தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 1) காலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெறுகிறார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் காலை 8 மணியளவில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து 8.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அங்கிருந்து கலைஞரின் கோபாலபுரம் இல்லம் சென்று, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். தொடர்ந்து கலைஞரின் சி.ஐ.டி. காலனி இல்லம் மற்றும் பேராசிரியர் இல்லத்துக்கு சென்று அவர்களது திருவுருப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் ‘கேக்’ வெட்டி குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தொடர்ந்து காலை 9 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார். அறிவாலயம் வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் வர உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திமுகவினர் வழங்க உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா