“கலைஞரின் சாதனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” – ஸ்டாலின்

Published On:

| By Selvam

கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், கலைஞர் நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்  இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “80 ஆண்டுகால பொதுவாழ்வு, அரை நூற்றாண்டு காலம் திமுகவின் தலைமைப் பொறுப்பு, 5 முறை முதலமைச்சர், 13 முறை தேர்தல் களம் கண்டு அனைத்திலும் வெற்றி, ஒரு முறை சட்டமேலவை உறுப்பினர், இந்திய அரசியலில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் வழிகாட்டிய மூத்த தலைவர், பல பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தீர்மானித்தவர், இலக்கியவாதி, கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை – வசனகர்த்தா, பத்திரிகையாளர் என இத்தனைப் பேராற்றலையும் ஒருங்கே பெற்ற ஒருவர், நம் கலைஞரைத் தவிர வேறு எவர் இருக்கிறார்? உலகளவில் தேடிப் பார்த்தாலும் இந்தளவுக்குப் பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரைக் காண்பது அரிது.

நூற்றைம்பது ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத் தனது 80 ஆண்டு கால பொதுவாழ்வில் ஓய்வின்றி உழைத்து நிறைவேற்றிய கலைஞர் நூற்றாண்டை திமுக சார்பிலும், அவரது வழியில் நடக்கும் நமது திராவிட மாடல் அரசின் சார்பிலும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.

ADVERTISEMENT

அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த அண்ணா அறிவாலயத்தில் நாம் கூடியிருக்கிறோம். இந்த அறிவாலயம் அமைந்துள்ள அண்ணா சாலையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளையும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களையும் உருவாக்கியவர் கலைஞர்.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல், குமரி முனையில் உள்ள  திருவள்ளுவர் சிலை வரை தமிழ்நாடெங்கும் பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கியவர் கலைஞர்.

ADVERTISEMENT

மினி பஸ், மெட்ரோ ரயில், டைடல் பார்க், உழவர் சந்தை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் – என நாம் பட்டியலிடத் துவங்கினால் இன்று முழுவதும் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். இப்படி திட்டங்கள் பல தீட்டி ஒவ்வொரு தமிழரும் சுயமரியாதையுடன் வாழ ஓயாது பாடுபட்டவர் கலைஞர்.

இந்தியாவுக்கே முன்னோடியாக அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களைத்தான், மத்திய அரசுகள் நடைமுறைப்படுத்தின.

இப்போதும் நடைமுறைப்படுத்துகின்றன. கலைஞரின் வரலாற்றை மறைக்க, திரித்து எழுதும் கூட்டத்திடமிருந்து, உண்மை வரலாற்றை நாம் காப்பாற்றிட வேண்டும் என்றால், திரும்பத் திரும்ப கலைஞரின் உழைப்பை, போராட்டத்தை, சாதனைகளைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதனால்தான் தலைமைக் கழகம், மாவட்டக் கழக நிர்வாகங்கள் மட்டுமின்றி கழகத்தின் சார்பு அணிகளுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தலைமைக் கழகத்தால் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு அதன் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஊராக இருந்தாலும் அதில் கலைஞர் ஆட்சியின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கும். அவர் கொண்டு வந்த திட்டங்களால் பயன் பெற்றவர்கள் இருப்பார்கள். அதையெல்லாம் நீங்கள் கவனித்து, அந்தந்த ஊர் மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். காணொலிகளாக, துண்டுப் பிரசுரங்களாக வழங்க வேண்டும்.

எல்லா இடத்திலும் எல்லோர் மனதிலும் கலைஞரின் பன்முக ஆற்றலை, சாதனைகளை, அதனால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பெற்ற நன்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை மட்டுமல்ல, நமது இனம் – மொழி வாழ அயராது பாடுபட்டவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். 2024 தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன், இதனை முழுமையாக நிறைவற்றிட வேண்டும்.

கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் இதே வேளையில்தான், வரும் ஆண்டு திமுகவின் 75-ஆவது ஆண்டு விழாவையும் கொண்டாட இருக்கிறோம். எனவே, செப்டம்பர் 17-க்குப் பிறகு, இந்நிகழ்ச்சிகளில் பவள விழாவையும் சேர்த்தே கொண்டாடுங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, 2024 ஜூன்-3 அன்று, நூற்றாண்டு நாயகர் கலைஞருக்கு அவர் பிறந்தநாளில் நாம் நன்றிக் காணிக்கை செலுத்துவோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

உத்தரபிரதேச ஆளுநரை சந்தித்த ரஜினி

அதிமுக மாநாடு: தீவிர ஏற்பாடு!

 

Photo of author
Selvam

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share