அதிகப்பிரசங்கித்தனம்… வேல்முருகனை எச்சரித்த ஸ்டாலின்… சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Selvam

சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 20) சபாநாயகர் அப்பாவு இருக்கை முன்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கோஷமிட்டதால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. stalin warned velmurugan assembly

அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு, தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்பது குறித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பேசிய கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த வேல்முருகன், சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக வந்து கோஷம் எழுப்பினார்.

அப்போது சபாநாயகர், “வேல்முருகன் தனது இருக்கையை விட்டு வெளியே வந்து இப்படி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. நீங்கள் அமைச்சர்களை கைநீட்டி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது பேரவை விதிகளுக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “வேல்முருகன் நல்ல கருத்துக்களை பேசக்கூடியவர். அவர் பேசும்போது அமைதியாக அமர்ந்து கேட்பேன். ஆனால், சில நேரங்களில் அவர் அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவது வேதனை அளிக்கிறது. இடத்தை விட்டு வெளியே வந்து கூச்சல் போடுவது முறையல்ல. வேல்முருகன் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் ஸ்டாலின் இத்தனை ஆண்டுகளில் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் இப்படி பேசியதில்லை. இனிமேல் இதுபோல் நீங்கள் நடந்து கொள்ளக்கூடாது. தனது தவறை வேல்முருகன் திருத்திக்கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன்,

“தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கருத்தை சட்டமன்றத்தில் நான் பேசினேன். ஆனால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமலேயே அதிமுக உறுப்பினர்களும், அமைச்சர் சேகர்பாபுவும் எழுந்து கத்துகிறார்கள்.

நான் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதனால் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்பாக சென்று எப்படி எம்.பி-க்கள் வாய்ப்பு கேட்கிறார்களோ, அதேபோல நானும் எனது இருக்கையில் இருந்து எழுந்து எனது கருத்தை பதிவு செய்ய நேரம் கொடுங்கள் என்று சபாநாயகர் முன்பாக சென்று கேட்டேன். இது தவறா?

இதற்கு சேகர்பாபு, ‘நீ எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி பேசுகிறாய்’ என்று என்னை ஒருமையில் பேசுகிறார்.

நான் இருக்கைக்கு வந்து அமர்ந்தபிறகு சேகர்பாபு தவறான தகவலை சொன்னதால், அதை முதல்வர் ஸ்டாலின் தவறாக புரிந்து கொண்டுள்ளார். வேல்முருகன் இந்த அவையில் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார் என்று சேகர்பாபு சொன்ன அதே வார்த்தையை முதல்வர் ஸ்டாலின் திரும்பி சொன்னது எனக்கு வருத்தமளிக்கிறது.

பயிற்று மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கலைஞர் ஆட்சியில் போட்ட அரசாணையை அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த கால அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு நெருக்கமாக இருக்கிறவர், அதிமுகவை காப்பாற்றுவதற்காக என்னை விமர்சனம் செய்கிறார். தமிழுக்கு ஒரு கேடு என்று சொன்னால் என் உயிரை தியாகம் செய்வேன்.

ஆளுநர் உரையின் போது கோஷம் எழுப்ப அனுமதித்தீர்கள். அதிமுக உறுப்பினர்கள் தினமும் பேரவை தலைவர் முன்பாக சென்று முழக்கமிடுகிறார்கள். ஆனால், தமிழுக்காக கேள்வி கேட்டால் மரபை மீறிய செயலா?” என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார். stalin warned velmurugan assembly

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share