உண்மையச் சொல்லுங்க – அமைச்சர்களை வறுத்தெடுத்த ஸ்டாலின்

Published On:

| By Kavi

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களநிலவரத்தைப் பற்றிய உண்மையைக் கூறுமாறு அமைச்சர்களிடம் கூறியிருக்கிறார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 25) பிரச்சாரம் செய்து வருகிறார். காலை 10 மணி முதல் பிரச்சாரம் செய்துவரும் ஸ்டாலின் முன்னதாக, நேற்று இரவு ஈரோட்டுக்கு வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள சக்தி சர்க்கரை ஆலை விருந்தினர் மாளிகைக்கு, நேற்று இரவு 10.40 மணிக்கு வந்த ஸ்டாலின், அங்கு தங்கினார்.

முதலமைச்சர் வந்ததை அறிந்த அமைச்சர்களும், எம்.பி.களும் எம்.எல்.ஏ.களும் அவரைப் பார்ப்பதற்குத் தயாராக இருந்தனர்.

யார் யார் அவரைச் சந்திப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதன் முடிவில், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க வேண்டியதில்லை; அமைச்சர்கள் மட்டும் சந்திக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

முதலமைச்சரைச் சந்திக்க அமைச்சர்கள் மட்டும் வந்தால் போதும்; மற்றவர்கள் வரவேண்டியதில்லை என்பதை மூத்த அமைச்சர்கள் தெளிவுபடுத்தவும், காத்திருந்த பலர் அங்கிருந்து நகர்ந்தனர்.

அதையும் மீறி சில எம்.எல்.ஏ.களும் சில மாவட்டச் செயலாளர்களும் ஸ்டாலினைப் பார்ப்பதற்காகச் சென்றனர்.

மூத்த அமைச்சர்கள் முதல் இளநிலை அமைச்சர்கள் வரை அனைவரும் கட்சித் தலைவரைப் பார்த்து, சால்வை அணிவித்தனர்.

பலரும் சுமார் ஒரு நிமிடம் தங்கள் பொறுப்புப் பகுதியின் நிலவரம் குறித்து எடுத்துச்சொன்னார்கள். சிலர் சால்வையை அணிவித்துவிட்டு அரை நிமிடச் சந்திப்பாக வெளியே வந்ததும் நடந்தது.

அப்படிப் போனவர்களிடம் தன் மனதுக்குத் தோன்றியவர்களிடம், திடீரென, உங்கள் பகுதி நிலவரத்தில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும்? அ.தி.மு.க.வுக்கு எவ்வளவு போகும் என ஸ்டாலின் கேட்டுள்ளார்.

பதில் சொன்ன எல்லாரும், சொல்லிவைத்தாற்போல, ஆகா ஓகோ, சிறப்பு தலைவரே என்கிறபடியே பதில் கூறியிருக்கிறார்கள்.

ஆனாலும், மொத்தமாக ஈரோடு தொகுதி வெற்றி எப்படி இருக்கும், எவ்வளவு வாக்குகள் முன்னிலையில் வருவோம், உங்கள் பூத்தில் எவ்வளவு வாங்குவீங்க என ஸ்டாலின் விடாமல் கேட்டுள்ளார்.

அதற்கு, சில அமைச்சர்கள், “ அதிக அளவு வித்தியாசத்தில் நாம்தான் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி. மக்கள் எழுச்சியாக இருக்கிறார்கள்; தலைவரின் ஆட்சிதான் காரணம். ” என்றெல்லாம் ஏகமாகப் பாராட்டிப் பேச…

இடைமறித்த ஸ்டாலின், “ இப்படித்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சொன்னீங்க. என்னை சந்தோசப்படுத்துறதுக்காகச் சொல்லாதீங்க. உண்மையைச் சொல்லுங்க.” என்று பழையதை நினைவூட்டியுள்ளார்.

ஆனாலும், ”தேர்தல் வேலைகளைப் பாருங்க. நாம சிறப்பான வெற்றியைப் பெறுவோம்.”என ஸ்டாலின் அவர்களை உற்சாகப்படுத்தி அனுப்பிவைத்துள்ளார்.

வணங்காமுடி

பொன்னியின் செல்வன் 2: பார்த்திபன் சொன்ன தகவல்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்க: அன்புமணி ராமதாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share