கலைஞரின் மருமகனும் முரசொலி பத்திரிகையின் ஆசிரியருமான முரசொலி செல்வம் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடல் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக எடுத்து வரப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், முரசொலி செல்வம் மறைவு குறித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
“கலைஞரின் நிழலில் வளர்ந்தவர் செல்வம்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத நிலையில், அண்ணன் முரசொலி செல்வம் எனும் திமுகவின் கொள்கைச் செல்வத்தை, திராவிட இயக்கத்தின் படைக்கலனை இழந்துவிட்டோம். அவரை இயற்கையிடம் பறிகொடுத்துவிட்டுத் தவித்து நிற்கிறோம்.
உங்களில் ஒருவனான எனக்கு உடன்பிறப்புகளான நீங்களும், உடன்பிறப்புகளான உங்களுக்கு உங்களில் ஒருவனான நானும் ஆறுதல் தெரிவித்து நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டிய வேதனை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
கலைஞரின் தமக்கை மகனாக – மனசாட்சியாகத் திகழ்ந்த அரசியல் மேதை முரசொலி மாறனின் தம்பியாகப் பிறந்தவருக்குப் பன்னீர்செல்வம் என்று சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் பெயர் சூட்டியவர் கலைஞர். பெற்றெடுத்த தாய் போல, பெயர் சூட்டிய கலைஞரே அவருக்கு இரண்டாம் தாயாக இருந்து அரவணைத்து வளர்த்தார்.
கலைஞரின் நிழலில் வளர்ந்த செல்வம், கலைஞரின் மூத்த பிள்ளை முரசொலி என்கிற கொள்கை முழக்கப் பாசறையில் கலைஞரிடமும் தன் அண்ணனும் அரசியல் மேதையுமான முரசொலி மாறனிடமும் பயிற்சி பெற்றார்.
எப்போதும் அவர் எனக்கு மூத்த அண்ணன்!
அந்தப் பயிற்சியை அவர் எங்களுக்கும் தந்தார். செல்வம் பிறந்தபோதே கலைஞரின் அன்னை – எங்கள் பாட்டி அஞ்சுகம் அம்மையார், கலைஞருக்கு பெண்பிள்ளை பிறந்தால், செல்வத்துக்கு மணம் முடித்து வைக்கவேண்டும் என்று விரும்பியவர்.
அன்னையின் அன்பு ஆணையை நிறைவேற்றும் வகையில்தான், என் தங்கை பிறந்தபோது, செல்வி என்று பெயர் சூட்டினார் கலைஞர். செல்வத்துக்கேற்ற செல்வி என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணமல்ல. சொர்க்கத்தைவிடவும் சுகமான கொள்கை உரமிக்க குடும்ப உறவுகளால் நிச்சயிக்கப்பட்டு, இயக்கமே குடும்பம் என வாழும் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளால் நிறைவேறியது.
அண்ணா தலைமையில் நடந்தேறிய – பெரியாரும், ராஜாஜியும், காயிதே மில்லத்தும் தமிழ்நாட்டின் முன்னணித் தலைவர்களும் ஒருசேர மேடையேறி மனதார வாழ்த்திய கலைஞர் குடும்பத்தின் சுயமரியாதைத் திருமணம் அது.
கலைஞரின் மருமகன், என் தங்கையின் கணவர் என்ற முறையில் எனக்கும் என் உடன்பிறந்தவர்களுக்கும் அவர் மாமா – அத்தான் என்ற உறவு முறையில் ’குட்டி அத்தான்’ என்று கூப்பிடுவது வழக்கம் என்றாலும், எப்போதும் அவர் எனக்கு மூத்த அண்ணனாகவே இருந்தார்.
