டி.எம்.எஸ் சாலையைத் திறந்து வைத்தார் முதல்வர்

Published On:

| By Monisha

டி.எம். சௌந்தரராஜன் என்று பெயர்சூட்டப்பட்டுள்ள சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 24) திறந்து வைத்தார்.

மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, டி.எம்.சௌந்தரராஜன் சாலை என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய பெயர் பலகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழா சிறப்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 5 மணியளவில் இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது.

திரைப்படத்தில் பின்னணி பாடகராக வலம் வந்த டி.எம்.சௌந்தரராஜன் மதுரையில் பிறந்து, இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசைஞானத்தை வளர்க்கத் தொடங்கினார். 1950 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடல் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர்.

ADVERTISEMENT
mk stalin inagurate T.M. soundararajan street

அரை நூற்றாண்டு காலமாக தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற பாடகராகத் திகழ்ந்த இவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சினிமா பாடல்கள் மட்டுமல்லாது பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே இவரது காந்த குரலில் இறுதியாக ஒலித்த பாடல் ஆகும்.

ADVERTISEMENT

1970 ஆம் ஆண்டு “ஏழிசை மன்னர்” என்ற பட்டம் கலைஞரால் வழங்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு கலைமாமணி, 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ ஆகிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.

இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது மறைவைத் தொடர்ந்து, டி.எம்.சௌந்தரராஜன் வசித்து வந்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இன்று அவருடைய நூற்றாண்டு விழா சிறப்பாக, அவர் வசித்து வந்த சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜன் சாலை எனப் பெயரிடப்பட்ட பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

மோனிஷா

அஜித்குமார் தந்தை மறைவு: ஸ்டாலின் இரங்கல்!

தந்தையின் இறுதிசடங்கு: அஜித் வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share