டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு: ஸ்டாலின் எடுத்த சீக்ரெட் டேட்டா!!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அறிவாலயத்தில் நடந்து வரும் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டக் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்ட பிறகு அரசு நிகழ்ச்சிகள், அரசுப் பணிகள் அதிகமாகிவிட்டன. அதேநேரம் கட்சிப் பணிகளையும் பழைய வேகத்தோடு தொடர்கிறார்.

அறிவாலயத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடங்கியிருக்கிறார் உதயநிதி. சார்பு அணி நிர்வாகிகளுடனான சந்திப்பில் ஐடிவிங், விளையாட்டு மேம்பாட்டு அணி,  சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகளுடனான ஆலோசனையை ஒருங்கிணைப்புக் குழுவினர் மேற்கொண்டனர்.

வெளிப்படையாக இப்படி சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகள் நடந்துகொண்டிருக்கும் அதேநேரம்… ரகசியமாக திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றி செய்யப்பட்ட ஆய்வின் முதல்  அறிக்கை முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் உத்தி வகுக்கும் நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சபரீசனின்  ‘பென்’ நிறுவனம் கடந்த சில மாதங்களாக ரகசிய ஆய்வு ஒன்றை தமிழ்நாடு முழுதும் நடத்தியிருக்கிறது. அதுவும் திமுக எம்.எல்.ஏ.க்களைப் பற்றி மட்டும்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த 2021  சட்டமன்றத் தேர்தலில்  திமுக சார்பில் 125 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். எட்டு பேர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சியினர். ஆக 133 திமுக எம்.எல்.ஏ.க்கள்.

இவர்களில்  திமுக எம்.எல்.ஏ.க்களைப் பற்றி அவர்களின் தொகுதி ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதாவது சட்டமன்ற உறுப்பினராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக  எப்படி செயல்பட்டிருக்கிறார்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செல்கிறார்கள்?  மக்களை ரெகுலராக சந்திக்கிறார்களா?

சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை எவ்வாறு செலவழித்திருக்கிறார்கள்?  மக்களுடனும் கட்சி நிர்வாகிகளுடனும் இணக்கமாக இருக்கிறார்களா? தொகுதிக்குள் நன்றி சொல்லச் சென்றார்களா?

அதன் பின் தொகுதியில் எத்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்கள்?  தொகுதி முழுதும் பயணம் செய்திருக்கிறார்களா?  தான் சார்ந்த சமுதாயத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்களா அல்லது எல்லா சமுதாயத்தினரையும் சமமாக பாவித்து செயல்பட்டிருக்கிறார்களா?  என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடியிருக்கும் இந்த ஆய்வில் இன்னொரு முக்கியமான கேள்வியும் இடம்பெற்றிருக்கிறது,.

அதாவது 2021 தேர்தலுக்குப் பின் எம்.எல்.ஏ. ஆகும்போது சொத்து மதிப்பு என்ன? இப்போது 2024 இல்  அவர்களுடைய சொத்து மதிப்பு என்ன என்பதுதான் அந்த முக்கியக் கேள்வி.

மேற்கண்ட இந்த கேள்விகளுக்காக  உளவுத்துறை தமிழகத்தின் பதிவாளர் அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்களில்  திமுக எம்.எல்.ஏ.க்களின் பெயரிலோ அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பெயரிலோ பதிவு செய்யப்பட்டிருக்கும் சொத்துகள் பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி அனுப்பியிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதேபோலத்தான் ’பென்’ நிறுவனம், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் பற்றி ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் போட்டியிடலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில்தான்  ஆறேழு திமுக எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவும் இதேபோன்ற ஆய்வு தொடங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் திமுக  சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு  மீண்டும்  2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்று முடிவு செய்யப்படும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வேட்டையனுக்கு சிக்கல்… போர்க்கொடித் தூக்கும் விநியோகஸ்தர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்… எப்போது தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share