ஒரு எதிர்க்கட்சியை போல சோதனைகளும் நெருக்கடிகளும் நம்மை தொடர்ந்து வருகிறது என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஜூன் 1) தெரிவித்தார்.
மதுரை உத்தங்குடியில் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, mk stalin says dmk face struggles like opposition
“ரத்தம் சிந்தி திமுக வளர்க்கப்பட்ட களம் தான் மதுரை மண். இந்த கட்சிக்காக உழைத்த மதுரை முத்துவுக்காக நேற்று சிலையை திறந்து வைத்தோம். மதுரையில் திமுக பொதுக்குழு நடப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
ஏழாவது முறையாக மதுரையில் பொதுக்குழு நடைபெற்று வருகிறது. ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க அடிகோலக்கூடிய பொதுக்குழு தான் இது. சித்திரை திருவிழா நடைபெறும் மதுரையில் திமுகவின் முத்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

பெரியார், அண்ணா, கலைஞர், கருப்பு சிவப்புக்கொடி, திமுக, உதயசூரியன் சின்னம் தான் நம் உயிர். இந்த உயிர்களை கொண்டு உயிரினும் மேலான தமிழகத்தை, இதுவரை காத்தது போல இனியும் காப்போம் என உறுதியெடுப்போம்.
திமுக என்பது வழக்கமான அரசியல் கட்சி அல்ல. வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள் வரும், போகும். ஆனால், கொள்கைக்காக தோன்றி லட்சியங்களுக்காக தியாகங்கள் செய்து மக்களுடைய ஆதரவை பெற்ற அரசியல் இயக்கம். இந்தியாவின் முதல்முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்த இயக்கம் திமுக.
எத்தனை சோதனைகள், நெருப்பாறுகள் வந்தாலும் அதில் எதிர்நீச்சல் போட்டு உயர்ந்து நிற்கும் கட்சி தான் திமுக. தடம் மாறாத கொள்கை கூட்டம் நாம். அதனால் எந்த கோமாளி கூட்டமும் நம்மை வெல்ல முடியாது.
நான் தொடக்கத்தில் சொன்னது போல, இது வழக்கமான பொதுக்குழு அல்ல. ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் பொதுக்குழு. அடுத்த ஆண்டு இதே நேரத்தில், ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்று தலைப்பு செய்தி வந்திருக்கும். அதற்கான வியூகத்தை வகுப்பது தான் இந்த பொதுக்குழு.
நான் மமதையில் பேசுபவன் அல்ல, கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவக்குரல் சொல்பவன் அல்ல. எந்தக்காலத்திலும் எனக்கு ஆணவமும் மமதையும் வராது. என்னைப் பொறுத்தவரையில் பணிவு தான் தலைமை பண்பின் அடையாளம்.
சொல்லை விட செயலே பெரிது, வரலாறு காணாத வெற்றி பெறுவோம் என்று நான் சொல்வது உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் தான். திமுக இதுவரை அடைந்த வெற்றிகளுக்கு நீங்கள் தான் காரணம். நீங்கள் இல்லாமல் திமுகவும் இல்லை, நானும் இல்லை. என்னை தலைவராக உருவாக்கியது நீங்கள் தான். முதல்வராக உருவாக்கியதும் நீங்கள் தான்.
உலகத்தில் எந்த கட்சிக்கும் இப்படிப்பட்ட உழைப்பாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். தொண்டர்களால் தான் 75 ஆண்டுகளை கடந்து நூற்றாண்டை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம்.
சூரியன் நிரந்தரமானது, அதேபோல திமுகவும் நிரந்தரமானது. திமுக எப்படி நிரந்தரமானதோ, அதேபோல நமது ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை நம்மால் தான் உருவாக்க முடியும்.
அது சாதாரணமான விஷயம் இல்லை. நாம் அனுபவிக்கும் சோதனைகளும் நெருக்கடிகளும் சாதாரணமானது அல்ல. நாம் இன்று மாநிலத்தின் ஆளும் கட்சி. ஆனால், ஒரு எதிர்க்கட்சியை போல சோதனைகளும் நெருக்கடிகளும் நம்மை தொடர்ந்து வருகிறது.
மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும், எதிர்க்கட்சியை போல போராட வேண்டியுள்ளது. இது தமிழ்நாட்டின் நலனுக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் நடைபெறக்கூடிய போராட்டம். அரசியல் எதிரிகள், கொள்கை எதிரிகள், இணைய எதிரிகள், துரோகிகள் என அனைத்து பக்கமும் எதிரிகள். இதற்கு மத்தியில் கட்சியையும் ஆட்சியையும் நடத்தும் பொறுப்பு என் தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அவதூறுகள், பொய்கள் மூலமாக நம்மை வீழ்த்த பார்க்கிறார்கள். அதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். நான் ஏற்கனவே, சொன்னதைப் போல, திமுகவுக்கு என்றைக்கும் ஊடக சொகுசு இருந்ததில்லை. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக மீது தான் அதிக விமர்சனங்கள் வரும்.
திமுகவை ஆதரிப்பவர்கள் கூட சில நேரங்களில் எதிரிகள் பரப்பும் போலித்தகவல்களை நம்பி, அவர்களும் நம்மை தாக்கும் நிலமை இன்றைக்கும் சமூக ஊடகங்களில் பார்க்கிறோம். ஏன் நம் ஆதரவு ஆட்களே தங்களை அறியாமல் இதுபோன்று செய்கிறார்கள்.
ஆனால், உண்மை நிலவரம் என்ன? திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு அலைகளை விட ஆதரவு அலைகள் தான் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. அதை வெளியே தெரியாமல் திசைதிருப்ப நினைக்கிறார்கள்.
கடந்த அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியால் அதல பாதாளத்திற்கு சென்ற தமிழகத்தை மீட்டிருக்கிறோம். ஒன்றிய பாஜக அரசு நம் உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையும் எதிர்த்து இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறோம்.
நமக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், தமிழகத்தை பொருளாதார ரீதியாக முடக்க நினைத்தாலும், அந்த நெருக்கடிகளையெல்லாம் கடந்து மக்களுக்கான திட்டங்களை நாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
பொருளாதார ரீதியான முட்டுக்கட்டைகள், ஆளுநர் ரீதியான முட்டுக்கட்டைகள் என எத்தனை எத்தனை தடைகளை ஒன்றிய பாஜக அரசு போட்டாலும் அதையெல்லாம் கடந்து இன்று இந்தியாவின் வளர்சியில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கிறது. அதனால் வழக்கத்திற்கு மாறாக, திமுக ஆட்சிக்கு எதிராக அவதூறு அம்புகளை எதிராளிகள் வீசுவார்கள்.
கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில், தீய எண்ணத்துடன் திமுக கூட்டணிக்கு குறைவாகவும் அதிமுக கூட்டணிக்கும் புதிதாக வருகிறவர்களுக்கு அதிக வாக்கு சதவிகிதத்தை போட்டு மக்கள் மத்தியில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள்.
சட்டம் ஒழுங்கு சரியில்ல, முறைகேடுகள் அதிகரித்திருக்கிறது என பச்சை பொய்களை சமூக ஊடகங்கள் மூலமாக விதைப்பார்கள்” என்று தெரிவித்தார். mk stalin says dmk face struggles like opposition