“தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்” – பவள விழாவுக்கு ஸ்டாலின் அழைப்பு!

Published On:

| By Selvam

செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள திமுகவின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 13) எழுதியுள்ள கடிதத்தில், “தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை எப்போது தவறுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,

“தமிழர்களை காக்கும் இயக்கம் திமுக!

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசுமுறைப் பயணத்தில் ஏறத்தாழ இரண்டு வாரகாலமாக தொடர்ச்சியான பணிகளில் இருந்தாலும், என் உள்ளம் ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது.

உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டினைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்கிட வழிவகுக்கின்றன.

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சிகாகோ நகரின் ரோஸ்மாண்ட் அரங்கத்தில் செப்டம்பர் 7-ஆம் நாள் அமெரிக்கத் தமிழர்களுடனான சந்திப்பு பெரும் உற்சாகத்தை அளித்தது. அமெரிக்காவில் இருக்கிறோமா, அன்னைத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற அளவிற்கு, 5000 தமிழர்களுக்கு மேல் திரண்ட ஒரு மினி தமிழ்நாடாக அந்த அரங்கம் அமைந்திருந்தது.

இன – மொழி உணர்வால் அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் உறவாக அமைந்த சிறப்பான நிகழ்வு அது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சிகாகோவில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த தமிழர்களும், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் வர இயலாமல் போனவர்களும் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள சாதனைத் திட்டங்களைப் பாராட்டத் தவறவில்லை.

திமுக முப்பெரும் விழா!

அவர்களின் பாராட்டுகள், உங்களில் ஒருவனான எனக்குத் தமிழ்நாட்டின் நினைவுகளையே மீண்டும் மீண்டும் கிளறின. திமுக என்ற ஜனநாயகப் பேரியக்கம் என்றென்றும் தமிழையும் தமிழர்களையும் காக்கின்ற இயக்கமல்லவா.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது திமுக தான்.

செப்டம்பர் 15 – திமுகவை உருவாக்கித் தந்து, இந்த மாநிலத்தின் உரிமைகளைக் காத்து, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17 – பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், திமுக தொடங்கப்பட்ட நாள்.

இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் கலைஞர்.

தன்னால் திமுகவிற்கு என்ன லாபம் என்று நினைத்துச் செயலாற்றுபவர்களை இரத்தநாளம் என்று தெளிவான விளக்கம் தந்த கலைஞர், திமுகவின் இரத்தநாளங்களாக இருந்து, தங்கள் வாழ்நாளை இயக்கப் பணிக்கு அர்ப்பணித்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வழங்கினார்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாகத் தொடரும் இந்த சிறப்பான நடைமுறையின் அடிப்படையில், இந்த ஆண்டு பெரியார் விருது பாப்பம்மாள், அண்ணா விருது அறந்தாங்கி ‘மிசா’ இராமநாதன், கலைஞர் விருது ஜெகத்ரட்சகன் எம்.பி., பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது வி.பி. இராசன், இந்த ஆண்டு முதல் அறிமுகமாகும் ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஆகியோருக்கு வழங்கப்படவிருக்கிறது.

தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை!

திமுகவில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், பல்வேறு துறைகளில் மக்கள் பணியாற்றுபவர்களுக்கும் முப்பெரும் விழாவில் கலைஞர் வகுத்துத் தந்த வழியில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

செப்டம்பர் 17-ஆம் நாள் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள்தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்ட செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

ஆகஸ்ட் 16-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாவட்டங்கள் பலவற்றிலும் திமுகவின் பவள விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் எழில்மிகுந்த முறையிலே எழுதப்பட்டிருப்பதை காணொலிகளாக நம் நிர்வாகிகள் அனுப்பியிருந்தார்கள். சிறப்பான முறையிலே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.

திமுகவின் கடைக்கோடி உறுப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் உட்கட்சி ஜனநாயகத்தன்மையின் அடிப்படையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதையும் அறிந்து கொண்டேன்.

வட்டவாரியாக – கிளைவாரியாக நடைபெற்ற இத்தகைய பொது உறுப்பினர் கூட்டங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்றிருக்கின்றன.

பொது உறுப்பினர்கள் கூட்டங்களில், தொண்டர்களின் ஆழ்மனக் கருத்துகள் அடிவயிற்றிலிருந்து வெளிப்பட்ட குரலாக ஒலித்ததையும், திமுகவின் தலைவர் என்ற முறையில் நான் கவனிக்கத் தவறவில்லை. தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை தவறுவதில்லை என்ற உறுதியை உங்களில் ஒருவனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எளிய தொண்டர்களின் இயக்கமான திமுகவின் பவள விழாக் கொண்டாட்டம் என்பது தலைமைக் கழகத்திற்கும், மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர்க் கிளைக் கழகங்களுக்கும் மட்டும் உரியதன்று. கலைஞரின் உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் உரியது.

