தாயகம் திரும்பிய உக்ரைன் மாணவர்களின் எதிர்காலம்? பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அரசியல்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( ஜூலை 24) கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட போரின் காரணமாக சுமார் 2,000 தமிழக மாணவர்கள் உட்பட சுமார் 19,000 இந்திய மாணவர்கள் அவசர அவசரமாக மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர்.

நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவில் தொடர பிரதமர் அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிட வேண்டுமென்றும், உக்ரைனில் தங்களது படிப்பு தடைபட்ட நிலையில், அந்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காண வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 7 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் மத்திய அரசும் மௌனம் காத்து வந்த நிலையில், ஜூலை 22 ஆம் தேதி நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது மக்களவை உறுப்பினர் கவிதா மலோத் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் மாநில அரசுகளின் முடிவுக்கு ஏன் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை? நாடு திரும்பிய மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் இருக்கிறதா? என்று கேள்விகள் எழுப்பினார்.

இதற்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், “இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை மாநில மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர விதிகள் ஏதும் இல்லை. மேலும் 2019 விதியின்படி வெளிநாட்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யவோ அல்லது இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிப்பை தொடரவோ இடமில்லை” எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( ஜூலை 24) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “உக்ரைனில் போர் தொடங்கியது முதல் இருந்து 2000 தமிழக மருத்துவ மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் படிப்பை தொடர அனுமதி ஏதும் அளிக்கப்படவில்லை என மக்களவையில் அளிக்கப்பட்ட பதில் மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மருத்துவ மாணவர்களின் கல்வியை பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஒன்றிய அரசின் முடிவால் மருத்துவ மாணவர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

க.சீனிவாசன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.