வக்ஃப் சட்டத்தை எதிர்ப்பது ஏன்? – சட்டமன்றத்தில் காரணங்களை அடுக்கிய ஸ்டாலின்

Published On:

| By Selvam

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 27) அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். stalin against waqf amendment

அப்போது பேசிய ஸ்டாலின், “ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு எதை செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் தான் திட்டங்களை தீட்டுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டமானது சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சித்தது. இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி அளிக்காமல் வஞ்சிக்கிறது. சமூக நீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது.

நீட் மற்றும் தேசிய கல்வி கொள்கையானது அடித்தட்டு மக்களை பாதிப்பதாக அமைவதை அனைவரும் அறிவோம். இந்த வரிசையில் கொண்டு வரப்படும் வக்ஃப் வாரிய சட்டமானது சிறுபான்மை இஸ்லாமிய மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இம்மாமன்றத்தில் நான் முன்மொழிகிறேன்.

வக்ஃப் சட்டமானது 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய பாஜக அரசு சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான முன் வரைவினை கடந்த 08.08.2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

வக்ஃப் விவகாரத்தில் அரசியல் தலையீட்டை ஆதரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டத்திருத்தங்கள் இருந்ததால் அதை திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.

எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்விற்கு இதனை அனுப்பினார்கள். இந்த சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய சில மோசமான விளைவுகளை இம்மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் மூலம் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்ஃப் நிறுவனங்களின் சுயாட்சியை பாதிக்கும்.

வக்ஃப் நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம் நில அளவை ஆணையரிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக வக்ஃப் நிலங்கள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் வக்ஃப் வாரியத்திடமிருந்து நீக்கப்பட்டுள்ளது.

அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃப் சொத்து இந்த சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்று இந்த சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.

இஸ்லாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்கு தனி சொத்து வாரியம் அமைக்க முயற்சி செய்கிறார்கள்.

மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாநில வக்ஃப் வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இந்த சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகவும்.

இந்த அடிப்படையில் வக்ஃப் நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை அதிகரிப்பதாக மத்திய அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிப்பதாக உள்ளது. இதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் தமிழக அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள திமுக உறுப்பினர்களான முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கடுமையாக தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முடிவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தநிலையில், வக்ஃப் சட்டத்திருத்தமானது எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இந்த சட்டத்திற்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரமாகும்.

எனவே, கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த சட்டமுன்வடிவினை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என்று தெரிவித்தார். stalin against waqf amendment

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share