ADVERTISEMENT

ஆளுநருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழு விவரம்!

Published On:

| By Selvam

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் விசாரணை நியாயமாக நடைபெறாது என்று அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதத்தையும் அவர் எழுதியிருந்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்துதலின்படி அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பினார்.

ADVERTISEMENT
mk stalin writes letter to governor ravi

இந்தநிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு முதல்வருக்கு மட்டுமே தனி அதிகாரம் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “எனக்கு 29.06.2023 தேதியிட்டு, செந்தில்‌ பாலாஜியை எனது அமைச்சரவையில்‌ இருந்து டிஸ்மிஸ்‌ செய்வதாக தெரிவிக்கப்பட்ட உங்களது கடிதங்களில்‌ ஒன்று இரவு 7.௦௦ மணிக்கு கிடைத்தது. அதே நாளில்‌ இரவு 11.45 மணிக்கு தற்காலிகமாக அதை நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மற்றொரு கடிதமும்‌ எனக்கு கிடைத்தது.

ADVERTISEMENT

உங்கள்‌ கடிதங்கள்‌ முற்றிலும்‌ புறக்கணிக்கப்பட வேண்டியவை என்றாலும்‌, இந்தப்‌ பிரச்சினையில்‌ உள்ளடங்கிய உண்மைகள்‌ மற்றும்‌ சட்டம்‌ ஆகிய இரண்டையும்‌ தெளிவுபடுத்துவதற்காக இக்கடிதத்தை நான்‌ உங்களுக்கு எழுதுகிறேன்‌.

‌முதலாவதாக, அந்த இரண்டு கடிதங்களில்‌ உள்‌ளவை குறித்து முதலமைச்சர்‌ மற்றும்‌ அமைச்சரவை சார்பாக எவ்வித உதவியும்‌, ஆலோசனையும்‌ கேட்கப்‌படவில்லை அல்லது அளிக்கப்படவில்லை என்பதை பதிவு செய்கிறேன்‌.

ADVERTISEMENT

இரண்டாவதாக, அரசமைப்பு எந்‌திரத்தின்‌ சீர்குலைவு, மறைமுக அச்சுறுத்தல்‌ போன்ற வலுவான வார்த்தைகளைக்‌ குறிப்பிட்ட முதல்‌ கடிதத்தை நீங்கள்‌ வெளியிட்ட சில மணிநேரங்களில்‌, அரசு தலைமை வழக்குரைஞரின்‌ கருத்தைக்‌ கேட்பதற்காக அதைத்‌ திரும்பப்‌ பெற்றீர்கள்‌.

இது போன்ற முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள்‌ தக்க சட்ட ஆலோசனைகளைப்‌ பெறவில்லை என்பதையே அது காட்டுகிறது. உள்துறை அமைச்சரின்‌ தலையீடு இந்த விவகாரத்தில்‌ சட்டக்‌ கருத்தைப்‌ பெற உங்களை வழிநடத்தியது என்ற நிலை, நீங்கள்‌ இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தை கவனத்தில்‌ கொள்ளாமல்‌ அவசரமாக செயல்பட்டுள்ளீர்கள்‌ என்பதையே காட்டுகிறது.

நான்‌, எனது அமைச்சரவை மற்றும்‌ எங்‌களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள்‌ அனைவருமே இறையாண்மையின்‌ இறுதி நிலையான மக்களின்‌ நம்பிக்கையை பெற்றிருக்கிறோம்‌. எங்களுக்குப்‌ பின்னால்‌ உறுதியாக உள்ள மாநில மக்களின்‌ நம்பிக்‌கைதான்‌ எங்களுடைய வலுவான சொத்தாக உள்ளது.

எனவே, மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகள்‌ விஷயத்தை கையாளும்‌ போது கவர்னர்‌ போன்ற உயர்‌ அரசமைப்பு அதிகாரிகள்‌ கண்ணியத்‌துடன்‌ செயல்பட வேண்டும்‌.

அதை விடுத்து, அரசியலமைப்பு எந்திரத்தின்‌ சீர்‌ குலைவு என்பது போன்ற ஆதாரமற்ற அச்சுறுத்தல்களை வெளிக்காட்ட வேண்‌டியதில்லை.

mk stalin writes letter to governor ravi

இவற்றைக்‌ கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு அரசின்‌ அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜியின்‌ நிலைமை குறித்து உங்களுடைய குறிப்பிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கிறேன்‌.

எனது ௦1.௦6.2023 தேதியிட்ட கடிதத்தை நீங்கள்‌ படித்திருந்தால்‌, விசாரணையை எதிர்கொள்ளும்‌ ஒரு நபருக்கும்‌, குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபருக்கும், நீதிமன்றத்தால்‌ குற்றவாளி என அறிவிக்கப்‌பட்ட ஒரு நபருக்கும்‌ உள்ள வித்தியாசத்தை நான்‌ தெளிவாகக்‌ கூறியிருப்பதை நீங்கள்‌ கவனித்திருப்பீர்கள்‌.

