திருச்சி மாவட்டம் சிறுகனூரில், ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12-வது மாநில மாநாடு இன்று (மார்ச் 9) மிகப்பிரமாண்டமாகத் தொடங்கியது.
மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கழகக் கொடியினை ஏற்றி வைத்து பேசுகையில், “எல்லா சாலைகளும் திருச்சியை நோக்கி.. எல்லா திசைகளும் திருச்சியை நோக்கி.. எல்லா மக்களும் திருச்சியை நோக்கி.. திரும்பும் திசையெல்லாம் கருப்பு சிவப்பு.. திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள்..
திரும்பும் திசையெல்லாம் கலைஞரின் உடன்பிறப்புகள்..
தெற்கே குமரியில் இருந்து வடக்கே கும்முடிபூண்டி வரை
இந்த சிறுகனூரில் திரண்டு, சிறுகனூர் பெருகனூராக ஆகியுள்ளது.
எதிரிகளால் வீழ்த்த முடியாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் சேனை இங்கு திரண்டிருக்கிறது. இந்த சேனையின் தலைமைத் தொண்டனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைப்பை ஏற்று வந்துள்ள தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் எனது முதல் வணக்கம்.
நீங்கள் தான் காரணம்
கடந்த மூன்று மாதங்களாக நாம் நடத்தி வருவது மாநாடுகள்தான்.
உதயநிதி மண்டல வாரியாக நடத்திய இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள்,
கனிமொழி நடத்திய மகளிர் அணியின் “வெல்லும் தமிழ் பெண்கள்” மாநாடுகள்,
சென்னை, மதுரை, கோவை, திருப்பத்தூர் என மண்டல அளவில் நடத்தப்பட்ட பூத் நிர்வாகிகள் பயிற்சி மாநாடுகள் என்று லட்சக்கணக்கான நிர்வாகிகளை அழைத்து மாநாடுகள் நடத்தி, தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கினோம். அதற்கெல்லாம் உச்சமாக, இன்று 10 லட்சம் பேர் பங்கேற்றிருக்கும் பெரிதினும் பெரிய மாநாடாகத் திருச்சியில் இந்த மாநில மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. இங்கு நான் வந்தபோது, மாநாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலில் இருந்து மேடை வரை நீங்கள் கொடுத்த வரவேற்பு அடடா! அதைப் போல உங்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி என்னுடைய வயதைக் குறைத்துவிட்டது. அந்தத் தெம்போடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.
கடந்த வாரம் என்னுடைய பிறந்தநாளுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து தலைவர்கள் வாழ்த்து சொன்னபோது, “என்னுடைய வயதை நம்பவே முடியவில்லை” என்று சொன்னார்கள். இப்படி என்னை இளமையாக வைத்திருக்கக் காரணம் நீங்கள் தான், உங்கள் அன்பு தான். ஆன்மீக அன்பர்கள் சொல்வார்கள், “என்ன தவம் செய்தனை” என்று. அதுபோல, உங்களை எல்லாம் உடன்பிறப்புகளாகப் பெற நான் என்ன தவம் செய்தேனோ… கோடிக்கணக்கான உடன்பிறப்புகளோடு தலைமைத் தொண்டனாக என்னைத் தேர்ந்தெடுத்தது நீங்கள் தான். இந்தத் தாய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்கக் காரணமும் நீங்கள் தான். உங்களால்தான் நான் வளர்ந்தேன். உங்களால்தான் நான் உயர்ந்தேன். உங்களுக்காகத்தான் நான் வாழ்கிறேன்.
இந்தப் பாசப் பிணைப்பு, உடன்பிறப்புகளின் இந்த உயிர்த் துடிப்பு எல்லாம் இன்று நேற்று ஏற்பட்ட பந்தமா? திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலம் தொட்டு 75 ஆண்டுகளாகத் தொடர்கிற அன்பு இது. பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், அவர் வழிவந்திருக்கக்கூடிய நானும் இந்தப் பாச உணர்வைத்தான் உங்களிடத்தில் பார்க்கிறேன்.
கழக வரலாற்றில் எத்தனையோ திருப்புமுனைகளுக்கு அடித்தளமிட்ட தீரர்கள் கூட்டம்தான் திருச்சியில் இந்த மாநாட்டை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாடு எதற்கு என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஒரு கிரிக்கெட் மேட்ச்சில் ஃபர்ஸ்ட் பந்தில் இருந்து ரன் அடிப்பது முக்கியம்தான். அதே சமயம் கடைசி ஓவர்களில் ஆடி, லாஸ்ட் பால் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து ஜெயிப்பது என்பது கிராண்ட் ஃபினிஷிங். அப்படிப்பட்ட வெற்றியை 2026-ல் நாம் பெறுவதற்காகத்தான் இந்த மாநாடு.
நேருவின் ஸ்டைல்.
