நாடாளுமன்ற தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்றது. stalin delimitation meeting resolution
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
ஜனநாயகத்தின் உள்ளடக்கம் மற்றும் தன்மையை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறை பணியை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். இதனால் அனைத்து மாநிலங்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் இதுதொடர்பாக ஆலோசிக்கவும், விவாதிக்கவும், பங்களிக்கவும் முடியும்.
அரசியலமைப்பு திருத்தங்கள் 42, 84 மற்றும் 87வது பிரிவின் படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களை பாதுகாக்கவும், தேசிய மக்கள்தொகை நிலைப்படுத்தல் இலக்கு இன்னும் அடையப்படாததாக இருப்பதால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் முடக்கம் மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் மற்றும் அதன் விளைவாக மக்கள்தொகை பங்கு குறைந்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு எல்லை நிர்ணய நடவடிக்கையையும் மேற்கொள்ள மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை எதிர்கொள்ள, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழு அமைக்கப்படும்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மையக் குழு தொகுதி மறுவரையால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான அறிக்கைகளை பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கும்.
இந்தக் கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சினை தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டு வந்து, மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.