சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளார்
இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, பட்ஜெட் மீதான பதிலுரை வழங்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை சபாநாயகர் அப்பாவு அழைத்தார்.
அப்போது பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எழுந்து, “தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு,” நீங்கள் பேசுவது எதுவும் அவை குறிப்பில் ஏறாது. இந்த பிரச்சனை நேற்று தீர்த்து வைக்கப்பட்டது. நீங்கள் வேண்டுமென்று திட்டமிட்டு பிரச்சனை செய்ய வேண்டும் என கேள்வி எழுப்புகிறீர்கள்.
இதை எற்கனவே ஆளுநர் உரையில் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும் தான் அதனை நடைமுறைப்படுத்த முடியும்.
நீங்கள் அரசியலுக்காக சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்துவது அவசியமில்லை. மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தினாலும் நடைமுறைப்படுத்த யாரும் சம்மதிக்க மாட்டார்கள்.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மத்திய அரசு மட்டும் தான் கணக்கெடுக்க முடியும். அதனால் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். உங்கள் கருத்தை தான் இந்த அரசும் முதல்வர் ஸ்டாலினும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சனை இந்த அவையில் பேசப்பட்டிருக்கிறது.
இங்கே பேரவை தலைவர் சொன்னது போல பட்ஜெட்டிலும் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்திலும் பல நேரங்களில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் பலமுறை என்னை நேரடியாக வந்து சந்தித்து இதுகுறித்து பேசியிருக்கிறார்கள்.
அவர்களிடம் நான் விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறேன். நீங்கள் சொல்கிற கொள்கையில் நாங்கள் எதிராளிகள் அல்ல. உங்களுக்கு சாதகமாக தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம்.
எனவே இந்த விளக்கத்திற்கு பிறகு நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்று வெளியாகிறது ஐபிஎல் அட்டவணை… முதல் போட்டி எங்கேன்னு பாருங்க!
கலைஞர் நினைவிடம் திறப்பு: அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்
சர்ச்சைப் பேச்சு : அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா வக்கீல் நோட்டீஸ்!