முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே 27) கொளத்தூரில் ரூ.118.33 கோடி செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். mk stalin inaugurates 118 crore projects
மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள்!
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ராஜாஜி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் கொளத்தூர், பழனி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள மூன்று மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். mk stalin inaugurates 118 crore projects
இந்த மூத்தக் குடிமக்கள் உறைவிடங்களில் வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், உணவருந்தும் அறை, பல்நோக்கு அறை, சமயலறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ மையம், நடைபாதை வசதிகளுடன் கூடிய சிறு பூங்கா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் திருக்கோயிலுக்கு ஓதுவார் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி எஸ்.எஸ்.பிரியவதனாவுக்கு ஸ்டாலின் பணி நியமன ஆணையினை வழங்கினார்.
மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள்!
அதனைத் தொடர்ந்து, ஜி.கே.எம். நகர் பிரதான அரிச்சந்திரா மைதானத்தில்
சாலை அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 350 மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள், 131 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
கொளத்தூர், ஜவகர் நகரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு கண் சிகிச்சை மையத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 100 பயனாளிகளுக்கு இலவசமாக கண்ணாடிகளை முதலமைச்சர் வழங்கினார். mk stalin inaugurates 118 crore projects
குளம் மற்றும் பூங்கா திறந்து வைத்தல்!
தொடர்ந்து, ஜி.கே.எம். 24A தெருவில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் 2 கோடியே 89 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் ஜெனரல் குமாரமங்கலம் குளத்தினை ஆழப்படுத்தி, புதிதாக குளக்கரை, நடைபாதை, சுற்றுச்சுவர் மற்றும் பெருநகர சென்னை
மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 1 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் இறகுப்பந்தாட்ட விளையாட்டுத்திடல், யோகா மேடை, செயற்கை நீரருவி, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்!
பின்னர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 318 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்து, புத்தகப் பை. புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பெரியார் நகர் 4-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு 1 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை முதலமைச்சர் வழங்கினார்.
மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் திறந்து வைத்தல்!
குமரன் நகர் 80 அடி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கொளத்தூர் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாச்சலம் நகர் உபரிநீர் கால்வாயினை 91 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாயை முதலமைச்சர் திறந்து வைத்தார். mk stalin inaugurates 118 crore projects

இந்த கால்வாயினை திறந்த வெளியாகவும், மூடிய வடிவிலும் அகலப்படுத்தி விநாடிக்கு 1,000 கன அடி உபரிநீர் செல்லும் வகையில் புதிய கான்கிரீட் கால்வாயாக அமைக்கப்பட்டு உள்ளது.
இப்பணியினால் யுனைடெட் காலனி, செல்வம் நகர், சிவானந்தா நகர், ராமலிங்கம் நகர், நாகாத்தம்மன் கோயில் பகுதி, குமரன் நகர் மற்றும் சந்திர பிரபு காலனி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும். mk stalin inaugurates 118 crore projects
இத்திட்டத்தில் இணை கால்வாய்களையும் சேர்த்து மூடிய வடிவிலான புதிய கான்கிரீட் கால்வாய் 2170 மீட்டரும், திறந்தவெளி கான்கிரீட் கால்வாய் மற்றும் கம்பி வேலி 1130 மீட்டரும், வெள்ள தடுப்பு சுவர் 70 மீட்டரும் மற்றும் கால்வாயின் மீது புதிதாக 9 சிறு பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
