அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று (மார்ச் 26) காலமானார். அவருக்கு வயது 76. Stalin Edappadi Palanisamy condolence
ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன். ஆரம்பத்தில் அதிமுகவில் பயணித்த இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். 2015-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். சமீபத்தில் அதிமுக அமைப்பு செயலாளராக கருப்பசாமி பாண்டியன் நியமிக்கப்பட்டார். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து விலகிருந்தார். இந்தநிலையில், இன்று காலை தூக்கத்திலேயே கருப்பசாமி பாண்டியன் உயிர் பிரிந்தது.

அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், ”முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
கருப்பசாமி பாண்டியன் அவர்கள் 1977-இல் ஆலங்குளம், 1980-இல் பாளையங்கோட்டை, 2006-இல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.
நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, “கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவருமான அண்ணன் கருப்பசாமி பாண்டியன், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கட்சி பணிகளை ஆற்றியவர்.
அதே போல், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர். 1998-ல் திருநெல்வேலியில அதிமுக வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதற்கு, இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை.
அண்ணன் கருப்பசாமி பாண்டியனை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Stalin Edappadi Palanisamy condolence