உணர்வுப்பூர்வமான அவர்களின் கொண்டாட்டத்தால்தான் பவளவிழா சிறக்கும் என்பதால், தமிழ்நாட்டில் உள்ள திமுக கொடிக்கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, இரு வண்ணக் கொடியேற்றப்பட வேண்டும் என உங்களில் ஒருவனாக – திமுகவின் தலைவனாக நான் அன்புக்கட்டளை விடுத்ததோடு, ஒவ்வொரு உடன்பிறப்பின் வீட்டிலும் திமுகக் கொடியை ஏற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.

வீடுகளில் திமுக கொடி!

செப்டம்பர் 17-க்கு முன்பாகவே திமுக தொண்டர்களின் வீடுகளில் இருவண்ணக் கொடிகள் பறக்கத் தொடங்கி விட்டதையும் அறிந்துகொண்டேன். உள்ளத்தில் பதிந்துவிட்ட கொள்கை உணர்வே இல்லத்தின் அடையாளமாகக் கொடிகட்டிப் பறக்கின்ற அழகை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் காண முடிகிறது. இந்த இருவண்ணக் கொடிதானே உண்மைத் தொண்டர்களின் உயிருடன் கலந்த உணர்வு.

தமிழ்நாடு முழுவதும் பெரியார் , அண்ணா பிறந்தநாள் விழாக்களும், திமுகவின் பவளவிழாவும் பல நிகழ்வுகளாகக் கொண்டாடப்படும் நிலையில், திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17 அன்று அதனை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடும் பொறுப்பினை சென்னை தெற்கு மாவட்டத்திற்கு வழங்கியிருக்கிறது தலைமை.

மாவட்டச் செயலாளரும் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன் மாரத்தான் ஓட்டம்போல ஓய்வின்றித் தொடர்ச்சியாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.

திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 17-ஆம் நாள் எழுச்சிகரமாக நடைபெறவிருக்கிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் சிறப்பான ஏற்பாடுகளை முனைப்பாக மேற்கொண்டு வரும் சென்னை தெற்கு மாவட்டக் கழகத்துடன் மற்ற மாவட்டக் கழகத்தினரும் இணைந்து நின்று, சென்னை மாநகரத்திற்குள் வங்கக்கடல் புகுந்ததோ என எண்ணுகிற அளவுக்கு உடன்பிறப்புகளின் கறுப்பு-சிவப்புக் கடலாகப் பவளவிழாக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

1949-ஆம் ஆண்டு வடசென்னை இராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுகவின் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினார் அண்ணா. 75 ஆண்டுகள் கழித்து, தென்சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுகவின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு திமுகவின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.

கடல் கடந்து – கண்டங்கள் தாண்டி – பல்லாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதும்போது, ஒரு மகத்தான ஜனநாயகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பை உடன்பிறப்புகளாம் நீங்கள் ஒருமனதாக என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறீர்கள் என்ற பெருமித உணர்வையும், பொறுப்பின் சுமையையும் உணர்கிறேன்.

1957-ஆம் ஆண்டு திமுக முதன்முதலாகப் பொதுத் தேர்தல் களத்தைச் சந்தித்தபோது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ்த் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அயலக தமிழர்கள் நலனில் திமுக

இன்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உலக நாடெங்கும் வாழ்கிறார்கள். உடலுழைப்புத் தொழிலாளர்களாக மட்டுமல்ல, உயர்கல்வி கற்று, அதனால் அயல்நாடுகளில் உயர்பொறுப்புகளைப் பெற்றவர்களாக, நல்ல ஊதியம் பெறக்கூடியவர்களாகத் திகழ்கிறார்கள்.

அண்ணா தொடங்கி வைத்த திராவிட இயக்கத்தின் ஆட்சியினால், கலைஞர் ஆட்சிக்காலத் திட்டங்களால் இத்தகைய வாய்ப்புகளைப் பெற்று அயல்நாடுகளில் பணியாற்றும் அவர்களின் நலன் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் அயலக நலத் துறை உருவாக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான்.

அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டதும் திராவிட மாடல் ஆட்சியில்தான். அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு – அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் என உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக – அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திமுக.

இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை. இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, செப்டம்பர் 17 அன்று வரலாற்றுப் பெருவிழாவான திமுகவின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்.

இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டுமல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள். அணி திரள்வோம். பணி தொடர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குட் பை அமெரிக்கா… ஸ்டாலின் சென்னை ரிட்டர்ன்!

ஓணம் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share