இயக்கப் பணிகளிலும் இயக்கத்தின் கொள்கை முரசமான முரசொலி பணியிலும் நான் காட்டிய ஆர்வத்தை உணர்ந்து என் விரல்பிடித்து வழிகாட்டியவர் முரசொலி செல்வம் தான். எனக்கு நேரம் வாய்க்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்து அரசியல் செய்திகளை அறிந்துகொள்வேன். அவருக்கு அண்ணாவிடம் நிறைய பற்று உண்டு. அண்ணாவை அவர் அடிக்கடி சந்தித்துப் பேசுவதும் உண்டு. அண்ணா சொன்ன செய்திகளை – வரலாற்றுத் தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். அதுபோல கலைஞரிடம் பேசியதையும் பகிர்ந்துகொண்டு இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.
பள்ளி, கல்லூரியில் படித்த நேரம் போக, கலைஞரின் பிள்ளைகள் எல்லோரும் அவரின் மூத்த பிள்ளையான முரசொலியின் மடியில்தான் தவழ்ந்தோம். கலைஞரின் நேரடிப் பார்வையில், அவரது மனசாட்சியான முரசொலி மாறன் பொறுப்பில் முரசொலி அச்சாகி வந்தது. அச்சிட்ட இதழ்களைப் பார்சல் கட்டி, வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை நாங்கள் மேற்கொள்வோம். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த செல்வம் பகுதி நேரமாக முரசொலியில் பணியாற்றி, கட்டுரைகள் – பெட்டிச் செய்திகள் எழுதிக் கொண்டிருந்தார்.
என்னையும் ஊக்கப்படுத்தினார். திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், கடிதங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, ‘தினபலன்’ என்ற தலைப்பில் தொகுத்து வந்தேன். அது முரசொலியில் தொடர்ந்து வெளிவந்தது. நான் எழுதித் தருவதை முரசொலி ஆசிரியர் குழுவினர் வடிவமைப்பதை ஆர்வத்துடன் கவனித்து, அதனையும் கற்றுக்கொள்ள விரும்பியபோது, வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லிக் கொடுத்த ஆசான் முரசொலி செல்வம் தான்.
“தலைப்புச் செய்தி, தலையங்கம், துணைத் தலைப்புகள், சிறு தலைப்புகள், கருத்துப்படங்கள், படங்களை எந்தளவுக்கு வெளியிட வேண்டும், முதல் பக்கத்துக்கு உள்ள முக்கியத்துவம், கடைசி பக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியச் செய்திகள், பெட்டிச் செய்திகள், கட்டுரைகள், கட்டுரைக்கான துணைத் தலைப்புகள், ஒவ்வொருவர் பெயரையும் எப்படி வெளியிடவேண்டும்… இப்படி ஏராளமான சவால்களைச் சொல்லித் தந்து, ஒரு பக்கத்தை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று சொல்லித்தந்தார் செல்வம்” என்று என்னுடைய தன் வரலாற்று நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
திமுகவிற்கு துணை நின்ற செல்வம்
என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் செல்வம் எப்படித் துணை நின்றாரோ அப்படியேதான் கலைஞருக்கும் அவர் தலைமையிலான திமுகவிற்கும் துணை நின்றார். தோள் கொடுத்தார். நெருக்கடிநிலைக் காலத்தில் திமுகவும் கலைஞரும் கடும் சோதனைகளை எதிர்கொண்டபோது முரசொலி மாறனும் நானும் திமுக முன்னோடிகளும் மிசா சிறைவாசம் எனும் கொடுமைக்குள்ளானோம்.
தனிமைச்சிறை போன்ற சூழலில் இருந்த கலைஞருக்குத் துணையாக இருந்து முரசொலி பணிகளிலும் திமுகவின் செயல்பாடுகளிலும் தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவர் செல்வம். அதிமுக ஆட்சியில் இயக்கமும் முரசொலியும் எதிர்கொண்ட சவால்களின்போதும் கலைஞரின் கட்டளைகளை நிறைவேற்றும் செயல்வீரராக இருந்தவர் செல்வம்.
திருச்செந்தூர் திருக்கோயிலின் அறநிலையத்துறை அதிகாரியின் சந்தேக மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷன் அறிக்கையை அதிமுக அரசு வெளியிடாமல் காலங்கடத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் அதனை வெளியிட்டார்.
