திமுக ஆட்சியையும். தமிழக வளர்ச்சியையும் பிரித்து பார்க்க முடியாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
கோவையில் லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று (நவம்பர் 25)மாலை முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,”நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து 15 முறைக்கு மேல் இந்த கோவைக்கு மட்டும் வந்துள்ளேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அதிகமாக விசிட் செய்த மாவட்டம் கோயம்புத்தூர். எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல வருங்காலத்தில் உங்கள் ஆதரவை எங்களுக்கு தர வேண்டும் அதுதான் முக்கியம். உங்களுக்காக தொடர்ந்து நானும் திராவிட மாடல் அரசும் உழைப்போம் என்பதை உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியும் – தமிழக வளர்ச்சியும்
அந்த அடிப்படையில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வத்தோடு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் தமிழக முதல்வர் என்ற வகையில் வருக வருக என வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் முதலீடுகளை செய்பவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவினுடைய எடிசன் ஜிடி நாயுடு அருட் செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற ஏராளமான திறமைசாலிகளை தந்து புதுமையான முயற்சிகளுக்கும் கடினமான உழைப்புக்கும் பெயர் பெற்ற கோவை மண்ணில் உங்களை எல்லாம் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள தொழில் துறை அமைச்சருக்கும், அந்த துறையின் செயலாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
இங்கு வந்திருக்கும் முதலீட்டாளர்களாகிய நீங்கள் மற்றுமொரு மாநிலத்திற்கு வரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி, ஏராளமான முதலீட்டாளர்களின் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்று இந்தியாவிலேயே அதிகமாக 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்திய தமிழ்நாட்டிற்கு வந்துள்ளீர்கள்.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியையும், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பிரிக்க முடியாது. இந்த தமிழ்நாடு அறிவு தரத்திலும், உழைப்பிலும், சாதனைகள் படைப்பதிலும் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய லட்சியம். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை எங்களுக்குள் இருப்பதால்தான் தொலைநோக்குப் பார்வையோடு மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் 25 ஆண்டுகளுக்கு அட்வான்ஸ் ஆக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கம்ப்யூட்டர்தான் எதிர்காலம்
1971 ல் சிப்காட் ஆரம்பித்த காரணத்தினால் தான் உலகமயமாக்கல் அறிமுகமான பிறகு அந்த வாய்ப்புகளை தமிழகம் சிறப்பாக பயன்படுத்தியது. கம்ப்யூட்டர் தான் இனி எதிர்காலம் என்று பாடத்திட்டத்தில் சேர்த்தோம். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 1997 ஐடி பாலிசி கொண்டு வரப்பட்டு டைட்டல் பார்க் உருவாக்கப்பட்டது. இப்படி என்னால் லிஸ்ட் போட்டு சொல்லிக்கொண்டே போக முடியும். இதுபோல் அட்வான்ஸாக செயல்பட்ட காரணத்தால் தான் ஆட்சி மாற்றத்தால் இடையிடையே சிறிய தொய்வுகள் ஏற்பட்டாலும் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
இந்த கோவை கேப்பிட்டல் சிட்டி கிடையாது. டயர் 2 சிட்டி தான். ஆனால் இங்கு எல் அண்ட் டி, எல்எம்டபிள்யூ சி.ஆர். ஐ பம்ப்ஸ், காக்னிசன்ட், பண்ணாரி அம்மன் குழுமம் என ஏராளமான நிறுவனங்களும் 60க்கும் மேற்பட்ட ஜிசிசி நிறுவனங்கள், 1702 புத்தொழில் நிறுவனங்கள் என ஏராளமான நிறுவனங்களும் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இதே நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்க வேண்டும். தமிழ்நாடு வளர வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதனால் தொழில் துறையை சார்ந்த யாரை நான் சந்தித்தாலும் தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய முன் வாருங்கள் என்று கோரிக்கை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் சிறிய அளவிலும், பெரிய அளவிலும், முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டில் இருக்கும் வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறோம். UAE, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நானே நேரடியாக சென்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளேன்.
இரண்டரை மடங்கு அதிகம்
இப்படி நடத்தப்பட்டுள்ள 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த ஆட்சிக்காலத்தில் கடைசி நான்கு ஆண்டுகளை விட இரண்டரை மடங்கு அதிகம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 11,40,731 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு உறுதி செய்துள்ளோம்.
