அருந்ததியர் சமுதாயத்திற்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 1) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2009-ஆம் ஆண்டு பட்டியல், பழங்குடியினருக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்க அப்போதைய முதல்வர் கலைஞர் உத்தரவிட்டார். ஆனால், தமிழ்நாடு அரசு வழங்கிய அனுமதி செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டைப் போல பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர். நீதிபதி பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூகநீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம்.
இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவு… ரெயின் கோட்டுடன் களத்தில் இறங்கிய ராகுல், பிரியங்கா
Paris Olympics 2024 : இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்… ஸ்வப்னில் குசலே சாதனை!