பெரியாரை விமர்சனம் செய்பவர்களைப் பற்றி பேசி நான் அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
சீமானின் இந்த பேச்சுக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சீமான் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை கொளத்தூரில் இன்று பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பெரியார் குறித்து விமர்சனம் செய்த சீமான் பெயரை குறிப்பிடாமல் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இன்றைக்கு யார் யாரோ பெரியாரைப் பற்றி பேசிட்ருக்கானுங்க. பெரியாரை விமர்சனம் செய்பவர்களைப் பற்றி பேசி நான் அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.
ஆனால், பெரியார் தன்னுடைய உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரையில், தமிழ் சமூகத்திற்காக, மனித உரிமைக்காக, குறிப்பாக பெண் உரிமைக்காக போராடியவர்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துபாய் கார் ரேசில் நடிகர் அஜித் பங்கேற்கவில்லை.. பின்னணி என்ன?
’11 தோல்வி பழனிசாமி’… அமைச்சர் வேலு சொல்லும் தேர்தல் கணக்கு!