மறைத்து வைத்த படுபாதகங்கள் வெளிப்பட்ட அதிர்ச்சியிலும், அறநிலையத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட உண்மை வெளிப்பட்ட ஆத்திரத்திலும் அன்றைய ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி முரசொலி செல்வத்தை, சட்டமுறைகளுக்குப் புறம்பாகக் கைது செய்து, அலைக்கழித்தனர்.
கலைஞரின் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர்!
அந்த நிலையிலும், எந்த நிலையிலும் அவர் நெஞ்சுரத்துடனேயே நெருக்கடிகளை எதிர்கொண்டார். வி.பி.சிங் பிரதமரானபோது முரசொலி மாறன் ஒன்றிய அரசில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதனால், அவர் வகித்த முரசொலியின் ஆசிரியர் பொறுப்பை யார் ஏற்பது என்றபோது, தன் மூத்த பிள்ளையாகிய முரசொலி எனும் திராவிடச் செல்வத்தை செல்வத்திடம் ஒப்படைத்தார் கலைஞர். அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் முரசொலியை மேலும் மேலும் கூர்தீட்டிய படைக்கலனாக மாற்றியவர் முரசொலி செல்வம்.
தாய் போன்ற கலைஞரிடமும், தன் அண்ணன் முரசொலி மாறனிடமும் பெற்ற பயிற்சியின் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதை ஆழமான சிந்தனை கொண்ட அவருடைய ஒவ்வொரு எழுத்தும் உணர்த்தும். முரசொலியின் ஆசிரியராக செல்வம் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கு பணிச்சுமைகள் கூடிவிட்டன. அவரிடம் கலைஞர் கடுமையான வேலைகள் வாங்குவதை நானே பார்த்திருக்கிறேன். இரவில் நெடுநேரம் பணிகள் தொடரும்போது அவருடன் நான் பல நேரங்களில் இருந்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவு உதவியிருக்கிறேன். தன்னுடைய பணியை முடித்துவிட்டு, வடிவமைப்பு செய்து, அச்சுக்கு அனுப்பச்சொல்லிவிட்டு அவர் வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடும்.
அதிகாலையில் முதல் வேலையாக முரசொலியைப் படிக்கும் வழக்கம் கொண்ட கலைஞர், அதில் ஏதேனும் சிறு பிழைகள் – குறைகள் இருந்தாலும் உடனே செல்வத்திற்குப் போன் செய்துவிடுவார். கோழித் தூக்கம் போல அரைகுறைத் தூக்கத்துடன் செல்வம் எழுந்து, விரைவாக வருவார். ஏதாவது அச்சுப்பிழை உள்ளதா என்பதையும் அவர் கவனித்து, கலைஞருக்கு விளக்கமளித்துவிட்டு, பிழைகள் இருப்பின் அதனைச் சரிசெய்து முரசொலியில் வெளியிடச் செய்வார்.
அமைதியாகத் தோற்றமளித்தாலும் ஆழத்திலிருந்து பீறிட்டு அடிக்கும் நெருப்புக் குழம்பைக் கக்கும் எரிமலை அவருடைய எழுத்துகள். அவருடைய கைவண்ணத்தில் உருவான சின்ன பெட்டிச் செய்திகூட ‘அக்கினிக் குஞ்சு’ போல அதிகாரக் காடுகளைப் பற்றவைத்து – பதற வைத்திருக்கிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளில், அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்வுடன் முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், அடுத்தநாளே முரசொலி தடையின்றி வெளிவருவதில் முழுமூச்சுடன் செயல்பட்டு, கலைஞரின் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர்.
சிலந்தி வலையில் சிக்காத அரசியல்வாதிகள் இல்லை!
அதிமுக ஆட்சியில் முரசொலியில் வெளியான செய்திக்காகக் கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் வகையில், இந்தியாவின் எந்த மாநிலச் சட்டமன்ற வரலாற்றிலேயேயும் இல்லாத வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் கூண்டு கொண்டுவரப்பட்டு, அதில் ஏற்றப்பட்டார் செல்வம். இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கலைஞரின் ஆலோசனைப்படி கருப்புச் சட்டை அணிந்து கூண்டிலேறிய கொள்கைச் சிங்கம் அவர்.
