ஆமாம்… நாங்கள் வாரிசுகள் தான்… நீங்கள் கோட்சேவின் வாரிசுகளா? : ஸ்டாலின் காட்டம்!

Published On:

| By Kavi

mk stalin reply to modi in trichy meeting

நாங்கள் வாரிசுகள் தான், நீங்கள் கோட்சேவின் வாரிசுகளா என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் இன்று (ஜூலை 26) திமுக பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நமது அணி வெற்றி பெற வேண்டும்.

பாஜக ஆட்சி தொடர்ந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. தமிழ்நாடோ, அதில் சட்டமன்றமோ, அமைச்சர்களோ, உள்ளாட்சி அமைப்புகளோ இருக்காது. இது எல்லா மாநிலத்திலும் நடக்கும்.

புதிய நாடாளுமன்றத்தில் 888 இருக்கைகளை போட்டிருக்கிறார்கள். எதற்காக?. நாடாளுமன்றத்தில் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கைகளை போட நினைக்கிறார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கப்பார்க்கிறார்கள். குடும்ப கட்டுப்பாட்டு முறையை முறையாக கடைபிடித்த தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படும்.

வடமாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். வடமாநிலங்களின் எம்.பி.க்களை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் குரலை தடுக்க பார்க்கிறார்கள். இதனால் தான் இது முக்கியமான தேர்தல் என்று நான் சொல்கிறேன். ஒற்றைக் கட்சி ஆட்சி அமைந்தால் ஒரே ஒருவர் கையில் அதிகாரம் போய்விடும். ஒற்றைக் கட்சியாக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்.

அதற்காக 26 கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்தியாவை காப்பாற்ற வேண்டியது இந்த கூட்டணிதான். இதனை மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நோக்கத்தை பற்றி நான் ஓராண்டு காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதனால் என் மீது மோடிக்கு கோபம். அதனால் தான் மத்தியப் பிரதேசம் என எங்கு சென்றாலும் திமுகவை திட்டுகிறார். இது வாரிசுகளுக்கான கட்சி என்று சொல்லி சொல்லி எங்களுக்கு புளித்து போய்விட்டது.

ஆமாம் நாங்கள் வாரிசுகள் தான். பெரியார், அண்ணா, கலைஞரின் வாரிசுகள் நாங்கள். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்.

பாஜக யாருடைய வாரிசு? கோட்சேவின் வாரிசு என்று உங்களால் சொல்ல முடியுமா? அந்த தைரியம் உங்களுக்கு உண்டா?

அன்று குஜராத்தில் என்ன நடந்ததோ அதை இன்று மணிப்பூர் நினைவூட்டி கொண்டிருக்கிறது. மே மாதம் தொடங்கிய வன்முறைய இன்று ஒன்றிய, மாநில பாஜக அரசால் அடக்க முடியவில்லை.

வன்முறையாளர்களும், மணிப்பூர் போலீசாரும் கைக்கோர்த்துக்கொண்டு மக்களை தாக்கிக்கொண்டிருக்கிறாகள். இதை நான் சொல்லவில்லை. பாஜக எம்.எல்.ஏவே சொல்லியிருக்கிறார்.

பாஜக ஆட்சி தொடர்ந்தால் சமூக நீதி, ஜனநாயகம், அரசியலமைப்பு போன்றவற்றை யாராலும் காப்பாற்ற முடியாது. பாஜகவின் கொத்தடிமை கூட்டமாக அதிமுக செயல்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மணிப்பூர் விவகாரத்தில் அந்த மாநில முதலமைச்சரை கண்டித்தாரா வாய்கூட திறக்கவில்லை.

பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி மோடி பேசுகிறார்கள். சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு அதற்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றம் சென்றவர் எடப்பாடி பழனிசாமி. ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிமுக தமிழ்நாட்டை பாஜகவுக்கு கடந்த காலங்களில் அடிமையாக்கியது.

கர்நாடக மக்கள் ஊழல் காரணமாகத்தான் பாஜகவை தோற்கடித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவை வீழ்த்த வேண்டும்.

அனைத்து மாநிலமும் மணிப்பூர் ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும்” என்று ஆவேசமாக பேசினார் மு.க.ஸ்டாலின்.

பிரியா

ஆளுநரால் வாக்குகள் அதிகரிக்கும் : மு.க.ஸ்டாலின்

“அனைவரிடமும் சமூகவலைதள கணக்கு” : ஸ்டாலினின் டிஜிட்டல் பரப்புரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share