அதற்காகத்தான் இந்த மாபெரும் மாநில மாநாட்டை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் நேரு. அவருக்கு எனது சார்பிலும், உங்கள் அனைவரின் சார்பிலும் பாராட்டுகள். நேருவிடம் “மாநாடு” என்று சொல்லிவிட்டால் போதும், அவருக்குள் ஒரு புதிய எனர்ஜி வந்துவிடும். நாம் நினைப்பதை விட எப்போதும் பிரம்மாண்டமாகச் செய்வதுதான் நேருவின் ஸ்டைல். அதனால்தான் நான் எப்போதும் சொல்வேன் – “மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு”. இப்போதுகூட பாருங்கள், 200 ஏக்கரைத் தேர்ந்தெடுத்து, 200 இடங்களில் “வெல்ல வேண்டும்” என்று குறிப்பாகத் தொண்டர்களுக்குச் சொல்லிவிட்டார். நமக்கான கிரவுண்டை ரெடி செய்து கொடுத்துவிட்டார். இனி நாம் தொடர்ந்து அடித்து ஆட வேண்டும். இந்த மாபெரும் மாநாட்டிற்காக அயராது உழைத்த அவருக்கும், அவருக்குத் துணை நின்ற ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகள்.
இன்று நாம் முழங்கும் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பது தனிப்பட்ட ஸ்டாலினுக்காக மட்டுமல்ல. நம்மையெல்லாம் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தொடரட்டும் என்பதுதான் இதன் உண்மையான பொருள்.
திருச்சியில் ஏன் மாநாடு
திருச்சி தமிழகத்தின் மையப் பகுதி மட்டுமல்ல, இதுதான் கழகத்தின் மாநாட்டுப் பூமி. இன்று நாம் நடத்திக் கொண்டிருப்பது 12-வது மாநில மாநாடு. இந்த 12 மாநில மாநாடுகளில் ஏழு மாநாடுகள் திருச்சியில்தான் நடந்துள்ளன:
1956 – இரண்டாவது மாநில மாநாடு
1990 – ஆறாவது மாநில மாநாடு
1996 – எட்டாவது மாநில மாநாடு
2006 – ஒன்பதாவது மாநில மாநாடு
2014 – பத்தாவது மாநில மாநாடு
2021 – பதினோராவது மாநில மாநாடு
இப்போது 2026 – பன்னிரண்டாவது மாநில மாநாடு
திருச்சி என்றாலே மகத்தான வெற்றி.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மாளிகை கட்டி வாழ்ந்தது இதே திருச்சியில்தான். தனித்தனி இயக்கம் நடத்திய போதும் கொள்கையால் ஒருபோதும் பிரியாத தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வெவ்வேறு வழக்குகளில் ஒரே சிறையில் இருந்தது இதே திருச்சியில்தான். ரயில்வே சந்திப்பின் ஒரு முனையில் தந்தை பெரியாரும், மறுமுனையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தை நடத்தினதும் இதே திருச்சியில்தான். கல்லக்குடி போராட்டத்தில் கைதான தலைவர் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டதும் இதே திருச்சியில்தான்.
அப்போது 1953 ல் கைக்குழந்தையாக இருந்த என்னை என்னுடைய அன்னை தயாளு அம்மையார் கொண்டு வந்து தலைவர் கலைஞர்கிட்ட காட்டினதும் இதே திருச்சியிலிருக்கக்கூடிய சிறையில்தான்.
இது மட்டுமா? தலைவர் கலைஞரை முதல் முதல்ல சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய குளித்தலை தொகுதி இருந்ததும் இதே திருச்சியில்தான். பேரறிஞர் அண்ணாவுடைய மறைவுக்குப் பின்னால் தலைவர் கலைஞர் நமக்கு ஐம்பெரும் முழக்கங்களை தந்ததும் இதே திருச்சியில்தான். அதனால்தான் சொல்றேன் திருச்சி என்றாலே திருப்பம். திருச்சி என்றாலே எழுச்சி. திருச்சி என்றாலே உணர்ச்சி. திருச்சி என்றாலே மகத்தான வெற்றி.
அப்படிப்பட்ட திருச்சியில் இன்றைக்கு ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றத்தான் நாம் கூடியிருக்கிறோம். 1956 ல் இதே திருச்சி மாநாட்டில்தான் லட்சக்கணக்கான தொண்டர்கள் வாக்களிக்க கழகம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்தார்கள். அது நடந்து 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இந்தத் தருணத்தில் தந்தை பெரியாரால் கொள்கை உரம் பெற்று, பேரறிஞர் அண்ணா அவர்களால் பக்குவப்படுத்தப்பட்டு, தலைவர் கலைஞரால் வழிநடத்தப்பட்ட நாமதான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டுல எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே முதல் மாநில கட்சியாக நம்முடைய கழகத்தை ஆட்சியில் அமர்த்தினார் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா . அவரது வழியில் ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் நம்முடைய உயர் நிகர் தலைவர் கலைஞர். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து உங்களில் ஒருவரான என்னுடைய தலைமையில 6 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தோம். இப்போ 7 ஆவது முறை மட்டுமல்ல, இனி எந்நாளும் கழகம் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற சூழ்நிலைக்குத்தான் இங்க கூடியிருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
