மத்திய அரசு என்னதான் மிரட்டினாலும், உங்களால் எங்கள் மீது இந்தியை திணிக்க முடியாது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விழாவில் ஸ்டாலின் பேசும்போது, “திமுக தலைவரான பிறகும் உழைக்கிறேன், முதல்வரான பிறகும் உழைக்கிறேன். அதனால் எனக்கு பிறந்தநாள் விழா என்பது நெடுஞ்சாலை பயணத்தில் வருகிற ஸ்பீட் பிரேக் போலதான். 2026-ஆம் ஆண்டு நாம் பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கிற மேடை இது. எங்களது வெற்றிக்கு காரணம் தோழமை கட்சிகள் தான். கருத்தியல் கூட்டணி அமைத்திருக்கிற எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால், விரிசல் வராது. MK Stalin condemned Union Government
எங்களுடைய ஒற்றுமையை பார்த்து இதில் குழப்பம் வருமா என்று சிலர் எதிர்பார்த்திருக்கலாம். அவர்கள் ஆசையில் தான் மண் விழுமே தவிர கூட்டணியில் விரிசல் விழாது. என்னை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த தோழமை கட்சி தலைவர்களை நான் என்னுடைய இதய நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறேன்.
நம்முடைய ஒற்றுமை தான் தமிழ், சகோதரத்தை, கலாச்சாரத்தை ஏன் ஒட்டுமொத்த இந்தியாவை காப்பாற்றியிருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தரைமட்டத்திற்கு போயிருக்கும். தமிழகத்தின் உரிமைகளை அதிமுக கொத்தடிமைகள் பணியவைத்திருப்பார்கள்.
தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஒன்றிய அரசு செய்வதில்லை. தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது. தேசியக் கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். அவர் பெயர் தான் தர்மேந்திர பிரதான். ஆனால், அவரிடம் தர்மமே இல்லை.
பிரதமர் மோடி அவர்களே, இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீங்க. எங்களுக்கு தாய் மொழியான தமிழும், இணைப்பு மொழியான ஆங்கிலமும் போதும். எங்களுக்கு தேவைப்பட்டால் இந்தி என்ன கிரேக்கம், இலத்தீன் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் நாங்கள் கற்றுக்கொள்வோம். எங்களை என்ன மிரட்டினாலும் உங்களால் இந்தியை திணிக்க முடியாது” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
MK Stalin condemned Union Government