சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே பயணச்சீட்டு என்ற திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டத்தை நடத்தினார்
அப்போது பேசிய அவர்,
”சென்னை நகரப் போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளைத் திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது.
அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்குப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும்.
பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாகக் கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவிற்குச் சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும்.
எனவே பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது தனது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டுக் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
இதில் நான் குறிப்பாக உங்களுக்குத் தெரிவிக்க விரும்புவது பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாகப் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில்,
அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்றும் இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் ஒரு முறை இந்த அமைப்பின் தலைவர் என்ற முறையிலே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்” என்று பேசினார்.
மோனிஷா
