“முக்கிய பணி… என்.ஆர். இளங்கோ தான் இன்சார்ஜ்” : புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

பீகாரில் ஏற்பட்டது போல தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்கான அத்தனை முயற்சிகளையும் என்.ஆர்.இளங்கோ மேற்கொண்டிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான என்.ஆர்.இளங்கோவின் மகள் இராகவி – சச்சிந்தர் ஆகியோரது திருமணம் நீலாங்கரையில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இது என்னுடைய இல்லத்திருமணம் மட்டுமல்ல. திமுக குடும்பத்தின் திருமணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று என்.ஆர்.இளங்கோ பெருமையோடு எடுத்துச் சொன்னார். அப்படிப்பட்ட இந்த குடும்ப திருமண விழாவில் நானும் பங்கேற்று மணவிழாவை நடத்திவைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

ADVERTISEMENT

என்.ஆர். இளங்கோ பற்றி சொல்லவேண்டும் என்றுசொன்னால், அவர் தனது தந்தையின் அடியொற்றி, திமுக கொள்கைப் பிடிப்போடு தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்.

அவருடைய தந்தை ஆர்.என். அரங்கநாதன், அண்ணாவின் அன்பைப் பெற்று, சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்காக பணியாற்றி திமுகவுக்கு பெருமையை சேர்த்தவர்.

ADVERTISEMENT

தந்தையைப் போன்றே, தனையனாக திமுக கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவர் என்.ஆர்.இளங்கோ. அவர் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே கட்சி பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மறைந்த நம்முடைய மூத்த வழக்கறிஞர் என். நடராஜனின் பட்டறையில் பயிற்சிப் பெற்றவர் என்.ஆர். இளங்கோ. அனைத்து நீதிமன்றங்களிலும் தனது வாதத் திறமையால் சிறப்பாகச் செய்துகாட்டியவர்.

அவருடைய கொள்கைப் பிடிப்புமிக்க வாழ்வையும் – வழக்கறிஞர் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றுவதையும் பார்த்துதான், நம்முடைய தலைவர் கலைஞர் 1996, 2006-ல் திமுக ஆட்சி அமைந்தபோது, அவருக்கு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கினார்.

அவருடைய வழக்கறிஞர் பணியை பாராட்டி நான் மட்டுமல்ல. இங்கிருக்கக்கூடிய நாம் மட்டுமல்ல, பல்வேறு நீதிபதிகளும் அவரை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்கள். மூத்த வழக்கறிஞர்களும் அவருடைய திறமையை வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.

நீதியை நிலைநாட்டும் அவருடைய திறமையை, கட்சி இன்னும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துதான் அவரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பி வைத்தோம். அவரும் தமிழ்நாட்டின் உரிமைக்காக அந்த அவைக்கு சென்று ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
 
இதைவிட, முக்கியமான ஒரு பணியை அவருக்கு நாம் கொடுத்திருக்கிறோம். அதைத்தான் உதயநிதியும் சொன்னார். என்.ஆர். இளங்கோ தான் இன்சார்ஜ். என்ன இன்சார்ஜ் என்றால் அதுதான், வார் ரூம் பணி!

தேர்தல் நேரத்தில் வழக்கறிஞர்கள் அணியைத் தயாராக வைத்திருப்பார். அதோடு, வாக்குச்சாவடி முகவர்களுக்கு முறையாக பயிற்சியும் வழங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தல் களத்தில் முன்கள வீரர்களாக செயலாற்ற கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு நாடு என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் SIR என்ற சிறப்பு வாக்காளர் திருத்தம் – என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நான் அதிகம் இங்கு விளக்கி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதற்காகதான், சகோதரர் ராகுல் காந்தி ஒரு நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் பீகார் சென்று, வாக்காளர் உரிமைப் பயணம் என்று சகோதரர் ராகுல் காந்தி நடத்தி வரும் அந்த விழிப்புணர்வு பயணத்தில் பங்கேற்றேன்.

இந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படக் கூடாது என்பதற்காக, இப்போதே நம்முடைய விழிப்புணர்வைப் பெற்று நாம் அதற்காக தயாராக வேண்டும் என்பதற்காகதான் அதை தடுத்து நிறுத்துவதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பவர்தான் என்.ஆர். இளங்கோ. அதற்காக இந்த நேரத்தில் நான் மனதார அவரை பாராட்ட, வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி, அதில் நீதியரசர்களை பங்கேற்க வைத்து பல ஆன்றோர்கள், சான்றோர்களையெல்லாம் அதில் பங்கேற்க வைத்து அதையும் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் என்.ஆர். இளங்கோ எவ்வளவு உறுதியுடன் இருக்கிறார் என்று, நான் சொல்ல வேண்டும் என்றால், இங்கு மணமக்களுக்கு மாலைகளை மாற்றுவதற்கும், மாங்கல்யத்தை எடுத்துக்கொடுக்கக்கூடிய தாம்பூலத்தட்டில் அவர் என்ன வைத்திருந்தார் என்றால், தலைவர் கலைஞர் எழுதிய திருக்குறள் உரை, அரசியலமைப்புச் சட்டம், அதை வைத்துதான் மாங்கல்யத்தையும், மாலையையும் வைத்து தட்டை காண்பித்தார். அதைதான் எடுத்துவந்து கொடுத்தேன்.
 
இப்படிப்பட்ட என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணத்தில் – அதுவும் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணத்தில், நானும் உங்களோடு சேர்ந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்” என்று என்.ஆர்.இளங்கோவை புகழ்ந்து பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share