“விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என்று திருமாவளவனே தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்” என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) தெரிவித்தார்.
வரும் அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக மகளிரணி சார்பில் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் சாதிய, மதவாத சக்திகள் தவிர அனைவரும் இணையலாம், அதிமுகவும் பங்கேற்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
இந்த விவகாரம் அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, “அதிமுகவை திருமா அழைப்பது அவரது விருப்பம். இதுதொடர்பாக அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.
அதேபோல மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுக கூட்டணியில் ஒரு பிசுறு கூட இல்லாமல் முதல்வர் கொண்டு போகிறார்” என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திருமாவும் ஸ்டாலினும் நண்பர்கள். அவர் எங்கள் கூட்டணியை விட்டு எங்கேயும் போக மாட்டார்” என்றும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விளக்கமளித்த திருமா, “கட்சி சார்ந்த அரசியல் என்பது வேறு, சமூகம் சார்ந்த அரசியல் என்பது வேறு. திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மதுவிலக்கில் உடன்பாடு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அதிமுகவும் பங்கேற்கலாம் என்றேன். இந்த மாநாட்டையும், 2026 சட்டமன்ற தேர்தலையும் முடிச்சு போட வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்காவில் இருந்து இன்று சென்னை திரும்பிய ஸ்டாலினிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “இது அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் மாநாடு அல்ல. இதற்கும் அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என்று திருமாவளவனே தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…