திமுக பற்றி மோடி அவதூறு பரப்புவது சரியா? – ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By Selvam

mk stalin says modi tamilnadu temple

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்‌ கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும்‌ பொய்யான செய்தியை பிரதமர்‌ கட்டமைக்க வேண்டிய அவசியம்‌ என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வள்ளலார் 200-ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் “வள்ளலார் 200” நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 5) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “இந்தக்‌ காலக்கட்டத்துக்குத்‌ தேவையான மிகமுக்கியமான வழிகாட்டிதான்‌ அருட்திரு வள்ளலார்‌. இறையியல்‌ என்பது அவரவர்‌ விருப்பம்‌. அவரவர்‌ தனிப்பட்ட உரிமை.

ஆனால்‌ அந்த இறையியலை  ஆன்மீக உணர்வை ஒரு கூட்டம்‌ அரசியலுக்கு பயன்படுத்தி, அதன்‌ மூலமாக குளிர்காயப்‌ பார்க்கிறது. அரசியல்‌ வேறு – ஆன்மீகம்‌ வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும்‌ பகுத்தறிவாளர்கள்தான்‌ தமிழ்நாட்டு மக்கள்‌. அந்த மக்களைக்‌ குழப்ப சிலர்‌ முயற்சித்து வரும்‌ காலத்தில்‌, வள்ளலார்‌ அவர்கள்‌ நமக்கு அறிவுத்‌ திறவுகோலாகக்‌ காட்சி அளிக்கிறார்கள்‌.சாதியும்‌ மதமும்‌ சமயமும்‌ பொய்யென ஆதியில்‌ உணர்த்தியவர்அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலார்‌‌, கண்மூடி வழக்கம்‌ எல்லாம்‌ மண்மூடிப்‌ போக எனப்‌ பாடியவர்‌ அவர்‌.

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச்‌ சந்தடிகளிலே கோத்திரச்‌ சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்‌ அலைந்து அலைந்து வீணே நீர்‌ அழிதல்‌ அழகலவே” – என்று பாடியவர்‌ வள்ளலார்‌ பெருமான்‌.

mk stalin says modi tamilnadu temple

அனைத்துயிரும்‌ ஒன்று என்ற வள்ளல்‌ பெருமானாரின்‌ எண்ணத்தை இன்று நாம்‌ விதைக்க வேண்டும்‌. சட்டமன்றத்‌ தேர்தலுக்கு முன்னதாக, திமுக வெளியிட்ட தேர்தல்‌ அறிக்கையில்‌ 419-ஆவது வாக்குறுதியாக ‘வடலூரில்‌ வள்ளலார்‌ சர்வதேச மையம்‌’ அமைக்கப்படும்‌ என்று சொல்லி இருந்தோம்‌. “சாதி சமய நல்லிணக்கத்தைப்‌ பேணும்‌ வகையில்‌ அருட்பிரகாச வள்ளலாரின்‌ சமரச சுத்த சன்மார்க்கப்‌ போதனைகளைப்‌ போற்றும்‌ வகையில்‌, இது அமையும்‌” என்று சொல்லப்பட்டது.

அந்த மையத்தின்‌ ஆணையினை இன்று உங்கள்‌ முன்னால்‌ வழங்கியிருக்கிறோம்‌. விரைவாக அந்தப்‌ பணிகள்‌ எல்லாம்‌ மேற்கொள்ளப்பட்டு மிகச்‌ சிறப்பாக அது கட்டிமுடிக்கப்படும்‌. சென்னையில்‌ முதன்முதலாக வள்ளலார்‌ நகரை உருவாக்கியவர்‌ முதலமைச்சராக இருந்த தலைவர்‌ கலைஞர்‌‌. நாம்‌ ஆட்சிக்கு வந்ததும்‌ வள்ளலார்‌ பிறந்தநாளை தனிப்பெரும்‌ கருணை நாளாக அறிவித்துக்‌ கொண்டாடி வருகிறோம்‌. வள்ளலாரின்‌ அறிவு ஒளியில்‌ இதுபோன்ற பிளவுசக்திகள்‌ மங்கிப்‌ போவார்கள்‌. நாம்‌ வள்ளலாரை உயர்த்திப்‌ பிடிப்பது, சிலருக்கு பிடிக்கவில்லை.

