்கணித்த மாநில மக்களை பழிவாங்கும் வகையில் தான் ஒன்றிய நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் தாக்கல் செய்ய வேண்டிய பட்ஜெட்டை, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களை பழிவாங்குவதற்காக தயாரித்திருக்கிறார்கள்.
இது இந்திய அரசியலமைப்பின்படி அவர் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கே முரணானது.
ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்பு திட்டம் என்னவென்றால் அது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தான்.
ஆனால் 10 ஆண்டுகளாகியும் அந்தத் திட்டம் எந்த நிலைமையில் இருக்கிறது என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். ஒரு திட்டத்தையும் கொடுக்காமல் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக எப்படி தான் எதிர்பார்க்கிறதோ?.
மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அந்த கட்சிக்கு மக்கள் பெரும்பான்மையை கொடுக்கவில்லை. ஒரு சில மாநில கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பாஜகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் தங்களுடைய சறுக்கல்களுக்கு என்ன காரணம் என்பதை உணர்ந்து பாஜக திருந்தியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவை என்று பட்ஜெட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட நான் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தேன். இதன் மூலம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தேன்..
ஆனால் அதிலிருந்து ஒன்று கூட நிதி அமைச்சர் அறிவிக்கவில்லை. தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை.
இவ்வளவு ஆண்டுகளாக, ஒரு ஒப்புக்காவது திருக்குறளை சொல்லி பட்ஜெட்டை வாசிப்பார்கள். இந்த முறை திருவள்ளுவரும் கசந்து போய்விட்டார் போல…
இப்படிப்பட்ட பட்ஜெட்டில் திருக்குறள் இடம்பெறாதது ஒருவகை நிம்மதி தான்.
இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான நிதி. 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று காலத்திலேயே ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம்தான் இது.
தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் இணைந்து 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தார்கள்.
ஆனால் இந்த திட்டத்தை முடக்கிவிட்டாகள்.
ஒரு ரூபாய் கூட இந்த திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யாமல் வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாக காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டால் இது மாநில அரசின் திட்டம் என்று நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள்.
அப்படி என்றால் ரயில்வே துறையை மாநில அரசிடம் கொடுத்து விடுவார்களா. மதுரை கோவை நகரங்களில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பது பற்றி மூச்சு கூட விடவில்லை.
ஆனால் ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் நமது நகரங்களை விட பல சிறிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதியுதவியை வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்.
கடந்த ஆண்டு இரு முறை புயல்கள் தாக்கி, தமிழ்நாடு இயற்கை பேரிடரை சந்தித்தது. இதற்கு நிவாரணமாக 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கக்கூடிய 276 கோடி ரூபாய் தான் கொடுத்தார்கள். ஏமாற்றிவிட்டார்கள்.
இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தோம். ஆனால் தங்கள் பதவிக்கு கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை என்பதோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியை குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.
இது எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் என்னவென்றால் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையை முடக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியை கூட நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையை பயன்படுத்துவோம் என்று கையெழுத்து போட்டால் தான் நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு அடம் பிடிக்கிறது.
தங்களது கொள்கை திணிப்பையும் இந்தி திணிப்பையும் மட்டுமே செயல்படுத்தக்கூடிய அரசாக பாஜக அரசு உள்ளது.
பட்ஜெட் உரையில் இன்னொன்றை சொல்லி இருக்கிறார்கள். மாநிலத்தால் விதிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். மாநிலங்களோடு கலந்து ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர்.
ஏற்கனவே ஜிஎஸ்டி முறையை கொண்டு வந்து மாநிலத்தின் வரி விதிப்பு உரிமையை எடுத்துக் கொண்டார்கள்.
நான் கேட்பது என்னவென்றால், ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய 20,000 கோடி ரூபாய் இழப்பீட்டை இன்னும் அளிக்காத இந்த ஒன்றிய அரசுக்கு மாநிலங்களுடைய வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது.
கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரி சலுகை இன்றி தவித்துக் கொண்டிருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு வெறும் ரூ.17,500 சலுகை மட்டும் வழங்கி, அந்த சலுகையும் பெரும்பான்மையினருக்கு கிடைக்காமல் செய்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் வரி சலுகை கொடுத்து விட்டதாக ஒன்றிய அரசு மார்தட்டி கொண்டிருக்கிறது.
இது தமிழ்நாட்டை பழிவாங்கும் பட்ஜெட் மட்டும் கிடையாது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையும் பழிவாங்கக் கூடிய பட்ஜெட்.
நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள போடப்பட்ட பட்ஜெட்.
எனவே ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் குரலாய், இந்திய மக்களின் குரலாய் ஒன்று சொல்கிறேன். மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்… மேலும் மேலும் தோல்விகளை சந்திப்பீர்கள்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கொந்தளிப்பது போல மக்கள் மனதும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
டாப் 10 செய்திகள் : திமுக ஆர்ப்பாட்டம் முதல் மேட்டூர் அணை நிலவரம் வரை!