முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அங்குள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தினார்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில்துறை குழுமங்கள், முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
இதன் விளைவாக, ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீடு, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு, எடிபன் நிறுவனம் ரூ.540 கோடி முதலீடுகள் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தனது பயணத்தை முடித்துவிட்டு இன்று (பிப்ரவரி 6) ஸ்பெயினிலிருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் புறப்படுகிறார். நாளை (பிப்ரவரி 7) காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அவருக்கு விமான நிலையத்தில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்க திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். ஸ்பெயினில் இருந்தாலும் நிர்வாகத்தையும் , கட்சியையும் தொடர்ந்து கவனித்து வந்தார்.
ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக பிப்ரவரி 4-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னை திரும்பியதும், பட்ஜெட் வேலைகளிலும், தேர்தல் வேலைகளிலும் தீவிரம் காட்ட உள்ளார். அதனை தொடர்ந்து திங்கட்கிழமை (பிப்ரவரி 12) முதல் விருப்பமனு வாங்குவதையும் அறிவிக்க இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சைதை துரைசாமி மகன் எங்கே? – 3ஆவது நாளாக மீட்புப் பணி தீவிரம்!