நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 27) நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச வீரர்கள் பங்கேற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பிரம்மாண்டமாக நடத்தியது. இதன் துவக்கவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.
கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.
அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற அவர், மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், ”கேலோ இந்தியா 2023 போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றிகள்.
இந்த விளையாட்டுகள் அனைத்து இந்திய மாநிலங்களில் இருந்து வரும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளமாக இருக்கும்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அனைவரும் கண்டது போல், தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தகுந்த கம்பீரத்துடன் நடத்தி, தமிழ் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
