கலைஞர் நூற்றாண்டு பூங்கா: டிக்கெட் எவ்வளவு? முழு விவரம் இதோ!

Published On:

| By Selvam

சென்னை கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 7) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னர் ஒரு சங்கத்தின் கட்டுப்பாட்டில் தனியாரிடமிருந்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிலத்தில் சென்னை மாநகர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலினால் 27.02.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

ADVERTISEMENT

 

இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில்,

ADVERTISEMENT

அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது.

இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு  ரூ.75 எனவும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50 சிறியவர்களுக்கு ரூ.50 எனவும் கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50 சிறியவர்களுக்கு ரூ.40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்பட கருவிகளுக்கு (camera) ரூ.100 எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) ரூ.5000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நுழைவுக்கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது எனவும் இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை https://tnhorticulture.in/kcpetickets பெறலாம்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘பிக் பாஸ் – 8’: முதல் நாளே இப்படியா? – விஜய் சேதுபதி செய்த ‘தக் லைஃப்’ மொமண்ட்ஸ்!

மேலே ஏவுகணை பறக்குது, கீழே எப்படி விளையாட முடியும்? – மோகன் பகான் அணி சந்தித்த பிரச்னை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share