பெரியாரையும்‌ போற்றுகிறோம்‌, வள்ளலாரையும்‌ கொண்டாடுகிறார்களே, என்பதுதான்‌ அவர்களால்‌ ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல்‌ அரசு என்று சொல்லிக்‌ கொள்கிறார்கள்‌. கோவில்கள்‌ அனைத்தையும்‌ பொன்போல போற்றிப்‌ பாதுகாக்கிறார்களே இவர்களை என்ன சொல்லி குற்றம்‌ சாட்டுவது என்று சிலருக்கு குழப்பமாக இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “இரண்டு நாட்களுக்கு முன்பு, தெலங்கானா மாநிலத்தில்‌ தேர்தல்‌ பரப்புரை செய்ய வருகை தந்த பிரதமர்‌ நரேந்திர மோடி

தமிழ்நாட்டுக்‌ கோவில்களைப்‌ பற்றிப்‌ பேசி இருக்கிறார். அவர்‌ மத்தியப்‌ பிரதேசத்திற்கு சென்று பேசினாலும்‌ அந்தமானில்‌ பேசினாலும்‌  தெலங்கானாவில்‌ பேசினாலும்‌ தமிழ்நாட்டைப்‌ பற்றித்‌ தான்‌ பேசுகிறார்‌. அவரால்‌ மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. “தமிழ்நாட்டில்‌ உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில்‌ சொத்துகள்‌ மற்றும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது” என்று பகிரங்கமாக அவர்‌ பேசி இருக்கிறார்‌. இந்தக்‌ குற்றச்சாட்டை நான்‌ திட்டவட்டமாக மறுக்கிறேன்‌.

பிரதமருக்கு நான்‌ எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதனை ஒரு தமிழ்‌ நாளிதழ்‌ தலைப்புச்‌ செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழின்‌ நிர்வாகி ஒருவர்‌, புகழ்பெற்ற திருக்கோவில்‌ ஒன்றில்‌ அறங்காவலர்களில்‌ ஒருவராக இருக்கிறார்‌.

அப்படியானால்‌ அவர்‌, அந்த கோவிலை ஆக்கிரமித்துள்ளார்‌ என்று அர்த்தமா? அதே நாளிதழில்‌ கடந்த ஜுன்‌ மாதத்தில்‌ அறநிலையத்‌ துறையின்‌ சிறப்பான செயல்பாடு பற்றி ஒரு கட்டுரையும்‌ வந்திருக்கிறது.

அந்த கட்டுரையை நான்‌ படிக்கிறேன்‌. அந்தக்‌ கட்டுரைக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய தலைப்பு: “கோவில்‌ உண்டியல்‌ பணம்‌ எங்கும்‌ போகாது” யூகப்‌ பேச்சுக்களும்‌, உண்மை நிலையும்‌ அதில்‌ அடங்கும்‌. கோவில்களில்‌ உண்டியல்‌ வைக்கப்பட்ட காலம்‌ முதல்‌ இன்று வரை பக்தர்களின்‌ காணிக்கைகள்‌ பத்திரமாகத்தான்‌ இருக்கின்றன. மிகுந்த முன்னெச்சரிக்கையுடனே கையாளப்படுகின்றன. காணிக்கை குறித்த பதிவேடுகள்‌ எண்ணி முடிக்கப்பட்ட மறுநாளே அறநிலையத்‌ துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்குள்ள பதிவேடுகளில்‌ ஏற்றப்படுகின்றன. அதிலிருந்து ஒரு நகல்‌ தணிக்கைப்‌ பிரிவுக்கும்‌ அனுப்பப்படுகிறது. தனியார்‌ நிறுவனங்களில்‌ இல்லாத அளவுக்குக்‌ கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ கடைப்பிடிக்கப்படுகின்றன” இப்படிச்‌ சொல்வது இந்த ஸ்டாலின்‌ அல்ல, அந்த நாளிதழின்‌ வெளியீட்டாளரே சொல்லி இருக்கிறார்‌.

