“தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை” – முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Selvam

mk stalin says students

தமிழகத்தில் மாநில கல்வி கொள்கையை வடிவமைப்பதில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 216-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “உங்களின்‌ அறிவு, தோண்டத்‌ தோண்ட ஊற்றுநீர்‌ கிடைப்பது போல தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கவேண்டும்‌.

பட்டம்‌ வாங்குவதோடு உங்களது, படிப்பு முடிந்து விடுவது இல்லை. ஒரே பட்டத்துடன்‌ நிறுத்திவிடாதீர்கள்‌. தொடர்ந்து படியுங்கள்‌. தகுதியான வேலை கிடைத்த பிறகும்‌ படிப்பதை நிறுத்திவிடாதீர்கள்‌.

யாராலும்‌ பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான்‌. அது அறிவியல்‌ வழிப்பட்டதாக, பகுத்தறிவாக எதையும்‌ கேள்வி கேட்டு ஆராயும்‌ அறிவாக இருக்குமானால்‌ உங்களை யாராலும்‌ வெல்ல முடியாது.

நீங்கள்‌ இன்று பட்டம்‌ பெறுவதை பார்த்து உங்கள்‌ பெற்றோர்கள்‌ எத்தகைய மகிழ்ச்சியையும்‌ பூரிப்பையும்‌ அடைகிறார்களோ, அதே அளவு மகிழ்ச்சியை நானும்‌ அடைகிறேன்‌.

முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள்‌ குடும்பத்தைச்‌ சார்ந்த ஒருவனாக உங்களைப்‌ பார்த்து பெருமைப்படுகிறேன்‌.

இன்று உங்கள்‌ குடும்பத்திற்கும்‌ பல்கலைக்கழகத்திற்கும்‌ பெருமை சேர்த்துள்ளீர்கள். நீங்கள்‌, எதிர்காலத்தில்‌ நமது தமிழ்நாட்டிற்கும்‌ இந்தியாவிற்கும்‌. இதேபோல பெருமைத்தேடித்‌ தர வேண்டும்‌. அதுதான்‌ நான்‌ உங்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள்‌.

தமிழ்நாட்டின்‌ வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சிக்காக அரசு தனித்துவமான “மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை” வடிவமைப்பதில்‌ தீவிரமாகச்‌ செயலாற்றி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ புத்தாய்வுத்‌ திட்டம்‌என்ற புதிய சீர்மிகு திட்டத்தையும்‌ அறிமுகப்படுத்தியுள்ளது.

இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும்‌ கல்வி அடிப்படையில்‌ இரண்டு ஆண்டு காலம்‌ ஊதியத்துடன்‌ பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

அரசுப்‌ பள்ளிகளில்‌ படித்து கல்லூரிக்குள்‌ நுழையும்‌ மாணவிகளுக்கு மாதந்தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கும்‌ விதமாக மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டம்‌ எனும்‌ புதுமைப்பெண்‌ திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி பெண்கல்வியை ஊக்குவித்து வருகிறோம்‌” என்று தெரிவித்தார்.

செல்வம்

விமர்சனம்: வெப்!

சென்னையில் களைகட்டிய கலைஞர் மாரத்தான்: 73 ஆயிரம் பேர் பங்கேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share