தமிழ்நாட்டில் திமுக அமைத்த கூட்டணியை பார்த்து தான் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 28) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தலைவர்கள் ஒன்றாதல் கண்டே” என்று தனது பேச்சை தொடங்கினார் ஸ்டாலின்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசும்போது “1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கினார்கள். அப்போது வானம் தனது வாழ்த்துக்களை மழையாக பொழிந்தது. அப்படி வான்மழை வாழ்த்தில் தோன்றிய இயக்கம் இன்று வையகம் வாழ்த்தக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
திமுகவின் வெற்றி மூலமாக தமிழகத்தை வளர்த்தார் அண்ணா. அரை நூற்றாண்டு காலம் திமுகவையும் தமிழகத்தையும் வளர்த்தார் கலைஞர். அவரின் பாதையில் இருந்து இம்மி அளவும் விலகாமல் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். திமுக என்ற மூன்று எழுத்தில் தான் நம்முடைய மூச்சும் பேச்சும் உணர்வும் அடங்கியிருக்கிறது.
திமுக செய்த சாதனைகளுக்கு கூட்டணி கட்சிகள் உறுதுணையாக துணை நிற்கிறார்கள். எங்களுக்கு கிடைத்த புகழ் மாலைக்கு உங்களுக்கும் பங்கு இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே கொள்கை கொண்ட தோழமை இயக்கங்களாக செயல்பட்டு வருக்கிறோம்.
நாம் கூட்டணி அமைத்தபிறகு, தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இது ஒரு வெற்றிக் கூட்டணி. தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்து தான் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.
சில கூட்டணிகள் தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும். தேர்தல் முடிந்ததும் விலகிவிடுவார்கள். நாம் ஒற்றுமையாக கொள்யோடு கூட்டணி அமைத்திருப்பதால், கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது.
இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று வேதனையில் பொய்களை பரப்பி அற்பத்தனமானமான காரியங்களை செய்து தற்காலிகமாக சந்தோஷம் அடைகிறார்கள். அவர்கள் கனவு என்றைக்கும் பலிக்காது.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் கணக்கில் நாம் ஐக்கியமாகவில்லை. பாசிசமும் மதவாதமும் தமிழகத்தில் அனுமதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் ஐக்கியமாகியிருக்கிறோம்.
மாநிலங்களை ஒடுக்கி ஒற்றை ஆட்சித்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றுவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர பார்த்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. இதை சொன்னால் 1967 வரை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே மாதிரியாக தானே தேர்தல் நடந்தது என்கிறார்கள். அன்றைய இந்தியாவும் இன்றைய இந்தியாவும் ஒன்றா?
அப்போது மக்கள் தொகை என்ன? இப்போது மக்கள் தொகை என்ன? அன்றைய வாக்காளர்கள் எண்ணிக்கை என்ன? இன்றைய வாக்காளர்கள் எண்ணிக்கை என்ன?
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இவர்களால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா? நாடாளுமன்றத்திற்கே ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாதவர்கள் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முடியும்?
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே வரி என ஒரே பாட்டை பாடிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது 240 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் பாஜகவிற்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் பாஜக எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கொஞ்சம் இடைவெளி கிடைத்தால் கூட இந்தியா கூட்டணி உள்ளே புகுந்து விடும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியா? – எடப்பாடி காட்டம்!