எத்தனையோ மாநிலங்கள் உள்ளன. எத்தனையோ அரசுகள் உள்ளன. அவர்களும் கூட அவர்கள் மாநிலம் வளர வேண்டும் என்று முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகிறார்கள். ஆனால் அதில் எத்தனை ஒப்பந்தங்கள் தொழிற்சாலைகளாக மாறுகிறது. என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட மாடல் அரசில் போடப்பட்டுள்ள 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நிலம் வாங்குவது, வணிக உற்பத்தி சோதனை, உற்பத்தி, கட்டுமானம் தொடங்கப்படுவது என 809 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலையில் உள்ளது.
புதிய ஐடியாக்களுடன் இளைஞர்கள் தொழில் தொடங்க வந்தால் இந்த திராவிட மாடல் அரசு அவர்களுக்கும் சப்போர்ட்டாக உள்ளது. கடந்த மாதம் கூட இதே கோவைக்கு வந்து உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தேன். அதில் பங்கேற்ற இளைஞர்கள் எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் சொல்லியுள்ளனர். 45க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 30 ஆயிரம் பேருக்கு மேல் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஸ்டார்ட் அப் தமிழ்நாடு
சின்னச்சின்ன நகரங்களுக்கு கூட சென்று ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மூலமாக இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவிக்கிறோம் அதனால் இப்பொழுது தமிழகத்தில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 12,663.
கடந்த 2021 மே வரை 2,146 நிறுவனங்கள் தான் இருந்தது. நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண்டுகளில் 12,663 என்ற வரலாற்று உயரத்தை தொட்டுள்ளோம். இத்தனை நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு என்ன காரணம் என்றால் வெளிப்படைத் தன்மையோடு இந்த அரசு செயல்படுகிறது. திறன்மிக்க படித்த இளைஞர்கள் இங்கு உள்ளனர். பிஸ்னஸ் பிரண்ட்லி சூழல் இங்கு நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு இங்கு சரியாக உள்ளது.
புள்ளி விபரங்கள் தேவையா?
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அரசியல் காரணங்களுக்காக தவறான டேட்டாக்களையும், செய்திகளையும் பரப்புகின்றனர். உண்மை என்னவென்றால் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 62,413 நிறுவனங்கள் இருந்த இந்த தமிழ்நாட்டில் இப்போது 79,185 நிறுவனங்கள் உள்ளன. அதாவது 16,772 நிறுவனங்கள் அதிகரித்துள்ளது. புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு பி.எப் கணக்கு தொடங்கி அதை பராமரிக்கிறது ஒன்றிய அரசு. அதன்படி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 29,64,000ஆயிரம் பணியாளர்கள் அதிகரித்ததாக புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதைவிட தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு புள்ளி விபரங்கள் தேவையா?
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சில நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு போவதாகவும் தொடர்ந்து செய்திகளை உருவாக்குகின்றனர். இந்த செய்திகளை உருவாக்குகின்றவர்கள் யார் என்று பார்த்தாலே அவர்களது நோக்கம் என்னவென்று புரியும். அதைவிட அவர்கள் ஏன் இந்த செய்திகளை பரப்புகிறார்கள் என்று யோசித்தால் நமக்கு தெரிந்துவிடும். கடந்த நான்கரை ஆண்டுகளில் நமது ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகளை பார்த்து அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
தமிழ்நாட்டிற்கு உகந்ததா?
தொழில் முதலீடுகளை கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல போட்டிகள் உள்ளன. இந்திய மாநிலங்களுடன் மட்டுமல்ல வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் போட்டி போட்டு இந்த முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளோம். எந்த மாதிரியான முதலீடுகளை, எவ்வளவு சலுகைகளை கொடுத்து கொண்டு வர வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறோம். எத்தனை கோடி முதலீடுகள் என்பதை விட தமிழ்நாட்டிற்கு உகந்ததா? இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடிகிறதா? என்பதை சிந்தித்து தான் கொண்டு வருகிறோம்.
மேலும் நமது நிதி நிலைகளுக்கு ஏற்ப முறையான சலுகைகளை கொடுத்து தான் இந்த முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம். முதலீட்டாளர்கள் கேட்கின்ற சலுகைகளையும், அந்த முதலீடுகளால் தமிழகத்திற்கு கிடைக்கும் பலன்களை ஒப்பிட்டுத்தான் சரியான முடிவுகளை எடுக்கிறோம். அதனால் தான் தமிழ்நாடு இப்போது வளர்ந்திருக்கும் வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அப்படி தூத்துக்குடி ஓசூரை தொடர்ந்து இப்போது கோவையில் தமிழ்நாடு ரைசிங் மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
கோவையின் தொழில் சூழலை மேம்படுத்த செய்யப்பட்டு இருக்கும் சில பணிகள்
- பாதுகாப்புத்துறை உபகரணங்கள் பூங்கா
- 57 ஏக்கரில் MSME பூங்காவிற்கான உட்கட்டமைப்பு வசதி நிறைவடையும் நிலையில் உள்ளது.
