சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 29) காவல்துறை மானியக்கோரிக்கையின் போது, 102 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். Stalin gives important announcement
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ…
1.சென்னை, இந்தியப் பெருநகரங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகத் திகழ்வதாலும்,மிக முக்கிய நபர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் வருகையின்போது, பாதுகாப்பினை
பலப்படுத்தவும், வழிக்காவல் பணி, நிரந்தர பாதுகாப்பு போன்றவற்றிற்கென ஆளிநர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் நியமிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, தேவையான புதிய பணியிடங்கள் இரண்டு கட்டங்களாக ரூபாய் 21.02 கோடி செலவில் உருவாக்கப்படும். இதற்கான முதற்கட்ட செலவினம் ரூபாய் 10.51 கோடி ஆகும்.
2.நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கிட ஏதுவாக, சிலைத் தடுப்புப் பிரிவு, இணையவழிக் குற்றப் பிரிவு, இரயில்வே காவல் (சென்னை மற்றும் திருச்சி இரயில்வே மாவட்டங்கள்) ஆகியவற்றிற்காக தலா ஒன்று வீதம் 4 சட்ட ஆலோசகர் பதவிகள் ரூபாய் 24 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
3.சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்படவும், அன்றாட அவசர நிலைகளை கையாளவும், பொது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில், 280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக மாற்றப்படும்.
இதன்மூலம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும், சட்டம் ஒழுங்கு, சாதி, வகுப்புவாத பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் முடியும். இதற்கான தொடர் செலவினம் ரூபாய் 1.18 கோடி ஆகும்.
4.ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் 3000-லிருந்து 4000 ஆக உயர்த்தப் படுவதுடன், மாதாந்திர பதக்கப் படி ரூபாய் 400-லிருந்து ரூபாய் 500 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூபாய் 4.80 கோடி ஆகும்.
5.இருப்புப் பாதை காவல் நிலையங்களின் பணிகளை ஒருங்கிணைத்து குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், கைதிகளின் வழிக்காவல் குறித்த தகவல்களை மற்ற மாநிலங்களுடன் பகிரவும், இதன்மூலம் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், சென்னையில் உள்ள தலைமையிடத்தில் தேவையான பணியிடங்களுடன், புதிய தொலைத் தொடர்பு சாதனங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தலைமை கட்டுப்பாட்டு அறை, வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பிரிவு மற்றும் மோப்ப நாய்ப் பிரிவு ஆகியவை ரூபாய் 1.14 கோடி செலவில் அமைக்கப்படும். Stalin gives important announcement
