பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் மலையேறி சென்று விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 29) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “தீரன் சின்னமலையின் பெயரை சொன்னாலே, இப்போதும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படும்.
‘சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை’ என்று சொல்லி இன்றைக்கும் வரலாற்றில் பெரும் மலையாக வாழ்கிறவர் தான் தீரன் சின்னமலை. விடுதலை உணர்வுடன் போராடியதற்காக சிறை பிடிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டவர் தீரன் சின்னமலை.
அவரைப் போன்றவர்களின் உயிர்த் தியாகத்தால் தான் இந்திய நாடு விடுதலை பெற்றது. அவருடைய பெயரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வைப்பதற்கு முதலில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தீரன் சின்னமலை பெயரில் கல்லூரி அமைக்க 28 ஏக்கர் நிலம் வாங்கியும் அனுமதி கிடைக்காமல் இருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், இதே மேற்கு மண்டலத்திலிருந்து 9 பேர் அமைச்சர்களாக இருந்தும் அனுமதி கிடைக்கவில்லை. கல்லூரி கட்டியதற்காக இந்த நிலத்தின் வகையை கூட மாற்றிக் கொடுக்கவில்லை.
நம்முடைய திமுக ஆட்சி வந்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன், தீரன் சின்னமலை கல்லூரி தொடர்பான அறக்கட்டளை நிர்வாகிகளை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்து இந்தக் கோரிக்கையை என்னிடத்தில் வைத்தார்.
நான் நேரடியாக கண்காணித்து, நில “வகை”-யை மாற்றிக்கொடுத்து கல்லூரி கட்டுவதற்கு இருந்த முதல் தடையை நீக்கினேன். பிறகு, உயர்கல்வித் துறை அனுமதி, கட்டட அனுமதி எல்லாவற்றையும் வழங்க ஆணையிட்டு அதையும் நிறைவேற்றிக் கொடுத்தோம்.
இன்றைக்கு இந்தப் பகுதியில் இருக்கின்ற பெண்களுக்கான கல்லூரியாக இது மாறியிருக்கிறது. இதை நேரில் வந்து திறந்து வைக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால், என்னுடைய உடல்நிலை காரணமாக, நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்பாக சொல்லிவிட்டதால், காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்திருக்கிறேன்.
இந்தக் கல்வி வாய்ப்பை எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாக பெண் பிள்ளைகள், கல்லூரிக் கல்வி உயர்கல்விகள் என்று நிறைய படிக்கவேண்டும்
பெண் கல்வியை ஊக்குவிப்பதற்குதான் அரசு பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக்கு வர மாணவிகளுக்கு நம்முடைய அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தருகிறோம்.
ஆட்சியில் பெண்களுக்கு விடியல் பயணம் என்று கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுத்திருக்கிறோம்!
என்னுடைய கனவெல்லாம், தமிழ்நாட்டு மாணவர்களும் மாணவிகளும் உலகம் எல்லாம் சென்று சாதிக்கவேண்டும். நீங்கள் சாதிப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடையவேண்டும்!
பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் எல்லாம் மலையேறி சென்றுவிட்டது. பெண்கள் உலகை ஆளுகின்ற காலம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
