சமூக நீதிக்கு ரோல் மாடல் தமிழ்நாடு: ஸ்டாலின் பெருமிதம்!

Published On:

| By Selvam

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு டெல்லியில் இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் முதல்வர் ஸ்டாலின் உரையை வாசித்தார்.

ADVERTISEMENT

அதில், “இன்று நாம் கூடியுள்ள வேளையில், இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு ஆற்றிய முக்கியப் பங்கை அங்கீகரிப்பது மிகுந்த பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

ADVERTISEMENT

சமூக நீதிக்கான ஒளிவிளக்காகத் தமிழ்நாடு திகழும் மரபு 1921-ஆம் ஆண்டு நீதிக்கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அறிமுகப்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையில் இருந்தே தொடங்குகிறது.

விடுதலைக்கு பிறகு, இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து வந்தபோது, திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான போராட்டங்களால் தான் முதல் அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இதற்குக் காரணம், ‘happenings in Madras’ என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதை இந்தச் சட்டத்திருத்தம் உறுதிசெய்தது.

தற்போது, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% ஆக உள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவு 50%-ஐத் தாண்டக் கூடாது எனத் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட அளவைவிடவும் கூடுதலாகத் தமிழ்நாட்டில் இது நடைமுறையில் இருக்கிறது.

குறிப்பாக, தொழில்முறைப் பட்டப்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதோடு, அவர்களுக்கான கல்வி, விடுதிச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் எனவும் அண்மையில் அறிவித்துள்ளோம்.

மேலும், கிறித்தவத்துக்கு மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது.

திமுகவின் சமூகநீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதைக் கண்டு நான் உவப்படைகிறேன்.

அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஏப்ரல் 29ல் பொன்முடி வழக்கு விசாரணை : நீதிமன்றம் உத்தரவு!

அண்ணாமலை குற்றச்சாட்டு… திமுகவுக்கு வாக்களிக்காததால் பெண் கொலையா? – போலீஸ் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share