10 ஆயிரம் கோடி கொடுத்தாலும்… – பிரதானுக்கு ஸ்டாலின் பதில்!

Published On:

| By Aara

பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட தேசிய கல்விக் கொள்கையை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஏற்க மாட்டான்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக பேசியிருக்கிறார். mk stalin strong reply to Pradhan

பாட்டு பாடிய ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள திருப்பயரில், இன்று (பிப்ரவரி 22) ’பெற்றோரைக் கொண்டாடுவோம்’ மண்டல  மாநாடு நடந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையும், பெற்றோர் ஆசிரியர் கழகமும் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்டார்கள்.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகையில்,  “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி… நாடே இருக்குது தம்பி…’  என்ற கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு எடுத்துக் காட்டாக இந்த பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு அமைந்திருக்கிறது’ என பாடல் பாடி உரையைத் தொடங்கினார் ஸ்டாலின். mk stalin strong reply to Pradhan

“நான் நெய்வேலியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டேன்.  வருகிற வழியெங்கும் மக்கள் கடல். அதனால்தான் இந்த மாநாட்டுக்கு தாமதமாக வந்தேன். ஆசிரியர்கள் நான் ஏதோ மாணவர் போல காரணம் கூறுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். இதுதான் காரணம்” என்று நகைச்சுவையாக பேசிய முதலமைச்சர் பேச்சை சீரியசாக தொடர்ந்தார்.

 “அம்மா, அப்பா, ஆசிரியர்கள் என அனைவரும் ஒன்றாக கூடியிருக்கும் மாநாடு தமிழ்நாடு இதுவரை பார்க்காத ஒன்று. இதுதான் மாநில கல்வித் திட்டத்தின் சிறப்பு. தமிழ்நாட்டில் கல்வித் துறை உலக சாதனைகளை செய்துகொண்டிருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.

அன்பில் மகேஷின் காலம் பொற்காலம்

நான் ஆசிரியரும் இல்லை, மாணவரும் இல்லை. பெற்றோர்களே நான் உங்களில் ஒருவன். மாணவர்களை படிக்க வைத்து நல்ல மதிப்பெண் எடுக்க வைத்து வெளியே அனுப்புவதோடு பள்ளிக் கல்வித் துறையின் பணி முடிந்துவில்லை. அன்பில் மகேஷின் காலம், பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம். இந்தியாவின் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையை உயர்த்தியிருக்கிறார்.  234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறார். அவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்” என்று பாராட்டினார்.

தொடர்ந்து மும்மொழிக் கொள்கை சர்ச்சை பற்றி அழுத்தம் திருத்தமாக பேசினார் ஸ்டாலின்.

 “தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் திட்டம் செழுமை பெற்று வருகிறது என்று ஒன்றிய அரசு பாராட்டுகிறது. ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மனதார பாராட்டியிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம்  தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள், ஒன்றிய அரசு 2152 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இது 43 லட்சம் மாணவர்களுக்கு செலவு செய்ய வேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். mk stalin strong reply to Pradhan

தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள்!

தேசிய கல்விக் கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு வேட்டு வைக்கிற கொள்கை. நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. ஆனால் எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் நாம் எதிர்ப்போம், அதில் உறுதியாக இருப்போம்.

இந்தியைத் திணிப்பதால் மட்டுமே நாம் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை. அது மாணவர்களை பள்ளிக் கூடங்களை விட்டு விரட்டுகிற கொள்கை. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதை தொடர்ந்து உணர்த்துவோம்.

நாம் கடைபிடிக்கிற சமூக நீதிக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்வதுதான் தேசிய கல்விக் கொள்கை. பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இப்போது தருகிறோம். தேசிய கல்விக் கொள்கை இதை மறுக்கிறது.

மூன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வு, ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு… எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று வைத்து பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள். 9-12 வரை செமஸ்டர் முறையைக் கொண்டுவரப் போகிறார்கள். ஆல் இந்தியா தேர்வு போல நடக்கும். இதனால் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு விரும்பிய கல்லூரியில் சேர முடியாது.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு என்பதைப் போல, பொறியியல்- மற்றும் கலை ,அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதை அந்தந்த கல்லூரிகள் நடத்தாது. தேசிய அளவிலான தேர்வு முகமைதான் நடத்தும்.

இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படிப்பை தொடர விரும்பாத மாணவர்கள் அவர்களாகவே வெளியேறலாம் என்கிறது அக்கொள்கை. இது படிப்பை விட்டு மாணவர்களை விரட்டுவதுதானே?

6 ஆம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்ற பெயரில் பழைய குலக் கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். mk stalin strong reply to Pradhan

இதனால்தான் இந்த தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.

10 ஆயிரம் கோடி கொடுத்தாலும்…

இப்படிப்பட்ட கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு கையெழுத்து போடாததால்தான் 2 ஆயிரம் கோடி ரூபாயை தர மறுக்கிறார்கள். 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட இதுபோன்ற கொள்கையில் கையெழுத்து போட மாட்டோம்” என்று பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த மாநாட்டில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மற்றும் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் எஸ்.எஸ். சிவசங்கர், கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share