வக்ஃப் மசோதா… “ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு” – ஸ்டாலின்

Published On:

| By Selvam

திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் நாளை (மார்ச் 7) வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 6) தெரிவித்துள்ளார்.

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். DMK approach supreme court

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “நீலகிரி மக்களை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் பொறாமையாக தான் இருக்கிறது. கொளுத்தும் கோடை வெப்பத்திற்கு ஒரு இளைப்பாறலாக நீலகிரி மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொள்கிறேன்.

இந்த விழாவை மிகுந்த எழுச்சியோடு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிற மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாமிநாதன், அரசு கொறடா ராமச்சந்திரன், கலைஞரால் தகத்தகாய சூரியன் என்று அடையாளம் காணப்பட்டு இன்றைக்கு இந்தியாவே சிறந்து பார்க்கும் அறிவில் சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழும் எம்.பி ஆ.ராசா அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

கலைஞர் முதல்வராக இருந்தபோதும், நான் தற்போது முதல்வராக இருக்கும்போதும் அடிக்கடி சந்திக்கும்போதெல்லாம் நீலகிரி தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை கேட்டு வாங்கிவிடுவார். ஒன்றிய அமைச்சராக இருந்தபோதும் இந்த தொகுதிக்கு ஏராளமான பணிகளை செய்து கொடுத்திருக்கிறார். அதனால் தான் எப்போதும் அவர் உங்கள் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு நிலச்சரிச்சரிவு ஏற்பட்டபோது இரண்டு நாட்களாக இங்கேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்தேன். ஆ.ராசா, திராவிடமணி, ஆர்.கணேசன், ராமச்சந்திரன், முபாரக் ஆகியோர் என் கூடவே இருந்தார்கள். அன்றைய தூக்கத்தில் இருந்த ஆட்சியாளர்களை எழுப்பி நீலகிரிக்கு வரவைத்தது திமுக தான். நாம் கேள்வி எழுப்பிய பிறகு தான், சில மணி நேரங்கள் ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டு போனார் அன்றைய முதல்வர். இதுதான் மக்களுடன் இருக்கும் திமுகவுக்கும் மக்களை ஏமாற்ற நினைக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு.

உதகையில் இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்திருக்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில் இதை அறிவித்ததோடு எந்த பணியும் நடக்கவில்லை.

நாம் ஆட்சியமைத்ததும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கடி இந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். ஏனென்றால் மலைப்பகுதியில் இப்படி ஒரு மருத்துவமனையை கட்டுவது எளிதல்ல. அதையெல்லாம் கடந்து இந்த மருத்துவமனையை கட்டிமுடித்து திறந்து வைத்திருக்கிறோம்.

உங்களுடைய மனம் குளிர்விக்கும் விதமான 6 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். இல்லையென்றால், ஆ.ராசாவும் நீங்களும் என்னை விட மாட்டீர்கள்.

நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாக வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு கூடலூரில் ரூ.26.6 கோடி செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும்.

ரூ.10 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

நீலகிரியில் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் என்ற வகையில் ரூ.5 கோடி மதிப்பில் 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்.

ஊட்டியில் சுற்றுலாக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடி செலவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்.

சூழலிலியல் இயற்கை சுற்றுலா மையம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் ரூ.5.75 கோடி செலவில் 23 சமுதாயக்கூடங்களும், நகர்ப்புறங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு 200 வீடுகளும் கட்டித்தரப்படும்.

நீலகிரி அரசு விழாவில் கலந்து கொள்வதால், பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதை ஏற்கனவே மோடிக்கு தெரிவித்துவிட்டேன். தமிழக அரசு தரப்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நள்ளிரவு 2 மணிக்கு நிறைவேற்றியுள்ளனர். தமிழக அரசும் திமுகவும் கடுமையாக எதிர்த்தோம். நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற ஆ.ராசாவும், அப்துல்லாவும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், எதையும் காதில் வாங்காமல் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையில் ஆ.ராசா அரை மணி நேரத்திற்கும் மேலாக நெருப்பு பறக்க பேசியது தலைப்பு செய்தியானது. மாநிலங்களவையில் திருச்சி சிவா உணர்ச்சிப்பூர்வமாக 20 நிமிடத்திற்கும் மேலாக பேசியிருக்கிறார்.

இதுஒருபுறமிக்க அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டும் தான் பேசினார். கிரிக்கெட்டில் முதல் பாலில் டக் அவுட்டாகிற பேட்ஸ்மேன் கூட இதை விட அதிக நேரம் களத்தில் இருப்பார்கள். அப்படி பேசிய ஒரு நிமிடத்தில் அதிமுக இந்த மசோதாவை எதிர்க்கிறதா அல்லது ஆதரிக்கிறதா என்று சொல்லவேயில்லை.

ஆனால், நாங்கள் அப்படியில்லை. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து சட்டமன்றத்திற்கு கருப்பு பேட்ச் அணிந்து சென்றோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அறிவித்தோம். நாளைய தினம் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் வரவில்லை. அவரது மறைவிற்கு பிறகு தான் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நீட் தேர்வை அனுமதித்தார்கள். தமிழக மாணவ செல்வங்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னாள் நீட் விலக்கு தந்தால் தான் கூட்டணி என்று அறிவிக்க தயாரா?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். DMK approach supreme court

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share