மன்னிப்பு கேட்க மறுத்த அசல் மனோகரனாக, பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்த கருத்துரிமைப் போராளி. அதனால்தான், ’கூண்டு கண்டேன் – குதூகலம் கொண்டேன்’ என்ற தலைப்பில் முரசொலியில் தன் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதிய கலைஞர், செல்வத்தைப் பெருமிதத்துடன் பாராட்டினார்.
சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் பின்னிய எழுத்துவலையில் சிக்காத அரசியல் எதிரிகள் இல்லை. எவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல், அவர்களின் கொள்கை முரண்களைக் கூர்மையான வாதங்களுடனும், யாரை விமர்சிக்கிறாரோ அவர்களேகூட ரசிக்கும் வகையிலான நையாண்டி நடையிலும் செல்வம் எழுதிய கட்டுரைகள் அரசியல் இயக்கங்களில் உள்ளவர்களுக்கும், ஊடகத் துறையில் இருப்போருக்கும் வழிகாட்டிகளாகும்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக, முரசொலியின் ஆசிரியராக செல்வம் பணியாற்றிய நிலையில்தான், 2017-ஆம் ஆண்டு முரசொலியின் பவளவிழாவைக் கொண்டாடினோம். மூத்த பத்திரிக்கையாளர்கள் பலரும் அந்த விழாவில் பங்கெடுத்து, இதழியல் துறையில் முரசொலியின் பங்களிப்புகளைப் பாராட்டிப் பேசினர்.
அந்த விழாவில் என்னுடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட முரசொலி செல்வம், அதன்பிறகு, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அரங்கேறிய ‘முரசொலி: சில நினைவலைகள்’ நூல் வெளியீட்டில் என்னுடன் மீண்டும் மேடையைப் பகிர்ந்து கொண்டார். “தோண்டத் தோண்டச் செய்திப் புதையல்கள் – தேடத் தேடக் கழக மறவர்களின் தியாக வரலாறுகள் – அப்பப்பா…. எத்தனை எத்தனை நெருப்பாற்று நீச்சல்கள்” என அவர் அன்று பேசியது இன்றும் நெஞ்சைவிட்டு அகலவில்லை.
தலைமைக்கும் தொண்டர்களுக்குமான பாலமாகத் திகழ்ந்தவர்!
கடந்தகால வரலாற்று ஆவணங்களுடன், நிகழ்கால உண்மைத் தரவுகளை, எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் எழுதும் ஆற்றல் பெற்ற அவருடைய உருவாக்கத்தில் வெளியான ‘முரசொலி: சில நினைவலைகள்’ என்ற தொகுப்பு, ‘இன்றைய செய்தி – நாளைய வரலாறு’ என்ற அடைமொழிக்கேற்ற கருத்துப் பெட்டகம்.
அதற்கு உங்களில் ஒருவனான நான் எழுதிய அணிந்துரையில், “கழகத்துக்கு இது பொக்கிஷம். மூத்தவர்களுக்கு இது பழைய நாட்குறிப்பு. இளைஞர்களுக்கு எதிர்கால வழிகாட்டி. ஊடகத்துறை நண்பர்களுக்கு இது பாடப்புத்தகம். புலனாய்வுப் பத்திரிகையாளர்களுக்கு இது ரகசியங்களின் தொகுப்பு. மொத்தமாய்ச் சொல்ல வேண்டுமானால், கலைஞரின் இன்னொரு நெஞ்சுக்கு நீதி” என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
சர்க்காரியா கமிஷன் என்ற பெயரில் திமுகவிற்கு எதிரான அவதூறுகளை அரை நூற்றாண்டுகாலமாகப் பரப்பிக் கொண்டிருக்கும் அரைவேக்காடுகளின் செவிப்பறை கிழியும் வகையில், அந்தக் கமிஷன் எப்படி அமைக்கப்பட்டது, அதன் விசாரணை எப்படி நடைபெற்றது, திமுகவின் மீது பொய்க் குற்றம்சாட்டியவர்கள் விசாரணைக் கமிஷன் முன் அடித்த பல்டிகள் என அத்தனையையும் தொடர் கட்டுரைகளின் வாயிலாகத் தோலுரித்துக் காட்டினார் செல்வம்.
