கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 28) தெரிவித்துள்ளார். mk stalin says retrieve katchatheevu
சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,
“மீனவ கிராமங்களின் பங்களிப்பு!
272 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய 400 “கில் நெட்’ படகுகள், 250 ஃபைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு, 60 ஆயிரம் டன் மீன்களை கையாளக் கூடிய வசதிகளுடன் இருக்கும், இந்த சூரை மீன்பிடித் துறைமுகத்தை திறந்து வைத்து, உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கடின உழைப்பால், தியாகத்தால், நம்முடைய பண்பாட்டின் ஒரு அடையாளமாக இருக்கக்கூடிய மீனவத் தோழர்களின் வளர்ச்சிக்கு, இந்த துறைமுகம் பெரும் வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சென்னையின் வளர்ச்சியில் பழவேற்காட்டிலிருந்து கோவளம் வரைக்கும் மீனவ கிராமங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இப்படிப்பட்ட மீனவர்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது என்பது நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டை காப்பதற்கு சமம். அந்தக் கடமையை நம்முடைய திராவிட மாடல் அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.
மீனவர்களின் நலனைக் காப்பதோடு, நம்முடைய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி
உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால்தான், கடந்த ஏப்ரல் 2-ஆம் நாள் சட்டமன்றத்தில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தனித் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கும் அரசு!
கடந்த நான்காண்டுகளில், 97 நிகழ்வுகளில், 185 படகுகளும், ஆயிரத்து 383 மீனவர்களும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும், படகுகளை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இதுவரைக்கும் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னால், 76 கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, நேரில் சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். mk stalin says retrieve katchatheevu
அதேபோல, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கூட்டணி எம்.பி.,களும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி உரிமைக்குரலை எழுப்பிய காரணத்தால்தான், இதுவரைக்கும் ஆயிரத்து 354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். எஞ்சிய 29 மீனவர்களையும் மீட்டு, தாயகம் அழைத்துகொண்டு வருவதற்கான தொடர் நடவடிக்கைகளை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையிலும், 2018-ஆம் ஆண்டு முதல் சிறைபிடித்த 229 படகுகளை இலங்கை அரசு இதுவரைக்கும் விடுவிக்கவில்லை. ஒருபக்கம் அவற்றை மீட்பதற்கான அரசியல் போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும், இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதமும், 26 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீதமும் என்று 6 கோடியே 84 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம்.

இந்தத் தொகையை ஆறு இலட்சம் ரூபாயாக முதலில் உயர்த்தி, இப்போது எட்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறேன்.
2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், சிறைபிடிக்கப்பட்ட இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 73 விசைப்படகுகளுக்கு 8 லட்சம் ரூபாய் வீதமும், 9 நாட்டுப் படகுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வீதமும் உயர்த்தப்பட்ட விகிதத்தில், மொத்தம் 6 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரணம் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி, மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கும் அரசாக ஆதரவுக்கரம் நீட்டக்கூடிய அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருந்து கொண்டிருக்கிறது. இந்த இன்னல்கள் எல்லாம் தீர கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி.
மீனவர்களின் வாழ்க்கை அல்லல் நிறைந்ததாக இருக்கக் கூடாது!
கடந்த 2023-ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் மீனவ மக்களுக்காக ஒரு சிறப்பு மாநாட்டை நடத்தி அதில் நான் கலந்துகொண்டேன். ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான மீனவர் நலத்திட்டங்களை அந்த மாநாட்டில் நான் அறிவித்தேன். அந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்று நான் மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களும் பயன்பெறும்
வகையில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில், 518 கோடியே 53 லட்சம் ரூபாய்க்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
மீனவர்களின் நலனுக்காக தமிழ்நாடு அளவுக்கு எந்த மாநிலமும் இதுவரை இப்படிப்பட்ட காரியங்களை செய்ததில்லை. இதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நான் சொல்ல முடியும்.
இன்னும் சொல்கிறேன் மீனவர்களின் நலனுக்காக இன்னும் செய்ய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். mk stalin says retrieve katchatheevu
மீனவர்களின் வாழ்க்கை அல்லல் நிறைந்ததாக இருக்கக் கூடாது. உங்களின் தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். இந்தத் தொழில் எதிர்காலத்திற்கும் பயனளிக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என்றுதான் ஏராளமான திட்டங்களை உருவாக்கி இன்றைக்கு செயல்படுத்திகொண்டு இருக்கிறோம்.

கல்வியறிவுதான் எல்லோரும் கரை சேருவதற்கான கலங்கரை விளக்கம். அதனால்தான், மீனவச் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் இந்திய குடிமைப் பணியில் சேர நினைத்தால், அவர்களுக்கு பயிற்சி தர முடிவெடுத்து, இந்த ஆண்டு மட்டும் 39 மீனவ மாணவர்களுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் பயிற்சி தந்திருக்கிறோம்.
இப்படி பார்த்துப் பார்த்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லா சமூக மக்களும் முன்னேற வேண்டும் என்று எல்லோருக்கும் சம அளவில், சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம். திட்டங்களை உருவாக்கித் தருகிறோம்.
எனவே, திராவிட மாடல் அரசின் திட்டங்களை மீனவச் சமுதாயத்தின் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். mk stalin says retrieve katchatheevu