டிஎம்கே ஃபைல்ஸ்: அண்ணாமலை மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு!

Published On:

| By Selvam

பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் தேவராஜன் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ஆம் தேதி திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியல் வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் 2006-11 திமுக ஆட்சியில் சென்னையில் மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்ட பணிகளுக்காக டெண்டர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு கிடைக்க சாதகமாக செயல்பட்டு ரூ.200 கோடி லஞ்சம் வாங்கினார் என்று குற்றம்சாட்டினார்.

அண்ணாமலைக்கு எதிராக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவதூறு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்தநிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தேவராஜன் முதல்வர் ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், மெட்ரோ டெண்டர் பணிக்காக முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் வாங்கியதாக பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான கருத்தை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது கருத்து உள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவானது நீதிபதி உமா மகேஸ்வரி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது மனு தொடர்பான விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அண்ணாமலை தரப்பில் பதில் வாதம் எடுத்துவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

தமிழரசிக்கு வந்த எதிர்ப்பு தப்பித்த கயல்விழி

யார் யாருக்கு எந்தத் துறை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share