கொள்கைரீதியான எதிர்ப்புகளுடன் ஒருபோதும் சமரசம் ஆகாதவர். அரசியல் கடந்து அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவர். அதிகாரப் பதவிகள் மீது எந்தவித நாட்டமும் இல்லாமல், அரசியல் விளம்பரங்களுக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தனை பணிகளையும் பொறுப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றிய பேராற்றலுக்கு சொந்தக்காரர்.
கலைஞரின் மனதறிந்து செயலாற்றியவர். தலைமைக்கும் தொண்டர்களுக்குமான பாலமாகத் திகழ்ந்தவர். இளைஞரணி தொடங்கி இன்றைய நிலை வரை என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் முரசொலி செல்வம் இருக்கிறார்.
கண்ணீரைத் தவிர என்னிடம் என்ன சொற்கள் இருக்கின்றன?
என்னைப் பெற்றெடுத்த கலைஞர் – தயாளு அம்மையாரைப் போல நான் மதித்து, என் பிறந்தநாளில் வாழ்த்து பெறுவது செல்வம் அவர்களிடம் தான். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளுக்காக அவரை சந்திக்க அவரது பெங்களூரு இல்லத்துக்குச் செல்வது வழக்கம்.
முதலமைச்சர் என்ற பெரும் பொறுப்பை தொண்டர்களாகிய நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் உங்களில் ஒருவனான எனக்கு அளித்தபிறகு, அவர் என்னிடம், ஒரு சிலநாட்கள் பெங்களூரு வந்து ஓய்வெடுக்கலாமே என்று கேட்டும், அவர் சொல்லி என்னால் நிறைவேற்ற முடியாமல் போனது அது ஒன்றுதான்.
என்னைச் சில நாட்கள் தன் வீட்டில் ஓய்வெடுக்க அழைத்தவர், நம்மை விட்டுவிட்டு நிரந்தர ஓய்வெடுக்கச் சென்றுவிட்டாரே. என் பொதுவாழ்வுப் பயணத்தில் துணையாய் நிழலாய் இருந்த பெருஞ்செல்வத்தை இழந்து நிற்கையில் எப்படி என்னை நானே தேற்றிக் கொள்வேன்.
தன் வாழ்வின் செல்வமாகக் கருதி ஈருடல் ஓருயிராய் வாழ்ந்த என் அன்புத் தங்கைக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்? குடும்பத்தினரை எப்படித் தேற்றுவேன்? முரசொலி குழுமத்தினருக்கு என்ன வார்த்தைகள் சொல்வேன்? செல்வத்தின் நண்பர்களுக்கும், அவருடன் பழகி மகிழ்ந்த திமுக நிர்வாகிகளுக்கும் கண்ணீரைத் தவிர என்னிடம் என்ன சொற்கள் இருக்கின்றன?
குலுங்கி அழுதிட மிச்சமிருந்த தோளை நான் இழந்தேன். திமுகவின் கொள்கைத் தூண் ஒன்றை நாம் இழந்தோம். “போய்விட்டீர்களே.. போர்முரசே.. திராவிட முரசொலித்த செல்வமே’‘ என்று எனக்குள் கதறி, என் வேதனையிலிருந்து மெல்ல மீண்டிட முயற்சி செய்கிறேன்.
எழுத்தாயுதங்களை அடுத்த தலைமுறையிடம் வழங்கியவர்!
இழப்புகளையும் எதிர்ப்புகளையும் கடந்துதான் திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது. செல்வம் மரணத்தை ஒரு கட்சிக்கோ குடும்பத்திற்கோ ஏற்பட்ட மரணமாகக் கருதாமல், சமூகநீதிப் பயண வழியில் இயற்கை உருவாக்கிய இடர்ப்பாடு என்று கருதி, துயரத்தில் துணைநின்று ஆறுதல் தெரிவித்த தோழமைக் கட்சியின் தலைவர்கள் – நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரின் கரம் பற்றி நன்றியை உரித்தாக்குகிறேன்.
