திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழனி மாவட்டத்தை தனியாக பிரித்து புதிய பழனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலிலேயே பழனி தனி மாவட்டம் உருவாக்குவோம் என்று திமுகவினர் பரப்புரைகளில் வாக்குறுதிகள் வழங்கினர். இந்நிலையில் இப்போது இந்த கோரிக்கை, திமுகவினர் மத்தியிலேயே வேகமாக வலுப் பெற்று வருகிறது.
தமிழ்நாடு அளவில் நிலப் பரப்பில் பெரிய மாவட்டமாக விழுப்புரம் இருந்து வந்தது. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, இப்போது மாநிலத்திலேயே பரப்பளவில் பெரிய மாவட்டமாக இருப்பது திண்டுக்கல்தான்.
திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கின்றன. மொத்த மக்கள் தொகை 35 லட்சமாக உள்ளது.
பழனியில் இருந்து மாவட்டத் தலைநகரமான திண்டுக்கல் செல்வதற்கு 60 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே பழனி கல்வி மாவட்டமாக உள்ளது, பழனியிலுள்ள அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி, ஒட்டன் சத்திரம் ஆகிய இரு தொகுதிகள், திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துகுளம், உடுமலை ஆகிய இரு தொகுதிகள் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளை சேர்த்து புதிய பழனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று மீண்டும் இப்போது கோரிக்கைகள் வலுத்துள்ளன.
பழனியில் அனைத்துலக முருக பக்தர்கள் மாநாடு வரும் 24, 25 தேதிகளில் தமிழக இந்து சமய அறநிலையத் துறையால் நடைபெற இருக்கிறது. அண்மையில் இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சக்கரபாணியும், அமைச்சர் சேகர்பாபுவும் பார்வையிட்டனர்.
முருக பக்தர்கள் மாநாட்டுக்காக பழனி தயாராகி வருகிற நிலையில்…, வருகிற ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில், பழனி புதிய மாவட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டால் அது பழனி மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து முருக பக்தர்களுக்கும் பெரும் பரிசாக இருக்கும் என்று முதல்வர் அலுவலகத்துக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன.
இதுகுறித்து ஆளுங்கட்சியான திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது,
“2021 சட்டமன்றத் தேர்தலிலேயே பழனி தனி மாவட்டம் என்ற வாக்குறுதியை அளித்தோம். அடுத்து வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களை சந்திக்கும்போது நிச்சயம் இந்த கேள்வியை எதிர்க்கட்சிகளும் மக்களும் கேட்பார்கள்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற சுதந்திர தின உரையில் பழனி மாவட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிட்டால், அடுத்தடுத்த நிர்வாக ரீதியான பணிகளை முடுக்கிவிட முடியும். புதிய பழனி மாவட்டத்துக்கான வரையறை பணிகளுக்கான தனி அலுவலர் நியமனம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை செய்தால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் பழனி மாவட்டம் அறிவித்துவிட்டோம் என்ற தெம்போடு மக்களை எதிர்கொள்ள முடியும்.
இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணியும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பழனி புதிய மாவட்டம் உருவாவது பற்றி முருகன் அருள்பாலித்து முதல்வர் முடிவு செய்ய வேண்டும்” என்கிறார்கள்.
பழனி மாவட்டத்தோடு கும்பகோணம், பொள்ளாச்சி, ஆரணி, விருத்தாசலம், கோபிச்செட்டிபாளையம், கோவில்பட்டி என வேறு சில மாவட்ட கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் தொடர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
வேற லெவல் படம்… ‘டிமான்ட்டி காலனி 2’ பார்த்து மிரண்டுபோன விநியோகஸ்தர்!
வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!