தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்தை 7 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33,181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு 311 பேர் உயிரிழந்துள்ளனர். பரவல் அதிகரிக்க அதிகரிக்க, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்துகொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கான ஒதுக்கீடு குறைவாக இருப்பதால், ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 16) ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வழங்கி வரும் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கையினை ஏற்று நாளொன்றுக்கு 7,000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டெசிவிர் மருந்தினை தற்போது 20,000 ஆக உயர்த்தி வழங்கியமைக்காக தன் நன்றியினை முதல்வர் தெரிவித்துள்ளார். கொடிய கொரோனா தொற்றினை எதிர்த்து போராடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இனி அந்தந்த மருத்துவமனை மூலமாகவே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும். மருத்துவமனையின் பிரதிநிதிகளே விற்பனை மையத்துக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவித்தார்.
**-வினிதா**