கடைசி நாள் வரையிலும் கட்டுரைகளாலும் சிறுசிறு குறிப்புகளாலும் முரசொலிக்குச் செய்திகள் தந்த செல்வம், இன்றைய நாளில் முரசொலியின் தலைப்புச் செய்தியாக – தமிழ்நாட்டு ஊடகங்களில் துயர்மிகு செய்தியாக இடம்பெற்றிருப்பது காலம் எழுதிய அவசரத் தீர்ப்பின் அநியாய விளைவாகும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகால சமூக அநீதிகளுக்கு எதிராகத் தோன்றிய திராவிட இயக்கம் இத்தகைய இழப்புகளை எதிர்கொண்டு மீள்வதற்கான வலிமையை பெரியார் – அண்ணா – கலைஞர் உள்ளிட்டோர் நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.
அவர்களிடம் பயின்றவர்தான் செல்வம். முரசொலியில் தன்னுடைய கட்டுரைகளைப் போலவே திராவிட இயக்கத்தின் இளைய எழுத்தாளர்களுடைய கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவு செய்து ஊக்குவித்தவர் அவர். தொலைக்காட்சி விவாதங்களில், சமூக வலைத்தளங்களில் கருத்துரைப்போரைத் தேடிக் கண்டறிந்து இயக்கத்தின் படைக்கலனாக மாற்றியவர்.
கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களின் நெடிய பட்டியலில் ஒன்று, பாலைவன ரோஜாக்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளர், முரசொலி செல்வம். படத்தின் நாயகனான பத்திரிகையாளர் சபாரத்தினம் இறுதிக்காட்சியில் தன் உயிரை விடும் நேரத்தில், அநீதிகளுக்கு எதிரான அசைக்க முடியாத ஆயுதமான தனது பேனாவை, இளையதலைமுறைப் பத்திரிகையாளரிடம் ஒப்படைப்பார். கலைஞரின் படத்தைத் தயாரித்த செல்வமும், முரசொலி எனும் கருத்துக் களத்திற்குரிய எழுத்தாயுதங்களை அடுத்த தலைமுறையிடம் வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.
செல்வத்தின் கொள்கைப் பேனா என்றும் முரசொலிக்கும்!
அவருடைய கொள்கைப் பேனா என்றும் முரசொலிக்கும். அவர் ஊட்டிய இலட்சிய உணர்வு நம்மை நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுத்து இயக்கும். அவரது இறுதி நிகழ்வுகள் நிறைவேறிய சில நிமிடங்களில் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதில் சிக்கலுக்குள்ளான விமானம் குறித்த செய்தி அறிந்ததும், அதில் இருந்த பயணிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அக்கறையுடன் அதிகாரிகளைத் தொடர்ந்து வலியுறுத்தியதுடன், விமான பைலட் மற்றும் குழுவினரின் திறமையால் அனைவரும் பாதுகாப்புடன் கீழே இறங்கினர் என்று அறிந்ததும் அது குறித்த என் அறிக்கையை வெளியிட்டுப் பாராட்டி மகிழ்ந்தேன்.
அதுபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில் விபத்து என்ற செய்தி இரவு நேரத்தில் கிடைத்த வேகத்தில், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களைக் களத்திற்கு அனுப்பியதுடன், காயம்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவக் கட்டமைப்புகள் அனைத்தும் சீராக இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து, உயிரிழப்பினைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த நிலையிலும் கடமையை நிறைவேற்றிட கலைஞரிடம் பயின்ற முரசொலி செல்வத்திடம் பெற்ற உத்வேகத்தின் தாக்கத்தை உணர்ந்தேன். முரசொலி செல்வம் மறையவில்லை. உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலக அழகிக்கே இந்த நிலையா? மற்றொரு நடிகையுடன் அபிஷேக் பச்சனுக்கு தொடர்பு?
திருவள்ளூர் ரயில் விபத்தில் சதித்திட்டமா? – என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!