“விநாயகர் சதுர்த்திக்கு தமிழக முதல்வர் வாழ்த்து கூறாமல் இருப்பது அந்த மக்களை ஒதுக்கும் செயலாகும்” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று (ஆகஸ்ட் 31) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகை திருநாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறிவரும் நிலையில், தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை. இதற்கு பிஜேபியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்ல வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அதுபோல் மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலையும் கேட்டுக்கொண்டுள்ளார். ’முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்’ என்று சொல்லி அறிக்கை ஒன்றை அவர் இன்று (ஆகஸ்ட் 31) வெளியிட்டிருக்கிறார்.
அதில், “விசேஷ நாட்களில் வாழ்த்து சொல்வது என்பது தமிழர் மரபின் ஓர் அங்கம். ஒவ்வொருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ள வாழ்த்துகள் சொல்வது தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் ஒரு வழக்கம்.
முழு மனதுடன் ஆட்சியாளர்கள் பகிரும் வாழ்த்துச் செய்தி அந்த மக்களின் மத நம்பிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதை குறிக்கிறது.
இப்படிப்பட்ட வாழ்த்துக்களை கூறுவதிலும் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும்.
அதிலும் குறிப்பிட்ட ஒரு சமூகம் கொண்டாடும் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்து கூறாமல் இருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்குச் சென்ற ஆண்டும் வாழ்த்து சொல்லவில்லை.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
திமுக தலைவராக நீங்கள் வாழ்த்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் கொள்கை ரீதியில் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால், இப்போதோ நீங்கள் அனைத்து தரப்பினராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரஜை.
கிறிஸ்துவ, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் நீங்கள் இந்துக்களின் பண்டிகைகளின்போது வாழ்த்துகள் சொல்லாமல் இருப்பது ஏற்புடையதல்ல.
திமுகவில் 90 சதவீத உறுப்பினர்கள் இந்துக்களே என்று சொல்லும் நீங்கள், உங்கள் வாழ்த்துச் செய்தி அவர்களையும் சென்றடையும் என்பதற்காகவாவது நீங்கள் இந்து பண்டிகைக்கு வாழ்த்தலாமே.
தமிழகத்தில் பெருவாரியாகக் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பது அந்த மக்களை ஒதுக்குவது போன்ற செயலாகும் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணருவார் என்பதே எங்கள் நம்பிக்கை” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
