காயிதே மில்லத் பிறந்தநாள்… ஸ்டாலின் மரியாதை!

Published On:

| By Selvam

mk stalin pays respect to kayide millat

மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. mk stalin pays respect to kayide millat

அந்தவகையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 5) காயிதே மில்லத் 130-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர்கள் ஆவடி நாசர், தங்கம் தென்னரசு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

காயிதே மில்லத் 5.6.1896 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் முகம்மது இஸ்மாயில். காயிதே மில்லத்தின் சமுதாயப் பணி அவர் அரசியல் பணிக்கு வருவதற்கு காரணமாக இருந்தது.

அரசியல் வாழ்க்கையில் தம் கண்ணியத்தையும், நேர்மையையும், கடமையையும் கட்டிக் காத்துத் தேசப்பணியையும், மார்க்கப் பணியையும் தொடர்ந்தார்.

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1920ஆம் ஆண்டு முதல் 16 ஆண்டு காலம் காங்கிரசின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்.

1936ஆம் ஆண்டு சென்னை முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், எதிர்க் கட்சித் தலைவர், மத்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர்ந்த பொறுப்புகளை ஏற்று மக்கள் பணி ஆற்றியுள்ளார்.

இராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோரின் நண்பராக விளங்கிய காயிதே மில்லத் 5.4.1972 அன்று இயற்கை எய்தினார்.காயிதே மில்லத் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்தபோது, இந்தியாவின் பொது மொழியாக ஆட்சி மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் எனும் கருத்து எழுந்தது. அப்போது, அதனைக் கடுமையாக எதிர்த்தார் காயிதே மில்லத்.

இந்தி கூடாது என்றால், இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஏற்பது என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கேட்டனர். அப்போது, வளம் செறிந்ததும் தொன்மை நிறைந்ததுமான எனதருமை தாய்மொழி தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக்கலாம் என்று ஆணித்தரமாக முழங்கித் தம் தமிழ்ப் பற்றை ஆழமாகப் பதிவு செய்தவர் காயிதே மில்லத். mk stalin pays respect to kayide millat

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share