லில்லி தாமஸ்‌ மற்றும்‌ யூனியன்‌ ஆப்‌ இந்தியா, (2013) பிரிவு 7 உட்பிரிவு 653 என்ற வழக்கில்‌, இந்‌திய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மூன்றாம்‌ நிலை வழக்‌குகளில்‌ மட்டுமே ஒருவர்‌ அமைச்சர்‌ அல்லது சட்டமன்ற உறுப்பினர்‌ பதவியில்‌ இருந்து தகுதி நீக்கம்‌ செய்யப்படுகிறார்‌.

ஒய்‌. பாலாஜி மற்றும்‌ கார்த்திக்‌ தேசரி & ஏ.என்‌.ஆர்‌ என்ற வழக்குக்கான தீர்ப்பில்‌ குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களை மட்டுமே நீங்கள்‌ சார்ந்துள்ள நிலையில்‌, நான்‌ தங்களது கனிவான பார்வைக்காக லில்லி தாமஸ்‌ சம்பந்தமான வழக்கில்‌ அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்மாதிரியாக குறிப்பிடுகிறேன்‌.

“38 சட்டப்‌ பிரிவு 8இன்‌ துணைப்‌ பிரிவுகள்‌ (1) (2) மற்றும்‌ (3) இன்‌ கீழ்‌, தகுதி நீக்கம்‌ என்பது துணைப்‌பிரிவுகளில்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும்‌ குற்றங்களுக்கு அதில்‌ குறிப்பிட்டுள்ள கால அவகாசங்களின்‌படி தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இருப்பினும்‌, சட்டத்தின்‌ 8-வது பிரிவின்‌ துணைப்பிரிவுகள்‌ (1), (2) மற்றும்‌ (5) இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும்‌ குற்றங்களுக்காகவும்‌, அத்தகைய தண்‌டனை மற்றும்‌ அல்லது இந்தத்‌ தீர்ப்பு அறிவிக்கப்‌பட்ட பிறகு, சட்டத்தின்‌ 8வது பிரிவின்‌ துணைப்‌ பிரிவுகள்‌ (1), (2) மற்றும்‌ (3) இல்‌ குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மை மூலம்‌ தண்டனை அளிக்கப்படுகிறது.

அந்த நிலையில்‌ நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்‌ மீதான வழக்கில்‌ சட்டப்‌ பிரிவு 8இன்‌ துணைப்பிரிவு (4) மூலம்‌ அவர்கள்‌ காப்பாற்றப்‌படமாட்டார்‌ என்ற தீர்ப்பு அளிக்கப்பட்டாலும்‌, அதற்கு எதிராக சம்பந்தப்பட்டவர்‌ தண்டனை மற்றும்‌ அல்லது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு அல்லது மறுசீராய்வு மனு தாக்கல்‌ அரசியலமைப்புச்‌ சட்டப்படி செய்யலாம்‌ என்று அறிவிக்கப்பட்டது”

குற்றம்‌ நிரூபிக்கப்பட்ட பின்னரே தகுதியிழப்பு செய்யப்படும்‌ என்று மேலே உள்ள பத்தி சந்தேகத்‌திற்கு இடமின்றி கூறுகிறது. செந்தில்‌ பாலாஜி, உங்கள்‌ கடிதத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ளபடி, அமலாக்க இயக்குநரகத்தால்‌ விசாரணைக்காக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்‌. இது வரை அவர்‌ மீது குற்‌றப்பத்திரிகை கூட தாக்கல்‌ செய்யப்படவில்லை.

இப்போது, கிரிமினல்‌ குற்றச்சாட்டுகளை எதிர்‌கொள்ளும்‌ ஒருவர்‌ அமைச்சரவையில்‌ தொடர்வது குறித்த கேள்வி, மனோஜ்‌ நருலா மற்றும்‌ இந்திய அரசு (2014) 9 SCC 1 இடையிலான வழக்கில்‌ இந்திய உச்ச நீதிமன்றத்தின்‌ அரசியலமைப்பு பெஞ்ச்‌ அளித்த தீர்ப்‌பின்‌ படி இனி எழ வாய்ப்பில்லை. தீர்ப்பின்‌ தொடர்‌புடைய பகுதியும்‌ உங்களது கவனத்துக்காக கீழே தரப்பட்டுள்ளது.‌

