சட்டம் – ஒழுங்கு பிரச்சனை… எதிர்க்கட்சிகளுக்கு ஸ்டாலின் பதில்!

Published On:

| By Selvam

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகவும் தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாகவும் இருப்பதால்தான், பெரிய அளவிலான சாதிச் சண்டைகளோ, மதக் கலவரங்களோ, பெரிய கலவரங்களோ, வன்முறைகளோ இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 29) தெரிவித்துள்ளார். mk stalin says there is no law

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக்கோரிக்கை இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,

ADVERTISEMENT

“அமைச்சர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது உங்கள் துறையை வளர்தெடுத்ததற்கு, உங்களின் திறமை காரணமாக இருந்தாலும், இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் மாநிலத்தின் அமைதி. அதற்கு என்னுடைய துறையான காவல்துறை தான் காரணம்.

ஏன் என்றால், அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும். தொழிற்சாலைகள் வரும். கல்வி மேம்படும், பெண்களும் இளைஞர்களும் முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுத் துறை மேம்படும். உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிக்கும். சுற்றுலா பயணிகள் வருவார்கள். கோயில்கள் தழைக்கும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நிலவும் இந்த அமைதிக்குக் காரணம், என்னுடைய துறையான, காவல்துறை. சட்டம் – ஒழுங்கை முறையாக பேணி, இந்த சாதனைகளுக்கு அடித்தளமிட்ட காவல்துறை சார்ந்த அனைவருக்கும் நானும் நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் நன்றிக்குரியவர்கள்.

சட்டம் ஒழுங்கு சீராகவும் தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாகவும் இருப்பதால்தான், பெரிய அளவிலான சாதிச் சண்டைகளோ, மதக் கலவரங்களோ, பெரிய கலவரங்களோ, வன்முறைகளோ இல்லை. கலவரங்களை தூண்டலாம் என்று சிலர் நினைத்தாலும், தமிழ்நாட்டு மக்களே அதை முறியடித்துவிடுகிறார்கள்.

ADVERTISEMENT

இதெல்லாம் நடந்திருந்தால்தான், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரி தூற்ற முடியும்? மொத்தத்தில், சட்டம் ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்கள் ஆசையில்தான் மண் தான் விழுந்திருக்கிறது.

நான் இன்னும் சொல்கிறேன், குற்றச் சம்பவம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஏதாவது சில இடங்களில் கவனக்குறைவாக சில தவறுகள் நடந்திருந்தால்கூட அது சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அதை திருத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

“நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்று பிடிவாதமாக இருப்பவன் இல்லை நான். மக்களாட்சியில் எல்லோருடைய கருத்துகளையும் கவனித்து ஆராய்ந்து சரியானவற்றை சரியான நேரத்தில் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்.

உள்நோக்கத்தோடு அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று பேசுபவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

இது, மணிப்பூர் அல்ல, இது, காஷ்மீர் அல்ல, உத்தரப் பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை. இது, தமிழ்நாடு, அதை மறந்துவிடாதீர்கள்” என்று தெரிவித்தார். mk stalin says there is no law

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share