- சூலூரில் 200 ஏக்கர் பரப்பில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்கா அமைத்து வருகிறோம
- டிட்கோ நிறுவனம் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து பொது பொறியியல் வசதி மையம் அமைக்கப்படுகிறது
- சூலூர் வட்டத்தில் பன்முக போக்குவரத்து பூங்காவை அமைக்கப் போகிறோம்.
- சூலூர் மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்க உள்ளோம்.
- ஆவாரம்பாளையத்தில் உயர்தர பம்புகள் மோட்டார் உற்பத்திக்கான திறன்மிகு மையத்திற்கும், மோப்பேரிபாளையத்தில் வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்புகள் மேம்பாட்டுக்கான திறன்மிகு மையத்திற்கும் அடிக்கல் நாட்டி உள்ளேன்.
- தொழிலும் கல்வித் துறையும் சேர்ந்து அறிவு பொருளாதாரம் உருவாக வேண்டும். அதற்காகத்தான் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அறக்கட்டளை என்ற புதிய நிறுவனத்தை அமைத்துள்ளோம்.
- புதுமைக்கு பெயர் பெற்ற கோவை மண்டலத்தில் இந்த நிறுவனம் 2 கோடியே 88 லட்சம் ரூபாய் மானியத்துடன் பண்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது. இந்த திட்டங்களுக்கு முதல் தவணையாக 78 லட்சம் ரூபாய் ஆராய்ச்சியாளர்களிடம் இந்த நிகழ்ச்சியில் வழங்கியுள்ளோம்.
இதுபோல் உங்களுக்கு என்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்து தருவதன் காரணத்தால் தான் சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய Ease Of Doing Business தரவரிசையில் நான்கு பிரிவுகளில் தமிழகத்திற்கு சாதனையாளர்கள் அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர்.
எனவே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் அடிக்கல் நாட்டி திறப்பு விழாவிற்கு தயாராகி விடுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும்.
மற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை விட இந்த மாநாட்டிற்கு தனி சிறப்பு உள்ளது. மொத்த முதலீடுகளில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு என்பது இந்த மாநாட்டில் தான் மிக அதிகமாக உள்ளது. இந்த மேற்கு பகுதியில் தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முனைவோரின் திறனுக்கும் இதைவிட வேறு சாட்சியங்கள் வேண்டுமா?
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்
தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் திட்டங்களுக்கு எந்தவித தாமதமும் ஏற்படாது. எந்தவித தலையீடுகளும் இருக்காது. இங்கு எல்லாம் வேகமாக, தெளிவாக, வெளிப்படை தன்மையோடு இருக்கும்.
இந்த அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் மக்களுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம்.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி திராவிட மாடல் ஆட்சி வேகமாக நடை போடுகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. கடுமையாகவும், நேர்மையாகவும் உழைப்பவர்கள் புதுமையாக சிந்திக்க கூடியவர்கள். அப்படிப்பட்ட எங்கள் இளைஞர்களின் திறன்களை உயர்த்துவதற்கு தான் நான் முதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
வெற்றிகள் தொடங்கும்
உங்களுக்கு தேவையான மனித வள ஆற்றல் இங்கு குறைவில்லாமல் கிடைக்கும். தமிழ்நாட்டில் முதலீடு செய்தால் தமிழ்நாடு மட்டுமல்ல உங்கள் தொழிலும் பல மடங்கு வளரும். இந்த சந்திப்பு வளர்ச்சிக்கான தொடக்கம் மட்டும் தான். நீங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் மட்டுமல்ல உங்கள் நண்பர்களுக்கும் இங்கிருக்கும் வாய்ப்புகளை எடுத்துச் சொல்லி முதலீடு செய்ய ஊக்குவியுங்கள். உங்கள் எண்ணங்கள் செயலாகும். உங்கள் வெற்றிகள் தொடங்கும். இன்று 161 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 170 திட்டங்கள் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் 1,00,709 பேருக்கு கிடைக்க உள்ளது” என்று தெரிவித்தார்.