10௦. சட்டப்பிரிவு 75(1) ஐ விளக்கும்‌ போது, நிச்சயமாக தகுதியிழப்பை சேர்க்க முடியாது. இருப்பினும்‌, அமைச்சர்கள்‌ குழுவில்‌ ஒரு அமைச்சரின்‌ பங்கு மற்றும்‌ அவர்‌ ஏற்ற சட்டப்படியான உறுதி மொழியின்‌ புனிதத்‌தைக்‌ கருத்தில்‌ கொண்டு, பிரதமர்‌, அவர்‌ மீது வைத்திருக்கும்‌ நம்பிக்கைக்கு இணங்கும்‌ அதே வேளையில்‌, கொடுமையான அல்‌லது கடுமையான கிரிமினல்‌ குற்‌றங்கள்‌ அல்லது ஊழல்‌ குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குற்‌றம்‌ சாட்டப்பட்ட குற்றவியல்‌ பின்‌புலங்களைக்‌ கொண்ட ஒருவரை அமைச்சராக தேர்வு செய்யக்‌ கூடாது என்று அவர்‌ தீர்மானம்‌ செய்வார்‌. இதைத்தான்‌ அரசியல்‌ சாசனம்‌ அவரிடம்‌ பரிந்துரைக்‌கிறது.

அதுவே பிரதமரிடமிருந்து அரசியலமைப்பு ரீதியாக எதிர்பார்க்க முடியும்‌. மற்றவற்றை பிரதமரின் நிலைப்பாட்டுக்கேற்ப விடப்பட வேண்டும்‌. நாங்கள்‌ அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இந்த விஷயத்தில்‌ எதுவும்‌ கூறவில்லை.

101. இந்த நிலையில்‌, இந்‌திய அரசியலமைப்புச்‌ சட்டத்‌தின்‌ 164 (1) வது பிரிவில் பயன்‌படுத்தப்பட்டுள்ள மேற்கண்ட மொழியின்‌ அடிப்படையில்‌, பிரதமருக்கு குறிப்பிடப்பட்டுள்ளவை முற்றிலும்‌ முதலமைச்‌சருக்கும் ‌பொருந்தும்‌ என்பதை, நாங்கள்‌ இங்கே தெரிவித்தே ஆக வேண்டும்‌.

எனவே, உச்ச நீதிமன்றத்தின்‌ அரசியலமைப்பு அமர்வு, ஒருவர்‌ தனது அமைச்‌சரவையில்‌ அமைச்சராக நீடிக்‌கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதை பிரதமர்‌ மற்றும்‌ முதலமைச்சரின்‌ நிலைப்பாட்டுக்கே விடப்பட்டது.

எனவே, ஒரு விசாரணை முகமை ஒருவருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கிய காரணத்தால்‌, அவர்‌ அமைச்சராகத்‌ தொடர சட்டரீதியாக பொருத்தமற்ற நபராக ஆக மாட்டார்‌.

உச்ச நீதிமன்றத்தின்‌ 16.05.2023 தேதியிட்ட தீர்ப்பில்‌ ஒய்‌.பாலாஜி மற்‌றும்‌ கார்த்திக்‌ தேசரி, SLP (Crl.) எண்‌.1277912781 2022 இன்படி, விசாரணையை வழிநடத்‌தும்‌ தீர்ப்பில்‌ நீதிமன்றங்களால்‌ செய்யப்பட்ட ஆய்வுகளின்‌ ஆதார மதிப்பு பற்றி ஏற்கனவே விரிவாக நான் விளக்கியுள்ளேன்‌. அந்த வகையில்‌ ஒரு அமைச்சரை தகுதி நீக்‌கம்‌ செய்ய, அவர்‌ மீதான குற்றச்‌ சாட்டுகளை மட்டுமே வைத்து முடிவு செய்வது என்பது பொருத்‌தமற்ற முடிவாகும்‌ .

mk stalin writes letter to governor ravi

வருமான வரித்துறை அதிகாரிகள்‌ மீதான தாக்குதல்‌ மற்றும்‌ இதர தொடர்புடைய சம்பவங்கள்‌ தொடர்பாக, வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்‌களுடைய குற்றச்சாட்டுகளின்படி விசாரணை அதிகாரிகளால்‌ நீதிமன்ற உத்தரவுப்படி சட்டத்தை நிலைநாட்டும்‌ பணியில்‌ அவர்களுக்கு இடையூறு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, இந்த வழக்கின்‌ விசாரணையில்‌ செந்தில் பாலாஜி தலையிடக்கூடும்‌ என்ற உங்கள்‌ அச்சம்‌ அடிப்படை மற்றும்‌ ஆதாரம்‌ இல்லாதது.