mk stalin says modi tamilnadu temple

இன்னொன்றையும்‌ சொல்கிறார்‌ அவர்‌… எந்த நாளிதழ்‌ என்று பெயர்‌ சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கே புரியும்‌. அதில்‌ என்ன சொல்கிறார்‌ என்றால்‌, “ஒரு சிலர்‌ அவரவர்‌ கற்பனைச்‌ சிந்தனைக்கு ஏற்றாற்போல உண்டியல்‌ காணிக்கைகள்‌ இந்த அமைச்சருக்கு பத்து சதவிகிதம்‌ போகிறது – அந்த அமைச்சருக்கு 10 சதவிகிதம்‌ போகிறது எனச்‌ சொல்வது – அவர்களின்‌ அறியாமையன்றி வேறில்லை” – என்று சொல்வதும்‌ இந்த ஸ்டாலின்‌ அல்ல, அந்த நாளிதழின்‌ வெளியீட்டாளரே சொல்லி இருக்கிறார்‌. அதே நாளேட்டில்தான்‌ பிரதமர்‌ சொன்ன பொய்யை தலைப்புச்‌ செய்தியாக போட்டிருக்கிறார்கள்‌.

பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின்‌ பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநிலத்தின்‌ செயல்பாடு குறித்து  இன்னொரு மாநிலத்தில்‌ போய்‌ பேசுவது முறையா? தர்மமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல்‌ கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும்‌ வருமானங்கள்‌ முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும்‌ பொய்யான செய்தியை இந்திய நாட்டின்‌ பிரதமர்‌ கட்டமைக்க வேண்டிய அவசியம்‌ என்ன? அவர்‌ யாருக்காக பேசுகிறார்‌? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்‌? இந்த இரண்டு ஆண்டு காலத்தில்‌ 3,500 கோடி ரூபாய்க்கும்‌ அதிகமான மதிப்பிலான கோவில்‌ நிலங்கள்‌ மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? சொல்லுங்கள்‌ இது தவறா? 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம்‌. இது தவறா?

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச்‌ சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல்‌ சீர்செய்வதற்கும்‌ 100 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவறா?

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ வசிக்கும்‌ பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள்‌ மற்றும்‌ 1250 கிராமப்புறத்‌ திருக்கோயில்களின்‌ திருப்பணிகளையும்‌ சேர்த்து இந்த நிதியாண்டில்‌ மட்டும்‌ 5078 திருக்கோயில்களில்‌ திருப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன. இது தவறா?

எதைத்‌ தவறு என்கிறார்‌ பிரதமர்‌? பிரதமர்‌ அவர்களின்‌ பார்வையில்தான்‌ தவறு இருக்கிறது. எங்களைப்‌ பொறுத்தவரையும்‌ – “எல்லார்க்கும்‌ எல்லாம்‌” என்ற பொதுத்‌ தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம்‌. கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம்‌. அதனால்தான்‌ கருணை வடிவிலான வள்ளலாரைப்‌ போற்றுகிறோம்‌.

அதற்கு அடையாளமாக வள்ளலார்‌ – 200 நிகழ்ச்சியில்‌ ஒர்‌ அறிவிப்பை நான்‌ வெளியிட விரும்புகிறேன்‌. கடலூர்‌ மாவட்டத்‌ தலைநகரில்‌ 17 ஏக்கரில்‌ அமைக்கப்பட இருக்கின்ற புதிய பேருந்து நிலையத்திற்கு “அருள்பிரகாச வள்ளலார்‌” பெயர்‌ சூட்டப்படும்‌ என்பதை மகிழ்ச்சியோடும்‌ பெருமையோடும்‌ இந்தத்‌ தருணத்தில்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. வாடிய பயிரைக்‌ கண்டபோதெல்லாம்‌ வாடினேன்‌ என்ற வள்ளலார்‌ வழியில்‌, வாடிய உயிர்கள்‌ அனைத்தையும்‌ வாழ வைக்கும்‌ ஆட்சியாக திமுக ஆட்சி என்றைக்கும்‌ செயல்படும்‌” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ராகி வெங்காய தோசை

லியோ ட்ரெய்லரில் பிரியா ஆனந்த்..! நோட் பண்ணுங்கப்பா..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share