ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவு: ஸ்டாலின் வருத்தம்!

Published On:

| By Minnambalam

mk stalin speech in naan muthalvan

குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா இன்று (ஆகஸ்ட் 7) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ADVERTISEMENT

”நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத் திட்டம். திமுக ஆட்சி மலர்ந்த பிறகு தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் வளர்ந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த திட்டம் காரணமாக இருக்கிறது.

ஆட்சி அமைந்த தொடக்கத்தில் நிறைய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்தார்கள். அப்போது பல தொழிலதிபர்களோடு பேசும் போது, தமிழ்நாட்டில் புதிய கம்பெனிகள் தொடங்கினாலும் அதில் வேலை செய்வதற்குத் திறமையான இளைஞர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு சொன்னார்கள். அதை கவனத்தில் வைத்து என்னுடைய மனதில் உருவான திட்டம்தான் இந்த நான் முதல்வன் திட்டம்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் இளைஞர்களை உலகத்திலேயே முதன்மையானவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய தணியாத ஆசை. நான் முதல்வன் போன்ற திட்டங்கள் தான் தலைமுறை தலைமுறைக்கு பயன்படுகின்ற திட்டங்கள்.

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இதை முறையாக நடத்தி காட்டவேண்டும். இதன் நோக்கம் முழுமையடைய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். அறிவிப்பதோடு எந்த திட்டமும் நிறைவடைந்து விடாது. அதை கடைசி வரை நடத்திக் காட்டுவதில் தான் அதனுடைய வெற்றி அடங்கியிருக்கிறது என்று அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் சொல்பவன் நான்.

ADVERTISEMENT

அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. விளையாட்டுத் துறையில் எப்படி மாற்றங்களை உருவாக்கி வருகிறாரோ அதே போல நான் முதல்வன் திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் உதயநிதி.

நான் முதல்வன் திட்டத்தின் முதல் வருடத்திலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மிக சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என்பது அடுத்த சாதனை.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 கோடியே 31 லட்சம் இளைஞர்கள், 18 வயதிலிருந்து 31 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதாவது 33 விழுக்காடு பேர்.

இந்த இளைய சக்திகளை வளர்க்க தமிழ்நாடு திறன் போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. படிக்கின்ற காலத்திலேயே மாணவர்கள், இளைஞர்களுடைய திறமையை மேம்படுத்த கிடைத்த வாய்ப்பு தான் இது.

இந்த திறன் போட்டிகள் மாநிலம் முழுவதும் பள்ளிகள், அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் என்று எல்லோரும் பங்குபெற கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள திறன் போட்டிகளில் பங்கேற்க இதுவரை 58 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

தேசிய அளவிலான திறன் போட்டிகளை ஒருங்கிணைக்கும் அமைப்பான தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் புள்ளிவிவரப்படி திறன் போட்டிகளுக்கான பதிவுகளில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கின்றது.

படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல. திறமை சார்ந்ததாக மாற வேண்டும். வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாற வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு வருத்தமான பதிவை பதிவு செய்துதான் ஆகவேண்டும். குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. 2014-ல் இருந்து 10 விழுக்காட்டுக்கு மேல் என்பதில் இருந்து தேர்ச்சி 5 விழுக்காடாக குறைந்துள்ளது.

இந்த நிலை மாற வேண்டும். அதற்காகத்தான் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாய் ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி பிரிவு உருவாக்கப்பட்டது.

அரசு உருவாக்கி தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கின்ற காலத்தில் எந்த கவன சிதறலும் கூடாது” என்று பேசினார்.

மோனிஷா

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத் துறை!

ஜவான் ரிலீஸ் கவுண்டவுன் தொடங்கியது!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share