மேலும்‌, செந்தில் பாலாஜி குறித்து ஐந்து பக்க கடிதம்‌ எழுதியுள்ள நிலையில்‌, அதிமுக அரசின்‌ முன்னாள்‌ அமைச்சர்கள்‌ மற்‌றும்‌ முன்னாள்‌ அரசு ஊழியர்கள்‌ மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்‌ என்ற எனது அரசின்‌ கோரிக்கைக்கு, தொடர்ச்‌சியாக, மர்மமான மவுனம்‌ காத்து வருகிறீர்கள்‌.

அப்படிப்பட்ட எங்கள் கோரிக்கைகள் தங்கள்‌ அலுவலகத்தில்‌ மலிந்து கிடைக்கின்றன என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள்‌ கடமை. குட்கா வழக்கில்‌ சிபிஐ வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரியும்‌ உங்களால்‌ எவ்வித நடவடிக்கையும்‌ எடுக்கப்படவில்லை. உண்மையில்‌, இவ்வாறான செயல்கள்‌ உங்களது ஆரோக்‌கியமற்ற ஒரு பக்க சார்பு என்பது மட்டுமன்றி, இந்த இரட்டை நிலைகளுக்குப்‌ பின்னால்‌ உள்ள உங்கள்‌ உண்மையான நோக்கத்‌தையும்‌ காட்டுவதாக உள்ளன.

வரம்பு கடந்த வார்த்தைப்‌ பிரயோகம்‌ குறித்த உங்கள்‌ குற்றச்சாட்டுகளுக்கு எங்கள்‌ பதில்‌ என்னவென்றால்‌, தமிழ்‌நாடு அரசு எப்போதும்‌ உங்களுக்‌கும்‌ உங்கள்‌ அலுவலகத்துக்கும்‌ உரிய மதிப்பையும்‌, மரியாதையும்‌ அளித்து வருகிறது என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. எங்களது தமிழ்‌ கலாச்சாரத்திற்கு ஏற்ப நாங்கள்‌ எப்போதும்‌ உங்களிடம்‌ இனிமையாகவும்‌, மரியாதையாகவும்‌, மதிப்புடனும்‌ நடந்து கொண்‌டிருக்கிறோம்‌. இருப்பினும்‌, அதனால்‌ நீங்கள்‌ அளித்த அரசியலமைப்பிற்கு முரணான உத்தரவுகளுக்கு நாங்கள்‌ கட்டுப்‌பட வேண்டும்‌ என்பது அதன்‌ அர்த்தமல்ல.

அமைச்சரை நீக்குவது தொடர்‌பான அரசியலமைப்பு விதிகளை மீண்டும்‌ ஒருமுறை இங்கே வலியுறுத்துகிறேன்‌. சட்டப்பிரிவு 164 (1)ன்‌ கீழ்‌, முதலமைச்சரின்‌ வழிகாட்டுதலின்‌ பேரில்தான்‌ ஆளுநர்‌ என்பவர்‌ அமைச்சர்கள்‌ நியமனத்தை செய்கிறார்‌ அல்லது நீக்குகிறார்‌. அந்த வகையில்‌ அமைச்சரவையில்‌ யார்‌ இடம்‌ பெற வேண்டும்‌, யார்‌ இடம்‌ பெறக்கூடாது என்பதை முடிவு செய்யும்‌ அதிகாரம்‌ ஆளுநருக்கு இல்லை. அது முதலமைச்சரின்‌ தனி உரிமை ஆகும்‌. அரசமைப்பு சட்டப்‌ பிரிவு 164(2)ன்‌ கீழ்‌ தேர்ந்‌தெடுக்கப்பட்ட முதலமைச்சர்‌ மற்‌றும்‌ அவரது அமைச்சரவைக்கு சட்டப்‌ பேரவைக்கு மட்டுமே அமைச்சர்களை நியமிக்கும்‌ பொறுப்பு உள்ளது.

எனவே, செந்தில்‌ பாலாஜியை நீங்கள்‌ நீக்கம்‌ செய்த நிலையில்‌ எனது அமைச்சர்களை நீக்க உங்களுக்கு எவ்விதமான அதிகாரமும்‌ இல்லை என்பதை மீண்டும்‌ வலியுறுத்துகிறேன்‌. தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்‌சருக்கு மட்டுமே அது தனி உரிமையாக உள்ளது.

எனது ஆலோசனையின்றி எனது அமைச்சரை பதவி நீக்கம்‌ செய்தது அரசியலமைப்புச்‌ சட்டத்‌திற்கு புறம்பானது மற்றும்‌ சட்டத்‌திலும்‌ இல்லாதது என்பதால்‌ அது புறக்கணிக்கப்பட்டதாக உள்ளது. இவை யாவும்‌ தங்களது மேலான பதிவு மற்றும்‌ தகவலுக்‌காக தெரிவிக்கப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: கொள்ளு – பார்லி கஞ்சி

30 நாட்களை கடந்த போர் தொழில் – வெற்றி விழா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share