காந்தி மீது ஆளுநருக்கு வன்மம்: ஸ்டாலின் தாக்கு!

Published On:

| By Selvam

Mk stalin condemns governor ravi

கடந்த ஜனவரி 23-ஆம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மகாத்மா காந்தியின் போராட்டம் சுதந்திரத்துக்குப் பலனளிக்கவில்லை. நேதாஜி மட்டும் இல்லை என்றால் சுதந்திரம் கிடைத்திருக்காது” என்று கூறியிருந்தார்.

ஆளுநரின் பேச்சு சர்ச்சையான நிலையில், நான் மகாத்மா காந்தியை அவமதிக்கவில்லை என்று விளக்கமளித்திருந்தார்.

இந்தநிலையில், ‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று ஆளுநர் ரவி வன்மம் கலந்த நோக்கத்துடன் பேசியிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.” என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள்.

தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர்.

ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை.

‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான். Mk stalin condemns governor ravi

தேசத்தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்.

மதநல்லிணக்கத்தின் அடையாளமான காந்தியடிகள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, ஜனவரி 30-ஆம் நாளன்று மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.

காந்தி அடிகளின் பிறந்தநாளை ‘சுவச்ச பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ஆம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதனைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும், மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தி.

நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தமிழ்நாட்டின் மாண்பையும் இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம். வாழ்க காந்தியின் புகழ்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பச்சோந்தியை தோற்கடித்த ‘பல்டி’ குமார்: 9 ஆம் முறை முதல்வரான கதை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Mk stalin condemns governor ravi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share