டிஜிட்டல் திண்ணை:  அடுத்தடுத்த சர்ச்சையில் ஆளுநர்- அட்டாக் முதல்வர்…  அதிர்ச்சியில் பாஜக -ஆலோசனையில் டெல்லி

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட  டிடி தமிழ் சேனலின் இந்தி மாத விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து  பாடிய வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“சென்னையில் டிடி தமிழ் சேனல் அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெற்றது.  இந்தித் திணிப்பு என்று இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.  ஒருபடி மேலே போய் திமுகவின் மாணவரணி இந்த நிகழ்வை எதிர்த்து ஆர்பாட்டமே நடத்தியது.

இந்த சூழலில் சர்ச்சை மேல் இன்னொரு சர்ச்சையாக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட இந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது, அதில்  திராவிட நல் திருநாடு என்று உச்சரிக்கும் வரியே பாடப்படவில்லை. லைவ் ஓடிக் கொண்டிருக்கும்போதே இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட  டிவி சேனல்களில் தீயாய் பற்றி எரியத் தொடங்கியது இந்த விவகாரம்.

உடனடியாக இதுகுறித்து முதல்வர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.  ஆளுநரா, ஆரியநரா என்ற கேள்வியையும் அதிலெழுப்பியிருந்தார்.

நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்தில் ஒரு வரி தவிர்க்கப்பட்டதில் உள்நோக்கம் இல்லை என்றும், அது தவறுதான்  என்றும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது டிடி நிர்வாகம்.  மேலும் ஆளுநர் மாளிகையும் இதில் ஒரு விளக்கம் அளித்தது.

Image

ஆனால் முதல்வரின் கடுமையான அட்டாக்கிற்கு பின் ஆளுநரே இதுகுறித்து விளக்கம் அளித்தார். அதில், முதலமைச்சர் ஸ்டாலின் இனவாதத்தோடு பேசுவதாக குற்றம் சாட்டி பிரச்சியை மீண்டும் பெரிதுபடுத்தினார்.

’ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இதற்கு மறுபடியும் பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்,  ஆளுநருக்குச் சில கேள்விகளையும் முன் வைத்தார்.

‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?

பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் – உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா? என்று கேட்டுள்ளார் ஸ்டாலின்.

மேலும், ‘சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்?

உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் டெல்லி வரை விவாதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அத்தனை கட்சிகளும் ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கின்றன. அதிமுகவும் கூட ஆளுநருக்கு எதிராக நிற்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முன்பே டெல்லியில் இந்த ஆளுநரை மாற்றிவிடலாமா என்று ஆலோசனைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவல் உள்ளிட்ட சிலரின்  முயற்சியால்தான் ஆளுநர் இன்னும் இப்பதவியில் நீடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆளுநர்  ரவி தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு நிர்வாக ரீதியான தலைவலிகளை கொடுப்பதற்கு பதில், திமுகவை கொள்கை ரீதியாகத் தாக்கி, அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உற்சாகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒருபக்கம் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அழுத்தமாக கோரிக்கை வைத்தாலும்,  அரசியல் மேடைகளில்,  ‘இந்த ஆளுநரை தேர்தலுக்குள் மாற்றிவிடாதீர்கள். இவர் இருந்தால்தான் எங்களுக்கு வாக்குகள் அதிகரிக்கும்’ என்றும் பேசினார் ஸ்டாலின்.

இந்த பின்னணியில் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசுக்கு எதிராக செயல்படுவதை விட, தேர்தலில் திமுகவுக்கு ஆதரவான வாக்குகள் அதிகரிக்கும் வகையிலேயே செயல்படுகிறார். எனவே ஆர்.என்.ரவியை மாற்றிவிட்டு  திமுகவுக்கும் திமுக அரசுக்கும் உண்மையிலேயே தலைவலியை தரக் கூடிய அளவுக்கு ஓர் அக்மார்க் அரசியல்வாதியை ஆளுநராக நியமிக்கலாம் என்ற ஆலோசனைகள் டெல்லியில் ஒரு வாரமாகவே நடந்து வந்திருக்கின்றன. இந்த நிலையில்தான் ஒரே நாளில் இந்தித் திணிப்பு சர்ச்சை, திராவிடத் தவிர்ப்பு சர்ச்சை என இரட்டை சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்த பின்னணியில் டெல்லியில் தமிழ்நாடு  ஆளுநர் பற்றிய ஆலோசனைகள் தீவிரமாகியிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

 

இப்பவே கண்ணக்கட்டுதே… அப்டேட் குமாரு

ஈஷா வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு… பெண் துறவிகள் வரவேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share