“குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” – போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published On:

| By Selvam

“Law and Order-யை பாதுகாப்பதுடன் குற்றங்களே நடைபெறாமல் தடுப்பது தான் நம்முடைய இலக்காக இருக்கவேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 நபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று (நவம்பர் 27) சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “165 ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க தமிழ்நாடு காவல்துறையில், நீங்கள் எல்லோரும் அடியெடுத்து வைக்கிறீர்கள். அதற்காக முதலில் என்னுடைய வாழ்த்துகள்.

நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், காவலர்களை போற்றும் அரசாக, காவல்துறையில் இருப்பவர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தரும் அரசாக, நேர்மையாக, திறமையாக செயல்பட்டு மக்களைக் காப்பாற்றும், காவல்துறையினருக்கு பக்கபலமாக இருக்கும் அரசாக அமைந்திருக்கிறது.

அதனால்தான், இந்தியாவிலேயே ஏன், உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையாக, தமிழ்நாடு காவல்துறை விளங்கிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் மறுக்கமுடியாது.

காவல்துறையைப் பொறுத்தவரை பொதுமக்களிடம் நெருக்கமாக இருக்கும் ஒரு துறை. அப்படிப்பட்ட துறையில் பணியாற்றவேண்டும் என்று நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த இடம் உங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை.
போலீஸ் ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்காக படித்து, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தேர்வுகள் எழுதி, அதில் வெற்றி பெற்று, பல லட்சம் பேர்களிலிருந்து, நீங்கள் மூன்றாயிரத்து 359 பேர், இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.

இதற்காக நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். அப்படிப்பட்ட உங்களுக்கும், உங்களுடைய இந்த வெற்றிக்கு துணை நின்ற குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மனமார தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது, கஷ்டப்பட்டு வந்திருக்கும் நீங்கள் மக்களுடைய கஷ்டங்களை தீர்க்க பாடுபடவேண்டும். புதிதாக தமிழ்நாடு காவல்துறையில் இணைந்திருக்கும், உங்களுக்கு ஏராளமான கடமைகள் காத்திருக்கிறது. Law and Order-யை பாதுகாப்பதுடன் குற்றங்களே நடைபெறாமல் தடுப்பது தான் நம்முடைய இலக்காக இருக்கவேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன என்றால், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தச் சமூகக் குற்றங்களை களைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சமூக நோய்கள் உங்களை தாக்காமல் தற்காத்துக்கொள்வதும் முக்கியம்.

உங்களுக்கு, சமூகநீதிப் பார்வையும் மதச்சார்பின்மையும் நிச்சயம் முக்கியம். சாதி பாகுபாடு பார்க்கக் கூடாது. அனைவருக்கும் பொதுவான நிலையில் இருந்து நீங்கள் பணியாற்றவேண்டும். உங்களுக்கு சட்டம்தான் முக்கியம். பிரச்சினை என்று உங்களிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசுங்கள். உங்களின் பேச்சும், நீங்கள் நடந்துக்கொள்வதிலும் தான், நம்முடைய பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு உருவாக்கும்.

உங்களுக்கு தெரியும். ஒரு மாநிலம் பாதுகாப்பானதாக இருந்தால் தான், தொழிற்சாலைகள் வரும். தொழில்கள் வந்தால் தான், வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்பு கிடைத்தால்தான், தங்களின் தேவைகள் நிறைவேறி மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். மக்களின் அந்த நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது. அதைத்தான் நம்முடைய திராவிட மாடல் அரசும், இங்கு வந்திருக்கும் சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்படையும் செய்துகொண்டு இருக்கிறது. அதற்கு நீங்களும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இங்கே காவல்துறை உயர் அதிகாரிகள் வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் எதிர்பார்ப்பது, உங்களின் Rank Seniority இதெல்லாம் பார்க்காமல், கடைநிலை காவலர்கள் வரை Friendly-யாக இருக்க வேண்டும். ஒரு குடும்பமாக அன்போடும் அரவணைப்போடும் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு உங்கள் மேல் பயம் இருக்கக் கூடாது, மரியாதைதான் இருக்கவேண்டும். நிறைவாக, புதிதாக பணியில் சேரும் உங்களுக்கு, நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, குற்றங்கள் குறைந்துவிட்டது என்று சொல்வது சாதனை இல்லை; குற்றங்களே இல்லை என்று சொல்வதுதான் சாதனை.

குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்வது சாதனை இல்லை. குற்றங்கள் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்று சொல்வதுதான் நம்முடைய சாதனையாக இருக்கவேண்டும். காக்கிச் சட்டையைப் போடும் இன்றைக்கு அதற்கான உறுதியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் பணியாற்றும் பகுதியில், குற்றங்கள் அனைத்தும் முழுமையாக தடுக்கப்பட்டது என்பது தான், உங்கள் Track Record-ஆக இருக்கவேண்டும். பொதுவாக ஒரு குற்றச்சாட்டை சொல்வார்கள். Duty-க்கு வரும் புதிதில்தான் Active-ஆக இருப்பார்கள். ஆனால், காலப்போக்கில் சோர்ந்துவிடுவார்கள் என்று சொல்வார்கள்.

இன்றைக்கு பணியில் சேரும்போது உங்களிடம் இருக்கும் மிடுக்கும், போலீஸ் என்ற கம்பீரமும், Retired ஆகும் வரைக்கும் இருக்கவேண்டும். உங்கள் பேரை சொன்னாலே தமிழ்நாடே பெருமைப்படவேண்டும். Personal-ஆக உங்களுக்கு நான் ஒரு Advice தர விரும்புகிறேன். Duty-யை கவனிக்கும் அதே நேரத்தில், உங்கள் உடல் நலனையும், உள்ள நலனையும் தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

குடும்பத்திற்காகவும் நேரம் செலவிடுங்கள். நவீன காலகட்டத்தில் ஏற்றதுபோல, தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நான் எதிர்பார்ப்பது, இன்றைக்கு பணிநியமன ஆணைகள் வாங்கும் நீங்கள், எதிர்காலத்தில் என்னிடம் Award வாங்கவேண்டும். அப்போது, இன்றைக்கு Appointment Order பெற்றுக் கொண்டதை நினைவுகூர்ந்து சொன்னீர்கள் என்றால், அதுதான், எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக அமைந்திட முடியும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இணையவழி விளையாட்டுகளின் தீமைகள்: பள்ளிக்கல்வித்துறை நடத்தும் கட்டுரைப் போட்டி!

டாப் 10 நியூஸ்: ராணுவ வீரர்களுக்கு குடியரசு தலைவர் மரியாதை முதல் ஹேமந்த் சோரன் பதவியேற்பு வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share