தூர்தர்ஷன் லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 21) கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் இந்தி சேனலான தூர்தர்ஷன் (டிடி சேனல்) தனது லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த பிரசார் பாரதி தலைமை செயலர் அலுவலர் கெளரவ் திவேதி, “தூர்தர்ஷன் லோகோவை பாஜவுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறு. இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டிற்கு முன் இந்த லோகோவை புதுப்பித்தோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தூர்தர்ஷன் லோகோவை மாற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள். பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்.
தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: மதுரையில் குவிந்த பக்தர்கள்!